சோழர்கள் பற்றிய ஆராய்ச்சி தேடலில் சோழர்களின் வீரம் எத்தகையது அவர்களின் முற்போக்கான சிந்தனை எத்தகையது என்பதனை பற்றி அவர்களால் எழுப்பப்பட்ட கோவில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், மற்றும் சிற்பங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம்.
ஆனால் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இத்தமிழ் மண்ணின் பெருமையின் அடையாளமாக விளங்கக்கூடிய தஞ்சை பெரிய கோவில் என்னும் மாபெரும் அதிசயத்தை கட்டிய பெரும் புகழிற்கு சொந்தக்காரனான உடையார் ஸ்ரீ இராஜராஜ சோழத்தேவரின் மணிமண்டபத்தின் அவல நிலை பற்றியும், அங்கு சென்ற அனுபவத்தை பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இந்த இராஜராஜ சோழனின் மணிமண்டபமானது தாராசுரத்திற்கு அருகே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உடையாளூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் ஸ்ரீ இராஜராஜ சோழனிற்காக எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோவிலாகும். இந்த பள்ளிப்படை கோவிலானது பாண்டியர்களின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டிருக்கலாம். தற்பொழுது ஓர் சிவலிங்கம் மட்டுமே எஞ்சி உள்ளது.
இந்தப் பள்ளிப்படை கோவில் குலோத்துங்கனின் சிவபாதசேகர மங்கலமே உடையாளுர் கல்வெட்டுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு கூறும் தகவல்பதாகை அங்கே வைக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டானது இராஜராஜ சோழனின் மணிமண்டபத்தின் அருகே அமைந்துள்ள அம்மன் கோவிலில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது .
இந்த இராஜராஜ சோழனின் மணிமண்டபத்தினை நாங்கள் தேடி கண்டுபிடிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு அங்கே நம் தமிழ் பெரும் பாட்டன் இராஜராஜ சோழனின் சதய விழா நடந்திருப்பதை பல்வேறு சமூக சாதிய சிந்தனை உள்ளவர்களால் அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மூலம் அறிந்து கொண்டோம்.
அந்த பதாகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாதிய குறுகிய வட்டத்திற்குள் நம் தமிழ் பெரும்பாட்டன் இராஜராஜ சோழனை சுருக்கி தனக்கான தலைவனாக சொந்தம் கொண்டாடி கொள்ள துடித்துக் கொண்டிருப்பதை கண்டு எங்கள் மனம் கலங்கியது. இராஜராஜனை சுற்றி இப்படியான அரசியல் சூழ்ச்சி நடைபெறுவதை கண்டு மனம் வேதனையும் அடைந்தது.
இவ்வாறு இருக்க அவனின் மணிமண்டபமாவது மிகப் பெரிய அளவில் இருக்கக்கூடும் என்று நானும் என் சகோதரனும் மிகுந்த ஆவலுடன் அதனை தேடி அலைந்தோம். ஆனால் இராஜராஜ சோழனின் சமாதியை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அங்கே உள்ளவர்களிடம் மணிமண்டபத்தினை பற்றி விசாரித்த போது நாங்கள் இராஜராஜ சோழனின் சமாதியை தாண்டி சென்றது தெரிய வந்தது. பின்னர் நாங்கள் சென்ற வழியே திரும்பி வந்த போது இராஜராஜ சோழனின் பள்ளிப்படை கோவிற்கு செல்லும் வழி குறிப்பிடப்பட்டிருந்தது.
அது மிக குறுகிய பாதை ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் சென்று திரும்ப முடியாத வகையில் இருபுறமும் முள்வேலிகள் அமைக்கப்பட்டு மிகச் சிறியதாக இருந்தது.
அந்த பாதையும் இராஜராஜ சோழனின் பள்ளிப்படை கோவிலுக்கு செல்லக்கூடிய தனிப்பட்ட பாதை அல்ல. அதனை சுற்றியுள்ள தோட்டங்களுக்கு செல்லக்கூடிய பாதை ஆகும். அப்பாதையில் சிறிது தூரம் நடந்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது ஓர் வீட்டின் கொல்லைப்புறத்தில் சாய்ந்த நிலையில் சிறிய சிவலிங்கம் ஒன்று இருந்தது. அதனை கண்டதும் நாங்கள் இருவரும் ஒரு நிமிடம் திகைத்து நின்றோம்.
இந்தியா மட்டுமல்லாது கடல் கடந்து கிட்டத்தட்ட தெற்காசியாவையே ஆண்ட ஸ்ரீ இராஜராஜ சோழத்தேவரின் சமாதி இவ்வளவு எளிமையாக இருப்பதை பார்க்கும் பொழுது நம் கண்களில் வழியும் கண்ணீரையும் மன இறுக்கத்தையும் யாராலும் மறுக்க முடியாது.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் நம் தமிழர்களின் பெருமைக்குரிய உடையார் ஸ்ரீ இராஜராஜ சோழனின் பள்ளிப்படை கோவிலானது இந்த நிலையில் இருப்பதை கண்டதும் எங்கள் மனம் மிகவும் வருந்தியது.
தமிழ்நாட்டிலேயே மிக சிறந்த மன்னர் யார் என்று கேட்டால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரிய கோவிலை கட்டிய நமது இராஜராஜ சோழன் மட்டும் தான். அவருக்கு இணையாக இராஜேந்திர சோழனை சொல்லலாம். ஏனென்றால் ஏற்கனவே நிறுவிய ஒன்றை நிர்மாணிப்பது பெரிய செயல் அல்ல, புதிய ஒன்றை உருவாக்குவதே ஆகப் பெரிய செயலாகும்.
இக்காலத்தில் திரையில் தேவையற்ற வசனங்கள் பேசி, கவர்ச்சிகள் காட்டி பிழைப்பு நடத்தும் ஓர் சாதாரண நடிகர் நடிகைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி அவர்களுக்கு பல கோடிகளில் கோவில்கள் எழுப்பும் தமிழர்களால் ஏன்? நம் தமிழ் மண்ணின் மைந்தனான இராஜராஜ சோழனிற்க்கு ஓர் மணிமண்டபத்தினை கட்ட தோணவில்லை என்பதை நினைக்கும் போது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
அதோடு மட்டுமல்லாது இந்த மணிமண்டபத்தினை சுற்றி நிறைய காலியிடங்கள் இருந்தும் அரசாங்கம் இதனை மேம்படுத்தாதது ஏன்? இங்கே அகழாய்வு பணி மேற்கொள்ளாதது ஏன்? மற்றும் இராஜராஜ சோழனின் அருங்காட்சியகம் அமைக்காதது ஏன்? என்ற பல கேள்விகள் என்னுள் எழுந்தன.
கீழடியில் பல கட்டங்களாக அகழாய்வு பணியினை மேற்கொள்ளும் அரசாங்கம். இந்த உடையாளூரில் இருக்கின்ற நம் இராஜராஜ சோழனின் பள்ளிப்படை கோவிலையும் அகழாய்வின் மூலம் உடையாளூரில் மண்ணில் புதைந்து கிடக்கின்ற இராஜராஜ சோழனின் வரலாற்றின் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.
கீழடி ஆராய்ச்சியில் கிடைக்கப்பட்ட பொருட்கள் நமது தொன்மையை கூறினாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் கலாச்சாரத்தையும், வீரத்தையும் கடல் கடந்து கொண்டு சென்றவன் நம் இராஜராஜ சோழன். அப்படிப்பட்ட ஒருவனுக்கு உரிய மரியாதை அளித்து இங்கே மணிமண்டபம் அமைக்காதது மிகப்பெரிய வருத்தமாக உள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் இராஜராஜ சோழனின் பள்ளிப்படை கோவில் பற்றிய எந்த ஒரு தகவல் பலகையும் அரசாங்கத்தினால் வைக்கப்படவில்லை. ஒரு துருப்பிடித்த முள்வேலியில் கிடந்த ஓர் அறிவிப்பு பலகை மட்டுமே உள்ளது. அதனை பார்க்கும் பொழுது எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும் காலத்தின் சுழற்சியில் தூக்கி வீசப்படுவர் என்பது ஊர்ஜிணமாகியுள்ளது. காலத்தையும் தாண்டி நிற்ப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.
இந்த மணிமண்டபத்தினை கண்ட பொழுது இதனைச் சுற்றியுள்ள இடங்களை விலைக்கு வாங்கி இராஜராஜ சோழனின் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவானது. என்னுடைய கணக்கிடுதலின்படி இதனை செய்து முடிப்பதற்கு குறைந்தது கிட்டத்தட்ட இரண்டு கோடிகள் செலவாகும்.
ஆனால் அவ்வளவு வசதி என்னிடம் இல்லை. ஆகையால் என்னுடைய ஆராய்ச்சி சம்பந்தமான இணையதளத்தை நான் வெளியிட்ட பின் அதன் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் கிடைக்கும் வருவாயினை இந்த பெருங்காரியத்தை செய்யவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.
தமிழர்களை பொருத்தவரையில் நன்றி மறந்தவர்கள் என்று சொல்லலாம். தன் வரலாற்றின் தொன்மை என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பாத மூடர்களாகவும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொருவரும் நூறு ரூபாய் கொடுத்தாலே போதும். இராஜராஜ சோழனின் மண்டபத்தினை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் கட்டியிருக்க முடியும். ஆனால் அதனை செய்வார்களா என்பது சந்தேகம் தான். தமிழ்நாட்டு மக்கள் மதுவிற்க்கு அடிமையாகி சினிமா பைத்தியங்களாக திரிகின்ற வரையில் இது நடந்தேறாது.
மிக நீண்ட நெடிய தூக்கத்தில் தமிழன் தற்போது இருக்கிறான் என்பதை நான் உறுதியாக சொல்வேன். இந்த மது மற்றும் சினிமா மோகத்தின் மீதான தூக்கத்திலிருந்து விழிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.
இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் கால கட்டத்தில் நாகரீகத்திலும் வீரத்திலும் நாம் மிகவும் முற்போக்கான சிந்தனைகள் கொண்ட தமிழர்களாக பல ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அதற்கு நேர் எதிர்மறையாக மற்ற நாடுகளை விட பல நூறு ஆண்டுகள் பின்தங்கி நம் வாழ்வியலை மறந்து நிற்க்கின்றோம்.