Thailand chola (தாய்லாந்து சோழர்கள்)

நாம் சோழர்களின் ஆராய்ச்சி பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக தாய்லாந்தில் உள்ள சோழர்களின் தடயங்கள் பற்றி இனி வரும் பதிவில் பார்ப்போம்.  இந்த தாய்லாந்து சோழர்களைப் பற்றி நான் பீமாயில்  எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அழிந்து போய் விட்டன. அதே சமயம் தலைநகரம் பேங்க்காக்கில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு சென்று எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் என்னிடம் தான் பத்திரமாக இருக்கின்றன. பீமாயில் ஒரே ஒரு கோவில் மட்டும் தான் இருக்கின்றது . இந்த பீமாயில் உள்ள அருங்காட்சியமானது மிகவும் அற்புதமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 
 பீமாய் என்ற நகரிற்க்கு அருகில் தான் நான் பணி புரிகின்ற தொழிற்சாலை அமைந்துள்ளது.  என் தொழிற்சாலையில் இருந்து பணி நிமித்தமாக அங்கு சென்று இருந்தேன். அன்று சனிக்கிழமை வேலை நாள் என்பதால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை தினத்தன்று இந்த பீமாய் நகரில் உள்ள வரலாற்று சார்ந்த இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும்  என்று என்று முடிவெடுத்திருந்தேன். பின்னர் வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்து தரும்படி எனது நண்பரிடம் கேட்டுக்கொண்டேன்.  அவரும்  வாடகை வாகனம் ஒன்றினை ஏற்பாடு செய்து கொடுத்தார்.
 அந்த வாடகை வாகன ஓட்டுனரிடம் ஏதேனும் வரலாற்று சார்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லும்படி சொன்னபோது அவர் ஓர் ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள சற்று ஒதுக்கு புறமான அழகிய கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த கிராமத்திற்கு சென்று பார்த்த 
பொழுது பெரிய பெரிய குழிகள் தோண்டப்பட்டு அதில் எலும்புக்கூடுகள் இருந்தன. அந்த இடத்தினை பார்க்கும் பொழுது அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களை புதைக்கப்பட்ட இடம் போல தெரிந்தது. அந்த இடத்தில் சிவலிங்கத்தின் அடிப்பாகங்கள் இருந்தன. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மன்னர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் இறந்த பிறகு அவர்களை மண்ணில் புதைக்கப்பட்ட இடத்தில் சிவலிங்கத்தினை வைத்து பள்ளிப்படை கோவில் எழுப்பி வழிபாடு செய்வது சோழர்களின் வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த முறையை இங்கேயும் பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாக இருந்தது. ஆனால் இங்கே எந்த ஒரு தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.
 
அடுத்ததாக என்னுடைய ஆர்வத்தை பார்த்த அந்த வாடகை வாகன ஓட்டுநர் என்னிடம் ஐயா இந்த இடத்திற்கு அருகில் ஓர் அருங்காட்சியகம் இருக்கின்றது. அங்கே இது போன்ற நிறைய இந்து கடவுள்களின் சிலைகள் இருக்கின்றன என்றார்.
  அந்த வாடகை வாகன ஓட்டுநர்  அருகில் பீமாய் என்ற கோவில் இருப்பதாகவும், அந்த கோவிலானது பார்ப்பதற்கு அங்கோர்வாட் கோவிலை போன்று இருக்கும் எனவும், ஆனால் அளவில் சற்று சிறியதாக இருக்கும் எனவும், ஆனால் அங்கோர்வாட் கோவிலுக்கு முன்பே கட்டப்பட்டது என்றும் கூறினார்.  உடனே நான் அங்கே என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றேன்.   அங்கு சென்று பார்த்த பொழுது அவர் கூறியது போலவே அந்த கோவிலானது அங்கோர்வாட் கோவிலை போன்றே இருந்தது. நான் நினைத்துப் பார்க்காத அளவிற்கு நிறைய தகவல்களும் அங்கே இருந்தன .
 அந்தக் கோவிலின் சுற்றுச்சுவரானது மிகவும் பாழடைந்த நிலையில் இருந்தது . அந்த கோவிலை உற்று பார்க்கும் பொழுது அது ஓர் இந்து கோவில் என்றும் அதில் முன்னோரு காலத்தில் சிவலிங்க வழிபாடு நடந்திருப்பதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் தற்பொழுது கோவிலின் உள்ளே இருந்த சிவலிங்கத்தினை பெயர்த்து வெளியே எடுத்து விட்டு அதில் புத்தர் சிலையினை வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.
 அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மன்னர்கள் ஏதாவது ஒர் மதத்தினை தழுவிய உடனே புதிதாக அதற்கென்று தனியாக கோவில் கட்டாமல் முன்பிருந்த கோவில்களில் உள்ள சிலைகளை மட்டும் அப்புறப்படுத்தி விட்டு  அவர்கள் ஏற்று தழுவிய மதத்தின் கடவுள்களை அந்தக் கோவிலில் நிறுவி வழிபட்டு வந்துள்ளனர் என்பது இந்த கோவிலை பற்றிய ஆராயும் பொழுது எங்களுக்கு தெரிய வருகிறது. இதே போன்று தான் அங்கோர்வாட் கோவிலிலும் நடந்திருப்பதை காண முடிகிறது. 
 இந்த புத்த மதம் எந்த மன்னர் ஆட்சி காலத்தில் இங்கு கொண்டுவரப்பட்டது. இந்த புத்தர் சிலைகள் எந்த மன்னரின் ஆட்சி காலத்தில் அந்த கோவில்களில் வைக்கப்பட்டது என்ற தகவல்கள் ஏதும் அங்கே குறிப்பிடப்படவில்லை. இதனைப் பற்றி தனியாக ஆராய்ந்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
 இந்த பீமாய் என்ற கோவிலை சுற்றிப் பார்த்துவிட்டு அதனை நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். அந்த புகைப்படங்கள் தான் தொலைந்து போய்விட்டன. அதனை இன்று வரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் பயணம் மேற்கொண்டால் தான் இதனை பற்றிய முழுமையான தகவல்களை உங்களுக்கு எடுத்துக் கூற முடியும்.
 இந்த பீமாய் கோயிலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அதன் அருகே இருந்த கடைகளில் அங்குர்வாட் என்ற புத்தகம் விற்றுக் கொண்டிருந்தனர். அந்த புத்தகத்தில் இருந்த ஒரு சில புகைபடங்களை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில்  அங்கோர்வாட் என்ற தலைப்பில் நான் எழுதியதை இந்த இணையதளத்தில் பதிவேற்றி இருக்கின்றேன். 
    பீமாய் கோயிலை  சுற்றிப் பார்த்த பின் அதற்கு அடுத்தபடியாக அதன் அருகில் இருந்த  அருங்காட்சியகத்திற்கு வாடகை வாகன ஓட்டுனர் எங்களை அழைத்துச் சென்றார். அந்த அருங்காட்சியகத்திற்கு சென்று பார்க்கும் பொழுது    அங்கே வைக்கப்பட்டிருந்த இராமர் சிலை, ஹனுமான் சிலை, மற்றும் மன்னர்களின் சிலைகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சிலைகளின் சாயலில் இருந்தன.
 அங்கே ஆட்சி புரிந்த மன்னர் ராஜேந்திர சோழனின் மேல் கொண்ட அதீத பற்றின் காரணமாக அவனின் பெயரையும் ராஜேந்திரன் என்று மாற்றிக் கொண்டதாக அங்கு குறிப்பிடப்பட்டிருந்தது.
 அந்த அருங்காட்சியகத்தில் பல தமிழ் கல்வெட்டுக்களின் தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன.  ஆனால் அந்த எழுத்துக்கள் சமஸ்கிருத எழுத்துக்கள் என்று அந்த அருங்காட்சியகத்தில் கொடுக்கப்பட்ட துண்டு சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் எழுத்துக்களாக இருந்தன. உடனே வாகன ஓட்டுனரிடம் இதில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் ஆனால் இதில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றேன். அவர் அங்கிருந்த அருங்காட்சியக அலுவலர்களிடம் சென்று இதனை தெரிவித்தார். ஆனால் அவர்கள் எங்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது எங்களிடம் சமஸ்கிருதம் என்று கூறினார்கள் என்றனர்.
 அந்த அருங்காட்சியகத்தில் பல அரிய தமிழ் பொக்கிஷங்கள் நிறைய இருக்கின்றன. அதனால்தான் அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொலைத்தது மிகவும் வருத்தமாக இருக்கின்றது. ஏனென்றால் அங்குள்ள எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் தான் என்பதை நிரூபிக்கும் ஒரே ஒரு ஆதாரமாக அந்த புகைப்படங்கள் தான் என்னிடம் இருந்தன. நான் இன்னொரு முறை அதனை தேடிப் பார்க்கின்றேன் அப்படி கிடைக்காவிட்டால் மீண்டும் ஒரு முறை அங்கே பயணம் மேற்கொண்டு இதனைப் பற்றி உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக தெரியப்படுத்த முயற்சிக்கின்றேன். 
 அந்த அருங்காட்சியகத்தில் அக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொன்னாலான நகை ஆபரணங்கள் நிறைய காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன். ஆனால் அங்கே எடுத்த புகைப்படங்களை துளைத்து  விட்டதால்  என்னால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. அதற்குப் பதிலாக அந்த அருங்காட்சியத்தின் இணையதள இணைப்பை கீழே தந்துள்ளேன்.
https://www.Phimai National Museum :: Museum Thailand
 அடுத்ததாக நான் தாய்லாந்து தலைநகர்  பேங்காக்கில் உள்ள  அரண்மனைக்கு சென்றேன்.  இந்த அரண்மனையின் உள்ளே சென்று பார்க்கும் பொழுது அந்த காலகட்டத்தில் யானைப் படைகளை எப்படி வழிநடத்தி போர் புரிந்தார்கள்,  அந்தக் காலத்தில் அவர்கள் எப்படிப்பட்ட கப்பல்களை பயன்படுத்தினார்கள் என்பதனை தெரிந்து கொள்ளும் வகையில் அதற்கான மாதிரிகள் அங்கே செய்து வைக்கப்பட்டிருந்தன. தமிழ் மன்னர்களில் சோழர்கள் தான் மிகப்பெரிய நிலப்பரப்பினை ஆட்சி செய்த மன்னர்கள் ஆவர். சோழர்கள் கடல் கடந்து தாய்லாந்தை ஆட்சி செய்திருந்தாலும் கூட கட்டுமானங்களிலும்,போர் நெறிமுறையிலும் தமிழ்நாட்டில் உள்ள விதிமுறைகளையே பின்பற்றியுள்ளனர். அந்த அருங்காட்சியகத்தில் மிகவும் பழமையான எண்ணற்ற பல தகவல்கள்  அடங்கியுள்ளன. 
 
 தாய்லாந்தை பொருத்தவரையில் இன்று வரையிலும் அங்குள்ள அரசர்கள் தங்களை இராமரின் வம்சாவழியினர் என்று கூறிக் கொள்கின்றனர். இங்குள்ள மன்னர்கள் அவர்களின் பெயர்களில் கூட ராமவர்மன் என்று தான் அழைத்துக் கொள்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அங்கே ஆட்சி புரிந்த மன்னர்கள் இராமனை அவ்வளவு பெரிதாக எந்த ஒரு இடத்திலும் வெளிக்காட்டியதில்லை. சிவனை மட்டுமே புகழ்ந்து போற்றி முதன்மை கடவுளாக முன்னிறுத்தி பல ஆலயங்கள் எழுப்பி வழிபாடு செய்து வந்துள்ளனர்.  பின் நாட்களில் இந்தியாவின் வட தேசத்தில் இருந்து வந்த மன்னர்களின் தாக்கத்தினால் ராமர் என்ற பெயர் இணைந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.
ஆனால் இந்தியாவில் வட தேசத்திலிருந்து வந்த மன்னர்கள் யாரும் கடல் கடந்து படையெடுத்துச் சென்று நாடுகளை கைப்பற்றியதாக எந்த ஒரு வரலாற்று குறிப்புகளும் இல்லை. அவ்வாறு இருக்கையில் பிற்காலத்தில் வாழ்ந்த சோழர்களின் வம்சாவழியைச் சேர்ந்த ஏதேனும் ஒர் மன்னனால் தான் இராமனை போற்றி இங்கு எழுதி இருக்கக்கூடும்.
 
 ஏனென்றால் இங்கு மட்டுமல்ல தாய்லாந்திலும் இராமனையே முதன்மை கடவுளாக புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியாவில் வாழுகின்ற மக்கள் புத்த மதத்தை அதிகம் பின்பற்றினாலும் அந்நாடுகளின் தேசிய நூலாக இராமாயணம் தான் இன்றளவும் இருக்கின்றது. அவ்வாறு இருக்க முந்தைய காலகட்டத்தில் தமிழர்கள் சார்ந்த குழு இராமாயணத்தை அனைத்து நாடுகளுக்கும் சென்று பரப்பி இருக்கலாம்.
 
 அடுத்ததாக அதே தாய்லாந்து தலைநகர் பேங்க்காக்கில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றேன்.  அந்த அருங்காட்சியகத்தில் மிக முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் முந்தைய காலகட்டத்தில் யானை படைகள் எவ்வாறு சண்டையிட்டுக் கொண்டன, அப்போது இருந்த படை வீரர்கள் எப்படிப்பட்ட உடை அணிந்திருந்தனர் போன்ற தகவல்கள் இங்கே புகைப்படங்களாக அழகாக வைக்கப்பட்டிருந்தன.  அந்த காலகட்டத்தில் உள்ளது போன்று ஓர் கப்பலின் மாதிரி வடிவம் மிக அழகாக செய்யப்பட்டிருந்தது. அதனைப் போன்ற கப்பல் ஒன்றை செய்ய வேண்டும் என்று எனது நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது. அதற்கான நேரம் தான் இன்னும் கிடைக்கவில்லை. இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்க்கள காட்சிகள்  மிக அற்புதமாக செய்யப்பட்டுள்ளன.
  இங்குள்ள சிலைகள், சிற்பங்கள் போன்றவற்றில் தமிழ்நாட்டு சிற்பக்கலையின் சாயலையே பார்க்க முடிகிறது. ஆனால் இவ்விரு நாட்டில் உள்ள பெண் சிற்பங்களின் முக அமைப்பு மட்டும் சற்று மாறுபடுகின்றன.
  நம் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நுழையும் போது இரண்டு புறமும் பெரிய அளவில் துபார பாலகர்கள் சிலை இருப்பது போன்று அங்குள்ள புத்த விகாரங்களிலும் அது போன்ற சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை பார்க்கும் பொழுது இக்கோவில் முந்தைய காலகட்டத்தில் ஓர் இந்து கோயிலாக இருந்து தற்பொழுது புத்த விகாரமாக மாற்றப்பட்டு இருக்க வேண்டும்  என்று எனக்கு தோன்றியது. 
 இந்த தாய்லாந்தை ஆண்ட சோழர்கள் பற்றி இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமென்றால், ஃபீமாயில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேகரித்தால் மட்டுமே முடியும்.
 இத்துடன் இந்த இணைய தளத்தின் முதல் முக்கிய கட்டத்தை நான் எழுதி முடித்திருக்கிறேன். இதனை எழுதி முடித்து விட்டு வரலாற்று பகுதியில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சோழர்கள் என் பார்வையில் என்ற தொடர்கதையை எழுத இருக்கிறேன். இனி வரும் பதிவுகளில்  தொடர்ந்து பயணிப்போம்.

Leave a Comment

Your email address will not be published.

Thailand chola (தாய்லாந்து சோழர்கள்)

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page