நாம் சோழர்களின் ஆராய்ச்சி பயணத்தின் அடுத்த கட்டமாக இராஜேந்திர சோழனின் கங்கை கொண்ட சோழபுரத்தை பற்றி பார்க்க இருக்கிறோம். சோழர்கள் பொதுவாக ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் தனக்கென தனி தலைநகரங்களை உருவாக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். சங்ககால சோழர்கள் உறையூறை தலைநகரமாக கொண்டு விளங்கினர். தஞ்சாவூர் முத்தரையர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. முத்தரையர்களை வெற்றி பெற்ற பின் விஜயலாய சோழன் காலத்தில் தஞ்சாவூர் தலைநகரமாக மாற்றபட்டது. இராஜராஜ சோழன் காலதிற்கு பின் இராஜேந்திர சோழன் முடிசூட்டிய பிறகு தனக்கென தனித்துவம் வேண்டும் என்று அவர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றி அமைத்தார்.
இந்த கங்கை கொண்ட சோழபுரத்தை மாற்றி அமைத்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் இராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றி அமைத்தார் இராஜேந்திர சோழன் என்றும், இராஜேந்திர சோழன் கங்கை வரை சென்று போர் தொடுத்ததின் நினைவாக தலைநகர் மாற்றப்பட்டது என்றும், மற்றும் தஞ்சை அரண்மனைக்கும் சாளுக்கிய எல்லைக்கும் இடைப்பட்ட தூரம் மிக அதிகமாக இருந்ததால் நாட்டின் நடு மையமான இடத்தில் தலைநகர் இருந்தால் போர்க்காலங்களில் படைகள் விரைந்து சென்று போர் புரிவதற்கு எளிமையாக இருக்கும் என்பதால் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
என்னைப் பொறுத்தவரையில் மூன்றாவது கருத்தில்தான் உடன்பாடு உள்ளது. ஏனென்றால் ஒரு பேரரசு வளர்ச்சி அடையும் போது படைவீரர்கள் தங்குவதற்கும் , போர் ஆயுதங்கள் வைப்பதற்கும் அதற்கான கட்டிடங்கள் கட்டுவதற்கு அதிக இடம் தேவைப்படுகிறது. இது போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு பிற்காலத்தில் தஞ்சை ஏதுவான இடமாக இல்லாமல் போய்ருக்கலாம். அதன் காரணமாக தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றி அமைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இந்த கோயிலானது தொல்லியல் துறை பாதுகாப்பில் மிகத் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் பாழடைந்து கோவிலின் சிலைகள் விற்கப்பட்டு சீர் குலைந்து போயிருக்கும். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் மிகப் பொலிவுடன் காணப்படுகிறது.
இக்கோவிலின் ராஜகோபுரமானது ஆங்கிலேயரின் படையெடுப்பிற்குப் பிறகு அவர்கள் இங்கு கட்டிடங்கள் கட்டுவதற்கும், அணைகள் கட்டுவதற்கும் இந்த கோபுரத்தின் கற்களை பெயர்த்து எடுத்துச் சென்றதன் விளைவால் தற்போது முற்றிலும் அழிந்து சிதிலடைந்த மொட்டைக் கோபுரமாக உள்ளது.
இக்கோவிலில் உள்ளே நுழைந்தவுடன் பார்ப்பவர் கண்கவரும் வகையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரமானது தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக தஞ்சை பெரிய கோவிலில் இருப்பது போன்ற மிகப் பிரமாண்டமான நந்தி சில அமைக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி சிலை மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட அலங்கார மணிகள், சங்கிலிகள், தோரணங்கள் என மிக அழகாக காட்சியளிக்கிறது.
இக்கோவிலின் பக்கவாட்டில் ஒரு மிகப்பெரிய கம்பீரமான சிங்கயாளி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்புறத்தில் கிணறு ஒன்று அமைத்து இருப்பது இக்கோவிலின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. நான் இதற்கு முன்னதாக இது போன்ற மிகப்பெரிய அளவிலான சிங்கையாளி சிலையையோ, கிணற்றையோ பார்த்ததில்லை. இது இந்த கோவிலுக்கே உரித்தான அமைப்பாக இந்த சிங்கமுக கிணறு இருக்கிறது.
இந்த கங்கைகொண்ட சோழபுரத்தின் கோவில் கோபுரமானது தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தை விட சற்று உயரம் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இராஜேந்திர சோழன் நினைத்திருந்தால் தஞ்சை பெரிய கோவிலை விட மிகப் பிரமாண்டமாக இக்கோவில் கோபுரத்தை கட்டியிருக்கலாம். ஆனால் தன் தந்தை இராஜராஜ சோழனின் மீது வைத்திருந்த அன்பினாலும் மரியாதையாலும் தன்னால் எக்காலத்திலும் தந்தையின் மதிப்பு தாழ்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தினாலும் இக்கோவிலை சற்று உயரம் குறைவாக கட்டினார் என்றும் கூறுகின்றனர்.
இக்கோவில் பக்கவாட்டு சுவரில் சண்டிகேஸ்வரருக்கு பரமசிவன் தன் பொற்கரங்களால் முடி சூட்டக்கூடிய சிற்பமானது கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் தான் உள்ளது. நான் இதனை தவறுதலாக தஞ்சை பெரிய கோவில் இருப்பதாக நினைத்து கொண்டிருந்தேன். அதற்கு அடுத்தபடியாக சுவரின் இருபுறங்களிலும் மிகப்பெரிய அளவில் துவார பாலகர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் கட்டிடக்கலை அமைப்பை பொருத்தவரையில் கிட்டத்தட்ட தஞ்சை பெரிய கோவிலின் அமைப்பை தழுவியே உள்ளது. இந்த இரு கோவில்களில் உள்ள சிற்பங்களின் முக அமைப்புகளும் ஒன்றாகவே உள்ளது. ஏனென்றால் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய சிற்பியின் சிஷ்யரான நித்த வினோத தச்சர் என்ற சிற்பிதான் இக்கோவிலை கட்டியுள்ளார். அதனால்தான் பல ஒற்றுமைகளை இக்கோவிலில் காண முடிகிறது. இந்த நித்த வினோத தச்சர் தினந்தோறும் சிற்ப கலையில் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதில் மிகச் சிறந்தவராக விளங்கியுள்ளார். அதனாலயே இவருக்கு நித்த வினோத தச்சர் என்ற பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர்.
அந்த காலகட்டத்தில் வாழ்ந்த சிற்பிகள் கை தேர்ந்த கட்டிட பொறியாளர்களாகவும், சிற்பிகளாகவும், கலைஞர்களாகவும், ஓவியர்களாகவும் சிறந்து விளங்கியுள்ளனர். அதில் இந்த நித்த வினோத பெருந் தச்சர் மிகவும் துல்லியமாக போர் கருவிகள் கண்டுபிடிப்பதிலும் மிகச் சிறந்ததவராக திகழ்ந்த காரணத்தினால் இவருக்கு நித்த வினோத தச்சர் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
அடுத்ததாக இப்பக்கத்தின் ஏழாவது வரிசையில் உள்ள நான்காவது புகைப்படத்தை பார்த்தோமானால் நாம் எங்கும் காணாத மிக அழகான சிற்பம் ஒன்று உள்ளது. அந்த சிற்பத்தின் அமைப்பை பார்க்கும் பொழுது பெருமாள் போல தெரிகிறது. இந்த சிலையானது கோவில் பக்கவாட்டு சுவரில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் இரண்டு பக்கமும் ஆடல் மங்கையரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலின் உள்ளே உள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளன. அதனை பார்க்கும்பொழுது கோவிலின் உட்புறத்திலும் சில சிறிய கோவில்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பல வருடங்களாக இக்கோவில் பராமரிப்பின்றி இருந்ததால் இக்கோவிலில் உள்ளே இருந்த சிறிய சிறிய கோவில்கள் சிதிலமடைந்துள்ளன. பிற்காலங்களில் இதிலிருந்த கற்களை அதனைச் சுற்றி இருந்த மக்களும் அரசாங்கமும் எடுத்துச் சென்றதால் இன்றளவும் பாழடைந்த நிலையிலேயே இருக்கின்றன.
இக்கோவிலானது தஞ்சை பெரிய கோவிலை போன்று முழு சீரமைப்பு பெற்ற கோவில் அல்ல . இக்கோவிலை மறு சீரமைக்க அரசாங்கம் முழு முயற்சி எடுத்தால் மட்டுமே இதன் மொத்த அழகையும் வெளிக்கொண்டு வரமுடியும். ஆனால் அதற்கான முயற்சி எடுப்பது போன்று தெரியவில்லை.