அடுத்ததாக சோழ தேசத்தின் சிற்றரசர்களான பழுவேட்டரையர்கள் கட்டிய இருவர் கோவில்கள் பற்றி பார்ப்போம். இந்த கோவில் அரியலூர் மாவட்டம் திருச்சி ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலப்பழுவூர் என்று அழைக்கபடும் கீழையூரில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது. இந்த கோவிலானது கி.பி ஒன்பதாவது நூற்றாண்டில் ஆதித்த சோழன் காலத்தில் பழுவேட்டரையர் குமரன் மறவன், குமரன் கந்தன் என்ற சிற்றரசர்களால் கட்டப்பட்டது என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றது.
இந்த இருவர் கோவில்களை பற்றி பார்ப்பதற்கு முன்னாள் மேலபழுவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். இது ஒரு அழகாக நேர்த்தியான முறையில் கட்டப்பட்ட மிக பழைமையான ஒரு சிவன் கோவில். ஆனால் தற்பொழுது கோவிலின் கற்சுவற்றின் மேல் மேற்கூரைகள் கோபுரங்கள் எழுப்பி புதுப்பித்து கட்டியிருக்கிறார்கள். இந்த கோவிலானது பார்பதற்கு பழமையும் புதுமையும் கலந்த ஒரு கலவையாக இருக்கிறது.
இந்த கோவிலை சுற்றிலும் சுற்று சுவர் எழுப்பியிருக்கிறார்கள். இந்த கோவிலின் உள்ளே பழங்கால விநாயகர் சிலை ஒன்று உள்ளது. அதன் வெளிப்புறம் தற்பொழுது புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு உள்ளது. இதன் வரலாற்று தரவுகளை பார்க்கும் போது தான் இதன் தொன்மை பற்றி தெரியவருகிறது. இந்த கோவிலின்னுள் சென்று பார்க்கும் போது ஒரு தூணில் ஒரு சிற்பமானது மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அது ஒரு துவாரபாலகரின் சிலை. பொதுவாக துவாரபாலகர்களின் சிலைகள் பெரிய மீசைகளுடன் இருக்கும். ஆனால் இந்த சிலை சற்று வேறுபட்டு காணப்பட்டது. இந்த சிற்பம் தான் தூணில் செதுக்கப்பட்ட அந்த கோவிலில் நான் பார்த்த முதல் சிற்பமாகும். தூணிலையே முப்பரிமாண தோற்றத்தில் அமைத்திருக்கிறார்கள்.
கோவில் நுழைவு வாயில் கதவானது தற்போது வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு முன் இருந்த கதவுகள் சிதைந்திருக்கும் என்று நினைக்கின்றேன். கோவில் முன் இரண்டு துவார பாலகர்கள் சிலை இருந்தது. சிலைகள் கொஞ்சம் சிதிலமடைந்து காணப்பட்டது.
அதற்கடுத்த படியாக கோயிலினுள் சென்று பார்த்தோமானால் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருக பெருமானுகென்று ஒரு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மேற்கூரையையும் தற்போது புதுப்பித்துள்ளனர்.
இந்த கோவிலின் ஒரு புறத்தில் பாதி கட்டப்பட்ட நிலையில் பாழடைந்த நுழைவு வாயில் உள்ளது. இதில் கோபுரம் இல்லை. தற்போது இரும்பு கம்பி கோர்க்கபட்ட கதவால் பூட்டி வைத்திருந்தனர்.
கோவிலின் ஒரு சிறிய மண்டபத்தில் மரத்தாலான நந்தி சிலை உள்ளது. சாமி ஊர்வளதிர்க்காக தற்பொழுது செய்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
கோவிலின் கற்பகிரகதின் வாயிலில் இரண்டு துவார பாலகர்கள் சிலையும் அதற்கருகில் கருங்கலில் செதுக்கப்பட்ட விநாயகர் சிலையும் இருந்தது. அந்த இரண்டு துவார பாலகர்கள் சிலையானது வர்ணம் பூசப்பட்டு தற்காலத்தில் அமைக்க பட்டதாக உள்ளது.
கொடும்பாளூரில் பார்த்தது போலவே தூண்களில் நல்ல நுன்னிய வேலைப்பாடுகள் செய்துள்ளனர். கோவிலின் முன் மண்டபங்கள் பழமை மாறாமல் பழைய தூண்கள் பத்திரமாக வைத்து அதன் மேல் புதுமையான கட்டிடங்கள் கட்டி இருக்கிறார்கள். பழைய தூண்களை முக்கால்வாசி அவர்கள் பத்திர படுத்தி வைத்திருக்கிறார்கள். இது கிறிஸ்துவுக்கு பின்னால் ஏழாம் நூற்றாண்டில் பலுவேட்டரையர்களால் இந்த கோவில் நிறுவ பட்டதாக அங்கே குறிப்பிடபட்டிருந்தது.