நாம் தற்பொழுது சோழர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கீழபழையாறை சோமநாத சுவாமி கோவில் பற்றிய ஆய்வு முடிவுகளை பார்க்க இருக்கிறோம். இந்த கீழபழையாறை கோவிலானது கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இது 400 ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தலைநகரமாகவும் விளங்கியுள்ளது. பின்னர் சுந்தர சோழரின் ஆட்சி காலத்தில் தஞ்சாவூரிற்கு தலைநகரம் மாற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூரிற்கு தலைநகரம் மாற்றப்பட்ட பிறகு பின்னாளில் இங்கே அரசர்கள், சேனாதிபதிகள் வயதான பின்பு ஓய்வெடுக்கக்கூடிய இடமாகவும், புதிய இளவரசர்களுக்கு பட்டம் சூட்டும் அரசு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காகவும், பின்னாளில் இராஜராஜ சோழனின் தங்கை குந்தவை பிராட்டியார் இங்கு வாழ்ந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கீழபழையாறை கோவிலை தேடி நானும் என் சகோதரனும் அதிகாலையிலேயே எழுந்து மகிழுந்தில் நெடுந்தூரம் பயணித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் இருவரும் சோழர்களைப் பற்றி பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்த பொழுது சட்டென என் கண்ணில் ஏதோ தென்பட்டு மறைந்தது. உடனே என் சகோதரனிடம் ஏதேனும் இங்கு பார்த்தாயா என்று கேட்டேன். அப்படி ஏதும் நான் பார்க்கவில்லை என்றார். ஆனால் என் ஆழ் மனதில் ஏதோ ஒன்று இங்கு இருப்பதாகவே தோன்றியது. என் மனம் சற்று குழப்பம் அடைந்தது. உடனே என் சகோதரனை வாகனத்தை வந்த வெளியே திருப்பும் படி கேட்டுக்கொண்டேன் . அவரும் மறுப்பேதும் சொல்லாமல் வாகனத்தை திருப்பி செலுத்தினார்.
சிறிது தூரம் சென்று பார்த்த பொழுது அங்கே மிகுந்த கலை நயத்துடன் கட்டப்பட்ட ஓர் அழகிய இராஜகோபுரம் எங்களுக்கு காட்சியளித்தது. அந்த இராஜகோபுரமானது சாலையில் இருந்து சற்று உள்ளே தள்ளி இருந்தது. நாங்கள் இருவரும் அதன் அருகில் சென்று பார்த்தோம். அப்பொழுது தான் எங்களுக்கு அது கீழபழையாறை கோவில் என்று தெரியவந்தது.
இந்த கோபுரத்தின் அடித்தளம் மிகவும் அழகாக கருங்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. ஆனால் அந்த அடித்தளத்தின் மேல் உள்ள கட்டிடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டு சுண்ணாம்பு பூச்சுகளால் பிணைக்கப்பட்டிருந்தன. இதன் அடித்தளத்தினை பார்க்கும்பொழுது இந்த இராஜகோபுரமானது முன்னொரு காலத்தில் மிகப் பிரமாண்டமாக விண்ணை முட்டும் அளவிற்கு இருந்திருக்கக்கூடும். பின்னர் காலங்கள் செல்லச்செல்ல மெல்ல மெல்ல காற்றில் கரைந்து அதன் பொலிவை இழந்து அதன் அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ளது. தற்பொழுது இக்கோபுரத்தின் மேல் செடி கொடிகள் முளைத்து ஓர் குறுங்காடே உருவாகி இருக்கிறது.
இந்த ராஜகோபுரத்தின் வெளிப்புற அழகினை ரசித்து விட்டு நானும் என் சகோதரனும் உள்ளே நுழைந்தோம். இந்த கோபுரத்தின் உள்ளே இரண்டு புறமும் நான்கு பெரிய கற்த்தூண்கள் இருந்தன. அதில் நடன மங்கையர்களின் ஆடல் அபிநயங்கள் ஒவ்வொன்றும் மிக அற்புதமாக செதுக்கப்பட்டிருந்தன. இந்த கோபுரத்தின் வெளிப்புற சுவற்றிலும் யாளிகளை மனிதர்கள் இயக்குவது போன்ற சிலைகள் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தன.
பின்னர் கோவிலில் வளாகத்தினுள் சென்றோம். அங்கே சோமநாத சுவாமி திருக்கோவில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிலின் இரண்டு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் மிகவும் அற்புதமாக செதுக்கப்பட்டிருந்தன. மிகவும் எளிமையாக இருந்தாலும் மிக அழகாக இருந்தது. இக்கோவிலானது சமீபத்தில் புனரமைக்கப்பட்டதால் இக்கோவிலில் பழமையும் புதுமையும் கலந்த வேலைப்பாடுகளை காண முடிகிறது. இக்கோவிலிற்கு அரசாங்கத்தினால் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்கட்டமைப்புகளை மறுசீராய்வு செய்து புதுப்பித்த அரசாங்கம் வெளியில் உள்ள இராஜகோபுரத்தினையும் புதுப்பித்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அதனை மறு உருவாக்கம் செய்வதற்கு பண பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.
இக்கோவிலில் உள்ளே புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி கிடையாது என்றார்கள். ஆனால் நாங்கள் சென்ற உடனேயே அதனை புகைப்படங்கள் எடுத்து விட்டோம். இக்கோவிலில் பல எண்ணற்ற சிற்பங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் ஆக்ரோஷமாக அசுரனின் வயிற்றை கிழிப்பது போன்ற நரசிம்மரின் சிற்பம் மிகுந்த கலை நாயத்துடன் இருந்தது. கோவிலின் ஒரு புறத்தில் நவீனமாக செதுக்கப்பட்ட யாளி சிற்பங்கள், மற்றும் சக்கரங்கள் போன்றவை கோவிலின் அருகே தனியாக வைக்கப்பட்டிருந்தன. இக்கோவிலில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இதிகாச கதைகளை நமக்கு சொல்கின்றன.
இக்கோவிலானது தாராசுரம் கோவில் கட்டுவதற்கு சிறிது காலத்திற்கு முன்பாக கட்டப்பட்டிருக்கலாம். ஏனென்றால் தாராசுரத்தில் உள்ள மிக நுட்பமான சிற்பங்களின் அமைப்பை இங்கும் பார்க்க முடிகிறது. ஆனால் கோவில் கட்டுமான மானது முற்காலச் சோழர்களின் கட்டுமான அடிப்படை தத்துவதை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. உதாரணமாக தாராசுரத்தில் பார்த்தது போன்று கோவில் படிக்கட்டுகளின் இரண்டு புறமும் குதிரை யானை சிற்பங்கள் தேரினை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கோவில்களும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தை சேர்ந்தவையாக இருக்கலாம்.
தஞ்சை பெருவுடையார் கோவில் தான் சோழர்களால் முதன் முதலில் கட்டப்பட்ட மிகப்பெரிய கோவிலாகும். அதற்குப் பிறகு இந்த கோவிலை கட்டி இருக்கலாம். பின்னர் காலப்போக்கில் இதனை பயன்படுத்தாமல் கைவிட பட்டிருக்கலாம்.இது ஒரு மிகவும் அற்புதமான கோவில் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த சோழர்களைத் தேடிய பயணமானது மிகவும் சுவாரசியமாக இருந்தது. இம்மாதிரியான வரலாற்றுப் பயணத்தின் போது வாகனத்தில் தூங்காமல் செல்வது சாலச் சிறந்தது. ஏனென்றால் நாம் அறிந்திடாத சில வரலாற்றுக் இடங்களை நொடிப்பொழுதில் கடந்து சென்று விட நேரிடும். பின்னர் அவ்விடத்திற்கு மீண்டும் வருவதற்கு காலதாமதம் ஆகலாம். ஏன் பல ஆண்டுகள் கூட ஆகலாம். ஆகையால் பயணத்தின் போது தூங்காமல் செல்வது நம் நேரத்தை மிச்சப்படுத்தும்.
இந்த கீழபழையாறை கோவிலை பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இது ஒரு நல்ல அனுபவமாக எனக்கு இருந்தது. இக்கோவில் பற்றி ஆராய்ந்த பிறகு நாங்கள் இருவரும் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி பயணம் மேற்கொண்டோம். இனி அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்.