சோழர்கள் பற்றிய எனது வரலாற்று தேடலானது மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த வரலாற்று தேடலின் மிக முக்கியமான ஓர் இடமாக சிங்கப்பூர் அருங்காட்சியகத்தை குறிப்பிடலாம். அந்த சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் அங்கே உள்ள சிங்கப்பூர் தமிழர்களால் சோழர்களைப் பற்றிய வரலாற்று சான்றுகள் அடங்கிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியானது கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கே நடைபெற்றது. நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் எனது குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருந்த பொழுது இந்த கண்காட்சி பற்றி கேட்டறிந்தேன். பின்னர் நானும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த கண்காட்சியை பார்வையிட சென்றிருந்தோம். அங்கே சோழர்களைப் பற்றிய எண்ணற்ற நல்ல தகவல்களும், விளக்க உரைகளும் கொடுக்கப்பட்டிருந்தன.
இராஜராஜ சோழன் காலகட்டத்தில் தமிழர்கள் வாணிபத்தில் மிகவும் சிறந்து விளங்கியுள்ளனர். ஒரு காலகட்டத்தில் சோழர்கள் தென் கிழக்கு ஆசியாவில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி இருந்துள்ளனர். சோழர்கள் நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கு ஆசியாவிற்கு சென்று வாணிபம் செய்ததோடு மட்டுமல்லாமல் அங்கிருந்து சீன நாட்டிற்கும் சென்று வாணிபம் நடத்தி மிகவும் சீரும் சிறப்போடும் வாழ்ந்துள்ளனர். இதில் எத்தனையோ வணிகக் குழுக்களும் இருந்துள்ளன.
இராஜராஜ சோழன் காலகட்டத்தில் ஸ்ரீ விஜய பேரரசு, சோழப் பேரரசுடன் மிக இணக்கமான நட்புறவையே கொண்டிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நாகப்பட்டினத்தில் சூடாமணி புத்த விகாரம் அமைப்பதற்கு இராஜராஜ சோழனால் ஸ்ரீ விஜய மன்னருக்கு இடம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புத்த விகாரமானது கி.பி 1006 ஆம் ஆண்டில் ஸ்ரீ விஜய மன்னரான மாற விஜய தூங்கவர்மனால் கட்டப்பட்டுள்ளது. அந்த புத்த விகாரமானது 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்பொழுது அதன் எச்சங்களாவது இருக்கின்றதா என்று தெரியவில்லை.
இவ்வாறு சோழநாடும் ஸ்ரீ விஜயமும் ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில் நாளடைவில் சோழர்களின் வாணிபத்தின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட ஸ்ரீவிஜய மன்னன் சோழ நாட்டு வணிகர்களுக்கு கூடுதல் வரி விதித்தது மட்டுமல்லாமல் அதனை தர மறுக்கும் வணிகர்களின் இரண்டு உள்ளங்கைகளை கூர்மையான கத்தியால் சீவி அந்த இரண்டு கைகளையும் கைகூப்பி வணங்குவது போல் ஒன்றிணைத்து கட்டி ஸ்ரீ விஜய தெருக்களில் உலா வரச் செய்துள்ளான். அப்படி ஒன்றிணைத்து கட்டப்பட்ட கைகள் பின் நாட்களில் பிரிக்க முடியாமல் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நிரந்தரமாக இருக்கும் வகையில் மிகக் கொடுமையான தண்டனையை வழங்கியுள்ளான்.
இந்த செயலானது இராஜேந்திர சோழனை மிகவும் கோபம் கொள்ளச் செய்தது. இதுவே ஸ்ரீ விஜயத்தின் மீது போரிட காரணமாகவும் அமைந்தது. ஸ்ரீ விஜய மன்னன் இராஜேந்திர சோழனின் நேரடி தாக்குதலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த பொழுது சுமத்ரா தீவை சுற்றி வளைத்து திடீர் தாக்குதலை நடத்தி ஸ்ரீ விஜய மன்னனை நிலைகுலைய வைத்து அப்போரில் தோற்கடித்தான் நம் இராஜேந்திர சோழன்.
இந்த கண்காட்சியில் இராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசியாவில் எந்தெந்த இடங்களை கைப்பற்றினார் என்ற தகவல்கள் அடங்கிய இராஜேந்திர சோழன் படையெடுப்பை கூறும் தஞ்சாவூர் கல்வெட்டு தகவல் பதாகை அங்கு வைக்கப்பட்டிருந்தது. அதில்
மாப்பெரு தண்டாற் கொண்ட கொப்பர கெஸரிவந்மரான உடையார்ஸ்ரீ இராஜேந்திர சோழத்தவருக்கு யாண்டு.
இந்த கல்வெட்டு செய்தியானது இராச ராஜேந்திரத்து கர்ப்பக்கிருகத்தின் தென் புறத்தில் உள்ள கல்வெட்டின் இரண்டாம் படை வரிசையில் காணப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அருங்காட்சியகத்தில் இராஜேந்திர சோழன் கம்போடியா அரசர்களுக்கு அவர்களின் எதிரிகளை தோற்கடிக்க உதவி செய்ததாக கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஆளுமை மிக்க சோழர்களைப் பற்றி சோழர்களின் வாழ்வும் வீழ்ச்சியும் எழுச்சியும் என்ற தலைப்பில் எழுத இருக்கின்றேன்.
இந்த கண்காட்சியில் ஓர் தகவல் பலகையில் இராஜேந்திர சோழன் சீனப்பேரரசர்களுக்கு கப்பம் கட்டினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஓர் மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாகவே நான் கருதுகின்றேன். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தவறான தகவலை வெளிப்படுத்திய கண்காட்சி ஏற்பாட்டாளர்களை நேரில் சந்தித்து இது பற்றி வாதிட வேண்டும் என்று நினைத்து அவர்களின் அலுவலகத்தை நோக்கி விரைந்தேன். ஆனால் அவர்களை அப்போது என்னால் சந்திக்க முடியவில்லை.
சோழர்கள் எக்காலத்திலும் யாரிடத்திலும் பணிந்து சென்றதாக எந்தவொரு வரலாற்று ஆதாரங்களும் கிடைக்கப் பெறாத நிலையில் சீனர்களிடம் மட்டும் எப்படி பணிந்து சென்றிருக்க முடியும். சோழர்கள் சீனாவிற்கு வியாபார நோக்கத்திற்காக மட்டுமே சென்றார்களே தவிர சீனர்களிடம் அடிபணியும் அளவிற்கு சோழர்கள் கோழைகள் அல்ல. சோழர்கள் சீனர்களை எந்த காலகட்டத்திலும் மதித்தது கிடையாது.
முதலாம் குலோத்துங்க சோழன் இளவரசனாக இருந்த பொழுது சீனாவிற்கு கப்பல் படையுடன் சென்று அவர்களை சந்தித்தான் என்ற குறிப்புகள் உள்ளன. ஆனால் இந்த இரண்டு நாட்டினரும் ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொண்டார்களே தவிர யாருக்கும் யாரும் அடிமையாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதே உண்மை. ஏனென்றால் சீனர்களை விட சோழர்களே அதிக நாட்டை கைப்பற்றி ஆட்சி புரிந்துள்ளனர். அந்த அருங்காட்சியத்தில் இந்த ஒரு குறிப்பு மட்டும் மிகத் தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தது.
அக்காலகட்டத்தில் தமிழர்களை விட சீனர்கள் மிகப் பிரம்மாண்டமான கப்பல் படையினை வைத்திருந்தாலும் எந்த நாட்டையும் கைப்பற்றியதாக எந்தவொரு வரலாற்றுக் குறிப்பிலும் இடம் பெறவில்லை. பல நாடுகளை கைப்பற்றிய சோழர்கள் சீனர்களிடம் அடிபணிந்து வாழ்ந்தனர் என்பதனை நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு வரலாற்று சான்றுகளும் இல்லை. இது போன்ற தவறான தகவல்களை அங்கே பார்த்தபொழுது நான் மிகவும் மன வேதனை அடைந்தேன்.
சீனர்கள் தான் படை பலத்தில் சிறந்து விளங்கினர் என்றால் இராஜேந்திர சோழன் ஸ்ரீ விஜயத்தை படையெடுத்து வென்ற பொழுது அன்றைய காலகட்டத்தில் அவர்களுடன் வாணிபத் தொடர்பில் இருந்த சீனர்கள் ஏன் சோழர்களின் மீது எதிர் தாக்குதல் நடத்தவில்லை. சோழர்கள் சீனர்களிடம் அடிபணிந்திருந்தனர் என்றால் எதிர் தாக்குதல் நடந்திருக்க வேண்டுமே அப்படி ஏதும் நடந்திராத பொழுது சீனர்கள் சோழர்களை தொட அஞ்சினர் என்று தானே அர்த்தம்.
சிங்கப்பூரில் மற்றுமொரு அருங்காட்சியகம் செந்தோஷாவில் உள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கப்பல்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் 99% சதவீத விழுக்காடு கப்பல் படையில் சீனர்களே சிறந்து விளங்கியதாக கூறப்படுகின்றது. ஆனால் அந்த சிங்கப்பூரையே தன் ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டு வந்த இராஜேந்திர சோழனின் படைத்திறனை பற்றியோ, கப்பல் படை பற்றியோ, வாணிபத்தை பற்றியோ அங்கே எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஏனென்றால் சிங்கப்பூரை பொறுத்தவரையில் சீன நாட்டினரே அதிகமாக வாழ்கின்றனர். தமிழ் மக்கள் சற்று குறைவாகவே வாழ்கின்றனர். எப்பொழுதும் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் சிறுபான்மையினரை சற்று குறைவாக மதிப்பிடுவது இன்று வரையிலும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் வரலாற்றை யாராலும் எந்த கால கட்டத்திலும் மறைத்து விட முடியாது.
இத்தருணத்தில் போர்க் குணமிக்க நம் தமிழர்களின் வீரத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது மிகவும் பிரமிப்பாக உள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளேன். இது சம்பந்தமான எந்தவொரு தகவல்களையும், சந்தேகங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம். இத்துடன் சிங்கப்பூர் அருங்காட்சியம் பற்றிய தகவல்கள் நிறைவடைந்தன.
இனி எனது அடுத்த பதிவான சோழர்களின் வாழ்வும் வீழ்ச்சியும் எழுச்சியும் என்ற தலைப்பில் சோழர்கள் கைப்பற்றிய நாடுகள் பற்றியும், சோழர்களின் வாணிபத்தை பற்றியும், அதனால் ஏற்பட்ட இன்னல்கள் பற்றியும், விரிவாக உங்களுக்கு கூற கடமை பட்டிருக்கின்றேன். இனி சோழர்களின் வாழ்வும் வீழ்ச்சியும் எழுச்சியும் என்ற தலைப்பில் மீண்டும் சந்திப்போம். நன்றி வணக்கம்.