மதிப்பிற்குரிய புத்தக வாசிப்பாளர்களுக்கு என் முதல் வணக்கம். இது எனது முதல் பதிப்பு. எனக்கு ஆரம்ப காலத்திலிருந்து புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம். ஆனால் அப்போது புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததில்லை. அப்படி இருக்கையில் எனக்கு 18 வயது இருக்கும் போது எனது அப்பா தென்னாட்டு போர்கலங்கள் என்ற புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்தார். அந்த புத்தகத்தை படிக்கும் போதே என்னையறியாமல் அதனுள் மூழ்கிபோனேன். அன்றிலிருந்து எனக்குள் நல்ல வரலாற்று புத்தகங்களை படிக்க வேண்டும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் பெருக்கெடுத்தது. என்னை தூங்கவிடாமல் செய்த புத்தகம் என்று கூட கூறலாம்.
ஏனென்றால் அந்த அளவிற்கு என் மனதில் ஆழப்பதிந்து என் ஆழ்மனதை அசைத்துப் பார்த்த புத்தகம் அது. அப்படி என்னை முழுமையாக ஆட்கொண்டது அந்த புத்தக வரிகள். அந்த புத்தகத்தில் நம் தமிழ் மண்ணை ஆண்ட சேர,சோழ, பாண்டியர்கள்,மற்றும் பல்லவர்கள் போன்ற பேரரசர்களை பற்றியும், சிற்றரசர்களை பற்றியும், அவர்களின் போர்கள் பற்றியும், போர் நெறிகள் பற்றியும், தெள்ளத்தெளிவாக எழுதப்பட்டிருந்தது.
அதை முழுமையாக உள்வாங்கிய பின்பு அதில் எனக்கு சோழர்களைப் பற்றிய தேடல் மேலும் அதிகமானது. சோழர்கள் பயணத்தை தொடங்கி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவர்களை தேடிய பயணம் அன்று தான் எனக்குள் ஆரம்பமானது.
அதில் சங்க காலத்திலிருந்து சென்ற நூற்றாண்டு வரைக்கும் நம் தமிழ் மன்னர்கள் ஆற்றிய போர்கள், அவர்களுக்குள் இருந்த குழப்பங்கள், போன்றவற்றை தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற தலைப்பில் கா.அப்பாதுரை என்ற எழுத்தாளர் ஒரு காவியத்தையே படைத்திருந்தார்.
அதை படிக்க படிக்க பண்டைய தமிழர்கள் வீரத்திலும் ஆட்சியிலும் எவ்வளவு சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்ற புரிதல் என்னுள் உருவானது.
அதில் நம் தமிழ் மண்ணை சேர, சோழ, பாண்டியர்கள்,மற்றும் பல்லவர்கள் கட்டி ஆண்டிருந்தாலும் அதில் முக்கியமாக சோழர்கள் ஆட்சி தான் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தது.
நான் முதன்முதலில் படித்த வரலாற்று புத்தகம் சிவகாமியின் சபதம் அதுதான் வரலாறு பற்றிய ஆர்வத்தை என்னுள் விதைத்த முதல் காவியம். அந்த புத்தகம் பல்லவர்கள் காலத்தில் மகேந்திரவர்மன் அவர் மகன் நரசிம்மவர்மன் மற்றும் அவர்களின் படைத்தளபதி பரஞ்சோதி அவர்களைப்பற்றி அறிய பேருதவி செய்தது. பல்லவர்கள் சாளுக்கிய மன்னன் புலிகேசியை ஓட ஓட விடட்டி வாதாபியை எரித்த வரலாறு எண்ணில் ஆழமாக பதிந்தது. அடுத்து பொன்னியின் செல்வன் காவியம் ராஜராஜ சோழன் வரலாற்றை எனக்கு அறிய செய்தது. ஆனால் எத்தனையோ எழுத்தாளர்களின் கைவண்ணங்களை படித்திருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் பாலகுமாரன் எழுதிய உடையார் கங்கைகொண்ட சோழபுரம் தான்.
ஏனென்றால் அவர் எழுதிய புத்தகங்களுக்கு பின்னால் அதைப் பற்றிய ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து அந்த இடத்திற்கே நேரில் சென்று வரலாற்றுப் பூர்வ சில நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார்
என் மனதில் விடை தெரியாமல் புதைந்து கிடந்த ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு அவரின் பொன்னான வரிகள் மூலமே விடை கிடைத்தது.
அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் காலன் அவரின் உயிரை பரித்துகொண்டான். உயிர் பிரிந்தாலும் அவரின் உயிரோட்டம் உள்ள எழுத்துகளுக்கு நான் தீவிர ரசிகன் பின்னாளில் அவரையே எனது மானசீக குருவாக நினைத்துக்கொண்டேன்.
அப்போதுதிலிருந்து புத்தகம் எழுத வேண்டும் அதிலும் சோழர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு எழுத வேண்டும் என உறுதி பூண்டேன்.
ஆனால் சோழர்கள் பற்றி எழுத முற்படும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கல்கள் வந்த வண்ணம் இருந்தன.நான் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு கடந்த பத்து வருடமாக தொடர்ந்து ஏதாவது ஒரு தடங்கல் வந்தமையால் சோழர்கள் பற்றி எழுத முடியாமல் போனது.
கடைசி முயற்சியில் தான் நானும் எனது தம்பியும் சோழர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க நான்கு நாட்கள் பயணமாக சோழர்கள் வாழ்ந்த முக்கிய இடங்களுக்கு சென்றோம். அதில் திருச்சி அருகிலுள்ள கொடும்பளூர் என்ற சிற்றூருக்கு சென்றோம். அங்கு சென்றதும் உடம்பில் ஏதோ ஒருவித சிலிர்ப்பு வருவதை உணர முடிந்தது. ஏனென்றால் அங்கே சிறிய வேளார் பெரிய வேளார் இளங்கோ போன்றவர் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் படைத் தளபதிகளாகவும் இருந்தவர்கள். பெண் கொடுத்து பெண் எடுத்த தொடர்பும் இவர்களுக்கும் சோழர்களுக்கும் உண்டு.
அந்த கொடும்பளூர் ஊரைப் பார்க்கும்போது ஒரு பிரமிப்பு ஏனென்றால் தஞ்சை பெரியகோவில் எப்படியோ அதனுடைய சிறிய வடிவம்தான் இந்த கொடும்பலூரில் இருக்கின்ற கோவில்கள் அனைத்தும்.
அதன் அருகில் செல்லும் போது நம் உடம்பில் ஒருவித மாற்றத்தை உணர முடியும் நார்த்தீகனுக்கும் ஆர்த்தீக உணர்வை தோன்றச் செய்யும் இடம் அது. அங்கிருந்து தஞ்சாவூர் சென்றோம்.
நாம் ஒன்றை நோக்கி செல்லும்போது நம்மை அறியாமலேயே விதி நம்மை கூட்டிச்செல்லும் என்பார்கள்.
அப்படித்தான் தஞ்சாவூர் அரண்மனையை ஆராய்ச்சி செய்யும்போது ஒரு அருங்காட்சியகம் பற்றிய தகவல் கிடைத்தது. அதைத் தேடி சென்றோம் அங்கு சென்று சுற்றி பார்க்கையில் அருங்காட்சியகம் இருப்பதாக தெரியவில்லை. சரியென்று திரும்பும் வேளையில் தூரத்தில் இருந்து ஒரு குரல் நீங்கள் தேடிவந்தது இங்கேதான் இருக்கிறது என்றார் ஒருவர். எங்கே என்று கேட்டதற்கு இதோ என்று மடம் போன்ற ஒன்றை கை நீட்டினார். அதை பார்க்கும் போது ஏதோ இளைப்பாறும் மடம் போன்று தான் தோன்றியது.
இதுவா என்று கேட்டதற்கு இதற்கு கீழே சுரங்கம் ஒன்று உள்ளது என்று அதன் வழியைக் காட்டினார். உள்ளே சென்று பார்க்கும் போது அவ்வளவு அரிய பொக்கிஷங்கள் குவிந்து கிடந்தன. அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று தான் சொல்லவேண்டும்..
நான் முன்பே சொன்னது போல ஏதோ மாயசக்தி ஒன்று என்னை செல்வது போல தோன்றியது.
நானும் பல வருடமாக சோழர்கள் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் தள்ளிப் போய்க் கொண்டும் நாட்கள் கடந்து கொண்டும் இருந்தது. இறுதியாக உட்கார்ந்து எழுத வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுக்கும்போது துர்ரதிஷ்டவசமாக எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வர மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.
அதன் பிறகு இன்றுதான் அதற்கான வழி பிறந்திருக்கிறது. அதில் முதல் பதிவாக இதை நான் பதிவு செய்கிறேன் எனது இந்தப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த எனது தம்பி முருகன் அடுத்தபடியாக சுதாகர் அவர் எனக்காக இணையதளம் உருவாக்கி கொடுத்தார் இன்றும் இது சம்பந்தமான உதவிகளை செய்து வருகிறார். மேலும் தம்பி க. சிவசுப்ரமணியன் ஒளிப்பதிவான எனது பேச்சுக்களை எழுத்துகளாக உயிர்வடிவம் கொடுத்துவருகிறார்.