Karikalcholankallanai (கரிகால சோழன் கல்லணை)

சோழர்கள் பற்றிய ஆராய்ச்சி பயணத்தினை வெற்றிகரமாக முடித்துவிட்டு தஞ்சாவூரிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது இறுதியாக கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணைக்கு சென்றோம்.
சங்க கால சோழர்களில் மிகவும் தலை சிறந்து விளங்கியவர் பெருவளத்தான் என்று அழைக்கப்பட்ட கரிகால சோழன் தற்பொழுது திருச்சி அருகே உள்ள உறையூரை தலைமை இடமாகக் கொண்டு விளங்கினார். இந்த கரிகால சோழனை பற்றி பட்டினப்பாலை , கலிங்கத்து பரணி, பெருநராற்றுப்படை, பழமொழி நானூறு போன்ற பல இலக்கிய பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் தந்தை இளஞ்சேட்சென்னி ஓர் மாபெரும் வீரன் ஆவார். இந்த இளஞ்சேட்சென்னி என்ற மாமன்னன் தமிழ்நாட்டின் மீது போர் தொடுக்க வந்த அசோகரின் தலைமையிலான மௌரிய படையினை பாண்டியன் மற்றும் சேர படைகளை தன்னுடன் சேர்த்துக்கொண்டு அதற்கு தலைமை வகித்து தோற்கடித்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
சங்க கால சோழர்களில் ஒருவரான கரிகால சோழனை பற்றி கல்வெட்டுக்கள் மூலமாகவோ செப்பேடுகள் மூலமாகவோ தெளிவான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. மாறாக ஓலைச்சுவடிகளில் இவரைப் போற்றி எழுதப்பட்ட இலக்கியப் பாடல்கள் மூலமாகவே அதிகபடியான விபரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
இதன் மூலம் கரிகால சோழன் காலத்தில் கல்வெட்டு வழக்கம் நடைமுறையில் இல்லை என்று தெரிய வருகிறது.
கரிகால சோழனை பொறுத்தவரையில் வெண்ணி பெரும் போர் தான் மிகவும் பேசப்பட்ட ஒன்று. அப்போரில் பாண்டியர்களையும் சேரர்களையும் தோற்கடித்து மாபெரும் வெற்றி கொண்டார் என்று இலக்கியப் பாடல்கள் மூலம் நமக்கு தெரிய வருகிறது. அதோடு விழும்புன் பட்டதால் சேரலாதன் நோன்பிருந்து உயிர் துறந்தார் என்றும் சொல்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஒன்பது குறுநில மன்னர்களையும் தனி ஒருவனாக நின்று கரிகால சோழன் வீழ்த்தி வெற்றி பெற்றதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இப்பெரும் வீரனான கரிகால சோழனிற்கு இப்பெயர் வர இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த கரிகால சோழன் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கு தீ வைக்கப்பட்டதாகவும், அப்பொழுது இவரது மாமா இரும்புடைத்தலையார் தீயில் இருந்து கரிகால சோழனை காப்பாற்றும் பொழுது அவனின் கால் தீயில் கருகியதால் பின்னாளில் கரிகால சோழன் என்று அழைக்கப்பட்டார் என்றும், கரிகால சோழன் என்ற பெயரின் அர்த்தமானது யானையின் பலத்திற்கு நிகரானவன் என்று பொருள் தருவதாகவும் இரு வேறு காரணங்கள் வரலாற்று ஆசிரியர்களால் முன் வைக்கப்படுகின்றன.

கரிகால சோழன் காலத்தில் சோழ நாட்டிற்கு மன்னர் இல்லாத பொழுது சோழ நாட்டிற்கு ஒரு மன்னனை தேர்ந்தெடுப்பதற்காக ஓர் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளனர். யானையிடம் மாலையினை கொடுத்து அந்த யானை யாருடைய கழுத்தில் மாலை அணிவிக்கின்றதோ அவரே சோழ நாட்டின் மன்னராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த யானை கரிகால சோழனின் கழுத்தில் மாலையை அணிவித்து சோழநாட்டின் மன்னனாக தேர்ந்தெடுத்தது என்றும் கூறுகின்றனர்

கரிகால சோழன் கிபி இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த கரிகால சோழனின் ஆட்சி காலத்தில் பல எண்ணற்ற ஆகச் சிறந்த காரியங்களை செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் கரிகால சோழன் வட நாட்டினரையும் வெற்றி கொண்டு இமயம் வரை சென்று தன் புலிக்கொடியையும் நாட்டினார் என்று இவரை பற்றிய வரலாற்றுப் பாடல்கள் நமக்கு தெரிவிக்கின்றன.
இவரின் ஆட்சி காலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மாபெரும் கல்லணையானது இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் இவரின் புகழை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த கல்லணை 329 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலத்துடன் மிக உறுதியாக கட்டப்பட்டுள்ளது. தற்போது உலகிலேயே மிகப் பழமையான அணைகளில் ஒன்றாக உள்ளது .
இரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அன்றைய காலகட்டத்தில் சீறிப்பாய்ந்து ஓடும் ஆற்றின் வேகத்தை குறைத்து ஆற்றின் குறுக்கே எப்படி இவ்வளவு பிரமாண்டமான அணையை கட்ட முடிந்தது, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு திருப்பிய அவனின் அறிவாற்றலை என்னவென்று போற்றுவது என்பதை நினைத்துப் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கல்லணையின் மூலம் சோழ நாட்டில் ஓர் பசுமைப் புரட்சியையே உருவாக்கி இருக்கிறான் நம் கரிகால சோழன். இத்தமிழ் திருநாட்டில் கரிகால சோழன் எனும் மிகுந்த அறிவாற்றல் கொண்ட ஒருவன் இருந்தான் என்பதற்கு இந்த கல்லணையே மிகப்பெரிய சான்றாக விளங்குகின்றது.
இந்த கல்லணையின் மூலம் மண்ணரிமான கோட்பாட்டையும், நீர் மேலாண்மையையும் இந்த உலகிற்கு கொடுத்து சென்றுள்ளான். அப்படிப்பட்ட நம் கரிகால சோழனிற்க்கு அரசாங்கத்தினால் ஓர் சிறிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நம் கரிகால சோழன் செங்கோல் ஏந்தி யானையின் மேல் மிக கம்பீரமாக அமர்ந்திருப்பது போன்ற மிகப்பெரிய சிலை வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு தமிழனின் மனதும் கர்வம் கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தப் பக்கத்தில் கரிகால சோழன் கல்லணை பற்றிய புகைப்படங்களை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் பதிவேற்றி இருக்கிறேன். இனி அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்.

Leave a Comment

Your email address will not be published.

Karikalcholankallanai (கரிகால சோழன் கல்லணை)

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page