Paluvatayar Temples (பழுவேட்டரையர் கோவில்)

மூன்றாவது பக்கத்தில் மறவனீஸ்வரர் மகாதேவர் கோவிலை பற்றி பார்த்து கொண்டிருந்தோம். அதன் தொடர்ச்சியை தற்போது காண்போம்.
இந்த மறவனீஸ்வரர் மகாதேவர் கோவிலானது நான் முன்பே கூறியது போல கோவிலின் மேற்கூறைகளில் செடிகள் வளர்ந்து அதன் அமைப்பை மெல்ல மெல்ல அழித்து கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட ஆலயம் முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
இந்த கோவிலை பொறுத்தவரை அடிப்படை பராமரிப்பு அறவே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அதோடு மட்டுமல்லாமல் அரிய பல கல்வெட்டு தகவல்களை தன்வசம் கொண்டுள்ள இந்த சிறிய கோவில், சுற்றிலும் குப்பை கழிவுகளால் சூழப்பட்டு பார்ப்பதற்கு குப்பை மேட்டில் கிடக்கும் மாணிக்கமாக தற்போது இக்கோவில் இருக்கிறது.
இந்த கோவிலில் சில செய்து முடிக்கபடாத சிலைகளும், கோவில் சுவற்றில் பல அரிய கல்வெட்டுகளும் நிறைய உள்ளன. இந்த கல்வெட்டுகளை பார்க்கும் பொழுது கல்வெட்டுகளை எப்படி படித்து தெரிந்து கொள்வது என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது. எப்படியாவது கல்வெட்டு சார்ந்த புத்தகங்களை படித்தோ, அல்லது கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களிடம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டோ அடிப்படை விடயங்களை கற்று தெரிந்து கொண்டு கல்வெட்டுகளை படிக்கும் திறனை வளர்த்துக் கொண்டால் தான் இனி வரும் காலங்களில் கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகள் பற்றி எளிதில் படித்து தெரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் உருவானது.
ஆனால் எத்தனையோ வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கல்வெட்டுகள் சார்ந்த புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.ஆனால் இந்த கல்வெட்டிற்கு இந்த புத்தகம் என சேர்க்க வேண்டும். நானும் கிட்டத்தட்ட கல்வெட்டு சம்பந்தமான இருபது புத்தகங்களை சேகரித்துள்ளேன். இனி அவற்றை கோர்வையாக சேர்த்து அது பற்றிய தகவல்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்தால் தான் அதை அனைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்
இந்த கோவிலை சுற்றி வரும் போது தனியாக ஒரு சிலை நின்று கொண்டிருந்தது. அது ஒரு விஷ்ணு சிலை என்று நினைக்கின்றேன். அந்த சிலை சிதிலமடையாமல் நல்ல நிலையில் இருந்தது. தூண்களிலும் அழகிய நல்ல வேலைப்பாடுகள் இருந்தன.
இந்த மறவனீஸ்வரர் மகாதேவர் கோவிலை புகைப்படம் எடுத்து விட்டு அதற்கடுத்தபடியாக இருவர் கோயில் என்ற மிகப் பிரபலமான ஒரு சிறிய கோவிலுக்கு சென்றோம். அந்த கோவில் கதவு அடைக்கப்பட்டிருந்தது. கோவில் பூசாரி வருவதற்கு நேரம் ஆனதால் அதுவரை பொறுமையாக காத்திருந்தோம். அவர் வந்ததும் எங்களின் கேமராவை பார்த்து பயந்துவிட்டார். உடனே எங்களிடம் வந்து ஐயா தயவு செய்து படம் எடுக்க வேண்டாம் என்று கூறினார். ஏனென்றால் நாங்கள் வருவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு ஒருவர் உள்ளே வந்து படம் பிடிப்பதாக கூறிவிட்டு அங்கே இருக்கும் கல்வெட்டுகளில் சுண்ணாம்பு கட்டியை வைத்து தேய்த்து அதை படிக்கிறேன் என்று கூறி வலையொளியில் (Youtupe) பதிவேற்றம் செய்திருக்கிறார்.
இந்த கோவில் அறங்காவலர்களின் பாதுகாப்பில் இருப்பதனால் அதை அறங்காவலர்கள் பார்த்து விட்டு அந்த கோவில் பூசாரியிடம் யாரை கேட்டு அனுமதி கொடுத்தாய் என்று சரமாரியாக திட்டியிருக்கிறார்கள். அந்த பூசாரிக்கு சம்பந்தபட்ட துறையிலிருந்து எச்சரிக்கை கடிதம் வந்தமையால் அவர் சற்று பயந்த நிலையில் இருந்தார்.
இது ஒரு சிறிய கோவில் தான் அதன் தகவல்களை சேகரித்து மக்களுக்கு பயனுள்ளதாக கொண்டு செல்ல அனுமதி அளித்ததிற்காக திட்டியிருக்கிறார்கள். இவர்களும் செய்ய மாட்டார்கள் செய்ய முற்படுபவர்களையும் அனுமதிக்கவும் மாட்டார்கள்.
 
அப்படி இருந்தும் எங்களிடம் கொஞ்ச நேரம் பழகப் பழக சில முக்கியமான சிலைகளை மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதித்தார். இந்த கோவிலில் ஒரு கம்பீரமான சிங்க சிலை தனியாக நின்று கொண்டிருந்தது. இந்த சிங்க சிலையை நான் இதுவரை சென்ற நிறைய கோவில்களில் பார்த்திருக்கிறேன். சீனாவில் எங்கு பார்த்தாலும் இதே அமைப்புடைய சிலைகளை காணமுடியும்.
பல்லவர்கள் சிங்க உருவம் பொறித்த கொடியை பயன்படுத்தியதால் அவர்கள் காலத்தில் கட்டிய கோவில்கள் அனைத்திலும் இந்த சிம்ம சிலைகளை பார்க்கமுடியும்.
ஆனால் சீனாவில் இருக்கும் சிலைகளுக்கும் இங்கே இருக்கும் சிலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. சீனர்கள் நம்மைப் பார்த்து இது போன்ற சிலைகளை அங்கு அமைத்தார்களா அல்லது நாம் அவர்களை பார்த்து சிலைகளை அமைத்தோமா என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. அங்கே இருக்கும் சிலைகளை படம் பிடித்து வைத்திருக்கிறேன். அதையும் உங்களுக்கு காண்பிக்கிறேன். நீங்களே இந்த இரு வேறு நாடுகளில் இருக்கும் சிலைகளுக்களில் இருக்கும் ஒற்றுமையை பார்த்து புரிந்து கொள்ள முடியும்.
இந்த இருவர் கோவில் இன்றளவும் பழமை மாறாமல் அப்படியே இருக்கிறது. இக்கோவிலில் ஒரு கல்வெட்டானது கேற்பாடற்று கீழே கிடந்தது. இந்த கோவிலில் மின்சார விளக்குகள் போடுவதற்காக அதன் மேற்கூரைகளில் பிளாஸ்டிக் குழாய்கள் கோர்க்கபட்டு அதன் அழகை கெடுத்து வைத்துள்ளனர்.
இந்த கோவிலின் கோபுர அமைப்பானது நான் இதற்கு முன்பு பார்த்த கொடும்பாளூர் கோவிலின் அமைப்புகள் போன்றே இருந்தது. கோபுரத்தின் நான்கு பக்கமும் நந்தி சிலைகள் கடவுள் சிலைகள் இருந்தன. இதிலுள்ள சிலைகள் அனைத்தும் சிதிலமடையாமல் நல்ல நிலையில் இருந்தன.
ஒரு கருங்கல் சிலை கோவில் சுவற்றின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது மிக அழகாக கலை நயத்துடன் செய்யப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு உடை ஆபரணங்கள் அணிந்திருந்தார்கள் என்பதை கண்முன் கொண்டு வந்து நிருத்தியிருந்தார் அந்த சிலையை செதுக்கிய சிற்பி. ஒரு கைதேர்ந்த சிற்பியால் செதுக்கப்பட்ட அந்த சிலையானது சிற்ப கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது.
கொடும்பாளூரில் கூட நான் இவ்வளவு அழகான சிலையை பார்க்கவில்லை. கோவிலின் அடிப்பகுதியில் தொடர்ச்சியாக யாழிகள் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. இந்த கோவிலை பொறுத்தவரை எண்ணற்ற சிற்பங்கள் மிக நேர்த்தியாக செதுக்கபட்டிருந்தது. இது ஒரு சிற்ப சாஸ்திர அடிப்படையில் கட்டப்பட்ட கோவிலாகும். சமீபத்தில் என் சகலையிடம் இந்த கோவில் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டிருந்த போது தற்செயலாக அவரின் யாகசாலையில் ஆமை முகம் இருப்பதை பார்த்து விட்டு அது பற்றி கேட்க ஆரம்பித்தேன். எதற்காக ஆமை முகம் நான் நிறைய கோவில் கோபுரங்களில் இந்த ஆமை முக சிற்பங்களை பார்த்திருக்கிறேன். ஆமைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றேன். பின்னர் அவர் கூறுகையில் சிற்ப கலையில் ஆமை மிக முக்கிய வாஸ்து சாஸ்த்திரமாக பார்க்கப்படுகிறது.
ஆமையின் ஓடு அதிக எடையை தாங்கக்கூடிய வல்லமை கொண்டது. அதனால் அவற்றிற்கு நம் முன்னோர்கள் அந்த காலம் தொட்டே இன்றளவும் சிற்ப சாஸ்திரத்தில் ஆமைக்கு முக்கியத்துவம் அளித்து வாஸ்துவில் அதற்கென்று தனி இடம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த கோவில் சுவற்றில் சிவனும் பார்வதியும் நடனமாடும் கோலத்தில் ஒரு சிலை உள்ளது. சற்று சிதிலம் அடைந்திருந்தாலும் இது ஒரு அற்புதமான படைப்பு என்று கூறலாம்.
இந்த பழுவேட்டரையர் கோவில்களில் முகம் மட்டும் பொறித்த சிற்பங்களும், முழு உருவ சிற்பங்களும், அமர்ந்தபடி உள்ள சிற்பங்களும் இருந்தன. இந்த சிற்பங்கள் சிறியதாக அழகாக இருந்தது.
இந்த கோவிலில் உள்ள சிற்பங்களை பற்றி ஆராயும்போது அந்த கால சிற்ப சாஸ்திரத்தையும் நன்கு கற்று தெரிந்து கொள்ளவது அவசியம் என்பதை உணர்ந்து கொண்டேன். மற்றும் இந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் நான்கு பக்கமும் அழகான கருங்கற்களால் செதுக்கப்பட்ட சிலைகள் அமர்ந்த வண்ணம் ஆசீர்வதித்த படி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கோவில் சுவரில் கல்வெட்டுகள், தூண்களில் அழகிய தோரணங்கள் பழுவேட்டரையர்களால் கட்டப்பட்ட கொடும்பாளூர் கோவில்களில் பார்த்தது போலவே கலை நுணுக்கத்தோடு செதுக்கபட்டிருந்தது.
இந்த இரண்டு கோவில்களின் அமைப்பை பார்க்கும் போது இவை இரண்டும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டதாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மற்றுமொரு தகவல் என்னவென்றால் இந்த பழுவேட்டரையர்கள் சேரர்களின் வழி தோன்றியவர்கள் என ஒரு புத்தகத்தில் படித்திருகின்றேன். ராஜராஜ சோழன் காலத்தில் அவர்கள் மிகவும் பிரபலமானவர்களாக அவர்களுக்கென்று தனி கொடி, சின்னம் வைத்திருக்கும் அளவிற்கு சோழ மன்னர்களுக்கு நிகரான அதிகாரம் கொண்டவர்களாக விளங்கியதை பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி தெளிவாக குறிப்பிட்டிருப்பார்.
 
ஆனால் ராஜேந்திர சோழனின் காலத்தில் கிட்டத்தட்ட அவர்கள் மறைந்தே போயிருப்பார்கள். இடைப்பட்ட காலகட்டத்தில் அவர்களுக்குள் என்ன ஆனது என்பது தெரியவில்லை. பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன் கொலைக்கு காரணம் யார் என்பதில் பலரின் பெயர்கள் சொல்லபட்ட நிலையில் பழுவேட்டரையர்கள் பெயரும் சொல்லப்பட்டது. ஒருவேளை அது மாதிரியான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு படிப்படியாக அவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மறைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
கொடும்பாளூரில் இருக்கும் கோபுரங்களும் சிலைகளும்,இந்த இருவர் கோவில்களில் இருக்கும் கோபுரங்கள் மற்றும் சிலைகளின் அமைப்பும் ஒரே கால கட்டுமானங்களாக இருக்கலாம். ஆனால் ஒரு சில வித்தியாசங்களும் தெரிகிறது. இந்த இரண்டு கோவில்களின் கட்டுமானத்திற்கு அவர்கள் வெவ்வெறு வகையான கற்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஏனென்றால் கொடும்பாளூரில் இருக்கும் சிலைகள் காலப்போக்கில் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஆனால் இங்கு உள்ள சிலைகள் சிதிலம் அடையாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கருங்கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் சிலைகள் இன்றளவும் சிறிதும் சிதிலம் அடையாமல் தெளிவாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
 
கடைசியாக இந்த கோவிலில் ஒரு தகவல் பலகை இருக்கிறது. அதில் இந்த கோவில் பற்றிய விவரங்களை எழுதி இருக்கிறார்கள். அது என்னவென்றால் கீழையூர் இரட்டை கோபுரங்கள் சோழ மன்னர்களின் சிற்றரசர்களாகிய பழுவேட்டரையர்களின் தலைநகர் பழுவூரின் ஒரு பகுதியாகும். இங்குள்ள அவனிகந்தர்ப்ப ஈசுவரகிருக வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. வடபுறத்தில் உள்ள கோவில் வடவாயில் (சோழீஸ்வரம்) என்றும், தென்புறத்தில் உள்ள கோவில் தென்வாயில் ஶ்ரீ கோவில் (அகத்தீசுவரம்) என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பழுவேட்டரையர் சிற்றரசர்களில் குமரன்கண்டன் மற்றும் குமரன் மறவன் காலத்தில் இக்கோவில்கள் கட்டப்பட்டன. இவை கி.பி 9- ஆம் நூற்றாண்டின் முற்காலச் சோழர் கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இது போன்று வரலாற்று சம்பந்தமான அனைத்து இடங்களிலும் அதன் சிறப்புகள் பற்றி எழுதிருந்தால் வரலாற்று ஆராச்சியாளர்கள் மட்டுமல்லாது சுற்றுலாவிற்காக அதனை பார்வையிட வரும் வெகுஜன பாமர மக்களும் அதன் வரலாற்று சிறப்புகளை எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.
இதோடு பழுவேட்டரையர்களால் கட்டப்பட்ட கோவில்கள் பற்றிய நமது ஆராய்ச்சி முடிவடைகிறது. இனி அடுத்த பதிவில் தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றி பார்ப்போம்.

Leave a Comment

Your email address will not be published.

Paluvatayar Temples (பழுவேட்டரையர் கோவில்)

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page