அடுத்ததாக பழுவேட்டரையர்கள் கேளரியில் இரண்டாவது பக்கத்திற்கு போவோம். கோவிலை சுற்றி அழகிய தோற்றங்களை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது ஒரு பழமையான கிணறு ஒன்று கண்ணில் தென்பட்டது. அந்த கிணற்றின் ஒரு புறத்தில் கிணற்றினுள் இறங்குவதற்காக நுழைவு வாயில் அமைக்கப்பட்டு அதற்கு நேரெதிரே உயரமான மிகவும் பழமையான இரண்டு கற்த்தூண்கள் நடப்பட்டிருந்தன. அதன் கீழே அம்மி போன்ற ஒரு கல் இருந்தது. இந்த தூண்கள் தண்ணீர் இரைப்பதற்காக பயன் படுதித்தியிருப்பர்கள் என்று நினைக்கின்றேன்.
கோவிலின் ஏராளமான சிற்பங்கள் இருந்தாலும் ஒரு பக்க சுவற்றில் சிங்க முகமும் அதற்கு கீழே ஒரு பெண்ணின் முகமும் செதுக்கி இருக்கிறார்கள். இதுவும் பழமையானதாக இருந்தது . நான் முன்னமே சொன்னது போல பழமையும் புதுமையும் கலந்த ஒரு கலவையாக இக்கோவில் உள்ளது. கோவில் பிரகாரத்தில் கன்னி மூலையில் சுற்றி வந்து வழிபடுகின்ற வகையில் நவகிரகங்களின் சிலைகள் அமைத்துள்ளனர். அதை தொடர்ந்து சுற்று சுவரை ஒட்டி மேடயமைத்து அதில் சனீஸ்வரர்,விநாயகர், உமாமகேஸ்வரர், ரிஷபரூபர், நாகர், பைரவர் என பல கடவுள் சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் சிதைந்த சிலைகளையெல்லம் எங்கு வைப்பதென்று தெரியாமல் இங்கே வரிசையாக வைத்துள்ளனர்.
சுவர்களில் ஆங்காங்கே நடன மாந்தர் சிலைகள் பாதி சிதலமடையாமலும், பாதி சிதிலடைந்தும் காணப்படுகிறது. கொடும்பாளூர் மூவர் கோவிலில் பார்த்தது போலவே இந்த கோவிலிலும் கோபுரம் ஆரம்பிக்கும் இடத்தில் மூலைகளில் ஆமை முக சிற்பங்களை பார்க்க முடிந்துள்ளது. இந்த ஆமை முகம் எதற்கு வைத்தார்கள் வாஸ்துவிற்கு வைத்தார்களா என்று தெரியவில்லை. தற்போது பார்க்கும் இந்த கோவிலும் கொடும்பாளூர் கோவிலும் அமைப்பில் ஓரளவிற்கு ஒத்து போகின்றன. இந்த கோவில் தனியாரால் பராமரித்து வணங்க படுகிறது.தினம் தினம் வழிபாடு நடந்த திற்கான அடையாளம் நன்றாக தெரிகிறது.
அடுத்ததாக அதற்காருகில் ஒரு பழமையான ஒரு கோவில் ஒன்று இருப்பதாக சொன்னார்கள். நாங்கள் இருவரும் இணையதளத்தின் உதவியோடு அந்த கோவில் இருக்கும் இடத்திற்கு சென்றோம். ஆனால் அங்கு சென்று பார்த்தால் அப்படியொரு கோவில் இருப்பதாக எங்களுக்கு தோன்றவில்லை. அந்த கோவிலைத்தேடி நானும் தம்பியும் அந்த சாலையில் பலமுறை நடந்து அலைந்து திரிந்து கொண்டிருந்தோம்.
அப்போது நாங்கள் வெகுநேரம் அலைந்து திரிவதை கண்ட அங்கு விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுவன் என்ன ஐயா தேடுறிங்க என்று கேட்டான். நாங்கள் ஒரு கோவிலை தேடுவதாக கூறினோம். உடனே அந்த சிறுவன் சோழர்கள் கோவிலா என்று கேட்டான். ஆமாம் என்றதும் தேனீர் கடைக்கு பின்னால் இருக்கிறது என்றான். உடனே அந்த தேனீர் கடைக்கு பின்னால் சென்று பார்க்கும் போது ஒரு பாழடைந்த கோவில் இருந்தது.
அது ஒரு சிவன் கோவிலாகும்.அந்த கோவிலின் பெயர் மறவனீசுவரர் மகாதேவர் . அந்த கோவிலின் மேற்கூரையில் புற்கள் வளர்ந்து மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. அந்த கோவில் அடைத்து வைத்திருந்தனர். கருவறையில் உள்ள சிவலிங்கமானது தெளிவாக தெரியவில்லை. கோவிலின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் துவாரபாலகர்கள் சிலை நிறுத்தி வைக்க பட்டிருந்தது. அதில் ஒன்று நன்றாகவும் மற்றொன்று சிதைந்த நிலையிலும் இருந்தது. அந்த கோவிலின் எதிரே இரண்டு நந்தி சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக பாதி மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்தது. கோவிலின் ஒரு புறம் காவல் நிலையமும் மறு பக்கம் வீடுகளும் இருக்கிறது. அந்த கோவிலை சுற்றி இருப்பவர்களுக்கு அந்த கோவிலின் அருமை என்னவென்று தெரியாமல் அந்த இடத்தை துணி காயவைக்கும் இடமாக அதை உபயோகித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த கோவிலில் மூன்று தேவியரின் சிலைகள் இருக்கின்றனர். அது என்ன சிலைகள் என்று தெரியவில்லை. கோவிலின் தெற்க்கு புற வெளிசுவற்றில் ஒரு அழகிய சிற்பம் உள்ளது. அந்த சிற்ப்பமானது சூரிய பகவான் அல்லது அக்னி பகவான் சிலையாக இருக்கலாம். அதன் முகம் தெளிவாக இருந்தாலும் வலது கை உடைந்த நிலையில் இருந்தது.
இந்த கோவிலானது மிகவும் சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளது. இந்த சூரிய பகவான் சிலைக்கு ஊர் மக்கள் தினமும் வழிபாடு செய்வதற்கான அடையாளம் நன்றாக தெரிகிறது.
மூன்றாம் பக்கத்தை பற்றி பார்த்தோமானால் கொடும்பாளூர் கோவில் கோபுரங்களில் பார்த்தது போலவே நடன மாந்தர் சிலைகள் இந்த மறவனீசுவரர் கோவிலிலும் இருந்தன. அவர்களின் அபினாயங்களை ஒவ்வொன்றும் அறிய பொக்கிஷங்கள். தொல்லியல் துறை இந்த கோவிலை கவனத்தில் கொண்டு மறு சீரமைத்தல் நன்றாக இருக்கும். நான் அடுத்தமுறை செல்லும் போது இந்த கோவில் இருக்குமா என்பது சந்தேகம் தான். அதோடு மட்டுமல்லாமல் செடி கொடிகள் முளைத்து புதர் மண்டி இயற்கையும் அதை விழுங்கி கொண்டிருக்கிறது. இனி அடுத்து மூன்றாவது பக்கத்தில் சந்திப்போம்.