Darasuram (தாராசுரம்)

நாம் தற்பொழுது தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் பற்றிய ஆராய்ச்சி தரவுகளை இனி வரும் பதிவுகளில் காண்போம். நாங்கள் கங்கைகொண்ட சோழபுரத்தை ஆராய்ச்சி செய்த பின் அன்று மாலை தாராசுரம் நோக்கி பயணம் மேற்கொண்டோம். இரவு நேரமானதால் கும்பகோணத்தில் தங்கி இரவு பொழுதை கழித்து விட்டு மறுநாள் காலையில் தாராசுரம் செல்வதாக முடிவு எடுத்தோம். பின்னர் அங்கு உணவருந்திவிட்டு தங்கும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையின் இருபுறமும் உள்ள கடைகளில் வெங்கலத்திலான திருவிளக்கு, குதிரை, சுவாமி சிலைகள் போன்ற பொருள்கள் விற்றுக் கொண்டிருந்தனர். குதிரைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அங்கு சென்றதன் நியாபகார்த்தமாக குதிரை சிலை ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டேன்.
மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பி தாராசுரம் நோக்கி பயணித்தோம். கும்பகோணத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் தாராசுரத்தை சென்றடைந்தோம்.
இந்த தாராசுரம் கோவிலின் பெயர் ஐராவதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. ஐராவதம் என்கிற சொல் இந்திரனின் யானையை குறிக்கும். இந்திரனின் யானை சிவனை நோக்கி வழிபட்டு சாப விமோச்சனம் பெற்றதன் காரணமாக இக்கோவிலுக்கு ஐராவத்தேஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும், அதோடு மட்டுமல்லாமல் எமதர்மராஜாவும் இக்கோவிலில் உள்ள சிவனை நோக்கி வழிபட்டதாகவும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோவிலானது பிற்கால சோழரான இரண்டாம் ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த இரண்டாம் ராஜராஜன் யார் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் சோழர்களின் வழித் தோன்றல் என்ற அறிவிப்பு பலகை அங்கே வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த இரண்டாம் இராஜராஜன் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
முதலாம் ராஜேந்திர சோழனிற்க்கு பிறகு இராஜாதி ராஜன் ஆட்சிப் பொறுப்பேற்றார். அவருக்குப் பிறகு இரண்டாம் ராஜேந்திரன் சோழன் குறுகிய காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அதற்குப் பிறகு அந்த வீர இராஜேந்திர சோழனும் குறுகிய காலத்தில் இறந்து விட்டதால் சோழ நாட்டில் உள்நாட்டு குழப்பங்கள் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்த இடைப்பட்ட காலகட்டங்களில் நடந்த வற்றை பற்றி சரியாக எனக்கு தெரியவில்லை. இதனைப் பற்றி தெளிவாக ஆராய்ந்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
அக்காலகட்டத்தில் கீழ சாளுக்கிய மன்னரான விமலாதித்யனிற்கு முதலாம் இராஜேந்திர சோழனின் சகோதரியை மணம் முடித்து கொடுத்திருந்தனர். அதற்கு அடுத்தபடியாக முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கா தேவியையும் கீழே சாளுக்கிய மன்னரான இராஜராஜ நரேந்திரனுக்கு மணம் முடித்து கொடுத்திருந்தார்கள். அவர்களின் வழி வந்தவர் தான் ஒன்றாம் குலோத்துங்கன் இவர் மிக நீண்ட காலம் ஆட்சி பொறுப்பில் இருந்தார். இவர் கி. பி 1070 லிருந்து கி. பி 1122 வரையிலனா காலக்கட்டம் வரை ஆட்சி பொறுப்பில் இருந்தார். ஆனால் இவரது ஆட்சி காலத்தில் தான் சோழ பேரரசு சுருங்கியது.
முதலாம் குலோத்துங்கனிற்குபிறகு விக்ரம சோழன் கி. பி 1135 வரை ஆட்சி புரிந்தார். அதன் பிறகு இரண்டாம் குலோத்துங்க சோழன் கி. பி 1133 லிருந்துகி. பி 1150 வரை ஆட்சி பொறுப்பில் இருந்தனர்.
அதற்கடுத்ததாக இரண்டாம் இராஜராஜன் கி. பி 1146 லிருந்து கி. பி 1163 வரையிலனா காலகட்டத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றார் . இவரின் காலகட்டத்தில் தான் இந்த தாராசுரம் ஐராவத்தேஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த சோழர்களின் வழித் தொடர்புகள் பற்றிய அறிவிப்பு பலகையின் புகைப்படத்தை நான்காவது பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறேன். அதனை படித்து தெரிந்து கொண்டால் இன்னும் சற்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
இக்கோவிலானது இரண்டாம் இராஜராஜ சோழனின் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இக்கோவில் கிட்டத்தட்ட தஞ்சை பெரிய கோவிலை கட்டிய அரையன் இராஜராஜ சோழனின் காலகட்டதிற்கு நூறு ஆண்டுகளுக்கு பின் கட்டப்பட்டதால் தான் இக்கோவிலில் உள்ள சிற்பங்கள் வித்தியாசமாக உள்ளது.
இக்கோவிலானது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் வெளிப்புற வளாகங்கள் பசுமைப் புல்வெளிகளால் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலானது இதற்கு முன் சோழர்கள் கட்டிய கோவில்களை விட அளவில் சிறியதாக உள்ளது. உதாரணத்திற்கு தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற கோயில்களை விட அளவில் மிக சிறியதாக இருந்தாலும் . இக்கோவில் சிற்பக்கலையை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த கோவிலில் உள்ள சிற்பங்களுக்கும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்களுக்கும் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிய கோயில் ஆதலால் சிற்ப கலையில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும், அதன் பரிமானத்தையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
இக்கோவிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மிகவும் வளவளப்பாக மிக மிக நுணுக்கமாக பளிங்கு போன்று அமைத்துள்ளனர். இந்த கோவிலை கட்டிய சிற்பி யார் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. அடுத்த முறை அந்த சிற்பியை பற்றி ஆராய வேண்டும் என்று நினைக்கின்றேன்.
அதோடு மட்டுமல்லாமல் இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு தூண்களும் கலை பொக்கிஷங்கள் என்றே கூறலாம். அவ்வளவு நுணுக்கமாக செதுக்கி உள்ளனர். சிவனும் பார்வதியும் சேர்ந்த கோலத்தில் உள்ள அர்த்தநாதீஸ்வரர் சிலை கருங்கல்லில் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது. நாம் தஞ்சை பெரிய கோவிலில் பார்த்தது போன்று இங்கும் ஒர் முனிவர் சிலை உள்ளது. இந்த முனிவர் மன்னரின் குருநாதராக இருக்கலாம்.
இக்கோவிலில் உள்ள தூண்களில் செதுக்கப்பட்டுள்ள விரல் அளவுள்ள சிற்பங்கள் அனைத்தும் மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் பயன்படுத்த பட்ட கற்கள் செம்மண் கலந்த வண்ணத்துடன் வித்தியாசமாக உள்ளது.
சங்க கால சோழர்கள் கட்டிய கோவில்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்களுக்கும், இந்த தாராசுரம் கோவிலில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இதனைப் பற்றி நன்கு அறிந்த வரலாற்று ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டால் மட்டுமே இதனை பற்றி முழுமையாக அரிய முடியும்.
கோவில் சுற்றுச்சுவர்களிலும் அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. கோவிலின் முன் அழகிய சிறிய நந்தி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நாம் இதற்கு முன்பு பார்த்த கோவில்களில் இருப்பது போல ஆடல் மங்கையர்களின் சிலைகள் வரிசையாக கோவிலை சுற்றி செதுக்கப்பட்டிருந்தன .
இந்த ஆடல் மங்கையர்களின் சிலைகள் அனைத்து கோவில்களிலும் இடம் பெற்று இருக்கிறது. அந்த காலகட்டத்தில் சோழர்கள் ஆடல் மங்கையர்களுக்கும் நாட்டிய கலைக்கும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதனை இந்த சிலைகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
தஞ்சை பெரிய கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை போன்று இந்த தாராசுரம் ஐராவதேஸ்வரம் கோவிலை சுற்றியும் மாபெரும் சுற்றுச்சுவர் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த தாராசுரம் கோவில் முகப்பில் இராஜகோபுரத்திற்கான அடித்தளம் இருக்கிறது. இந்த கோபுரமானது தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தை விட மிகப் பிரமாண்டமாக இருந்திருக்கக்கூடும். நாளடைவில் சிதிலமடைந்து தற்பொழுது மொட்டை கோபுரமாக காட்சியளிக்கிறது.
இந்த கோபுரத்தை தொல்லியல் துறை மறுசீரமைப்பு செய்து இருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆனால் தற்பொழுது அதில் செடிகள் முளைத்து இயற்கை அன்னை அதனை விளங்கிக் கொண்டிருக்கிறாள்.
இந்த கோவிலின் படிக்கட்டுகள் மிக அற்புதமாக செய்யப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டின் இரண்டு புறமும் குதிரைகள் தேரினை இழப்பது போன்று மிகுந்த கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் இரண்டு மல்லர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற ஒரு சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் நுழைவு வாயில் கோபுரமானது அழகிய நுண்ணிய சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி இதில் உள்ள சிற்பங்கள் மெழுகு பொம்மைகள் போன்ற மிகவும் வளவளப்பாக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published.

Darasuram (தாராசுரம்)

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page