Thanjavur (தஞ்சாவூர்)

நாம் முன்னதாக பழுவேட்டரையர்களால் கட்டப்பட்ட கோவில்கள் பற்றி பார்த்தோம். மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு  தஞ்சாவூர் பெரிய கோவில் ஆராய்ச்சி பற்றிய தரவுகளை இனி வரும் பதிவுகளில் தொடர்ந்து பார்ப்போம்.
நாங்கள் இருவரும் தஞ்சாவூரிற்கு அன்று இரவு தான் வந்து சேர்ந்தோம். அங்கே மிக பிரம்மாண்டமாய் உயர்ந்து நின்ற அந்த பெரிய கோவிலின் அழகை வியந்து பார்த்தபடி கோவிலை  நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
அந்த கோவிலை நோக்கி செல்ல செல்ல ஏதோ ஒரு விதமான ஈர்ப்பு எங்கள் இருவரினுள்ளும் தொற்றி கொண்டதை உணரமுடிந்தது. இந்த காலகட்டத்திலும் அந்த கோவிலானது மின்னொலியில் மிகத் தெளிவாகத் தெரிந்தது.
ராஜ ராஜ சோழன் காலகட்டத்தில்  இந்த கோவிலை சுற்றியுள்ள வீடுகள் சிறியதாக இருந்த போது  இந்தக் கோவில் எவ்வளவு பெரியதாக எவ்வளவு மைல் தூரத்திற்கு முன்னதாகவே  தெரிந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாக இருந்தது.
இந்த தஞ்சை பெருவுடையார் கோவிலானது அந்த கால தமிழர்களின் உண்மையான வீர வரலாற்றையும் தொன்மையையும் அவர்களின் தனித்துவமிக்க திறமையையும், அவர்களின் தியாகத்தையும் தாங்கி உயர்ந்து நிற்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள கோவில்களை எடுத்துக் கொண்டால்   தஞ்சை பெரிய கோவில்  பல படையெடுப்புகளையும் பூகம்பங்களையும் தாண்டி பழம்பெருமை அழியாமல் இன்றுவரை நிலைத்து நிற்கிறது. இதுவே தமிழ்நாட்டின் முதன்மையான கோயிலாக தனி சிறப்புடன் இன்றளவும் விளங்குகின்றது.
இத்துனை சிறப்புமிக்க அந்த கோவிலை அமைதியாக ஒரு முறை சுற்றி வந்தேன். என் எண்ணமெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றது. அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கையில் நான் இல்லாமல் போனது மிகப்பெரிய ஏக்கமாக இருந்தது.
அந்த காலகட்டத்தில் சோழர்கள் எவ்வளவு கம்பீரமாக இருந்திருப்பார்கள்? எவ்வளவு ஆற்றல் மிக்க படைப்பளார்களை நிர்வகித்து அவர்களை எவ்வாறு வழிநடத்திருப்பார்கள்? காலத்தால் அழியாத இந்த பிரமாண்ட தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டி சோழ நாட்டில் அவர்களின் பெருமை போற்ற வாழ்த்திருப்பார்கள்? என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையும் அதே வேளையில் தற்போதுள்ள தமிழ் நாட்டின் அரசியல் நிலவரத்தை நினைத்து பார்க்கும் பொழுது அந்த பொற்காலத்தை நாம் இழந்து விட்டோம் என்று மனம் வேதனையும் அடைந்தது.
இந்த தஞ்சை பெரிய கோவிலை ஆராய்ச்சி செய்த அன்று, இரவு நேர தூக்கத்தில் கோட்டையின் வெளியே நின்று பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவனாக நான் நிற்பது போன்று கனவில் தோன்றியது. எங்கு பார்த்தாலும் சிற்பிகளின் உளி சத்தமும், பெரிய கற்களை உருட்டும் சத்தமும், யானை பிளிறும் சத்தமும், படை வீரர்களின் பரபரப்பும்  காதுகளை மொய்த்து கொண்டு கனவில் என் தூக்கத்தை தொந்தரவு  செய்தன.
இதற்கு முன் வரலாற்று ஆசிரியர்கள் என்ன எழுதிருக்கிறார்கள் என்றால்? சோழர்கள் படையெடுப்பில் தோற்ற போர் வீரர்களை வைத்து தான் இந்த தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது.
அது உண்மை என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அது உண்மை என்றால் ஆயிரம் ஆயிரம் போர்  வீரர்களை கைதிகளாக வைத்திருந்தால் அவர்களை  பாதுகாப்பதே மிகப்பெரிய சவாலான காரியமாக இருந்திருக்க கூடும் என்பது எனது கூற்று. எப்படி? இதை செய்து முடித்தார்கள் என்பது தெரியவில்லை.
இது தொடர்பான கல்வெட்டு புத்தகங்கள் எங்கேயாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.
பொழுது விடிந்ததும் மீண்டும் பெருவுடையார் கோவிலை நோக்கி சென்றேன். முன் கோபுரத்தின் வழியாக உள்ளே உழைந்த போது மீதமிருந்த மதில் சுவர் என் கண்ணில் பட்டது. அதன் உயரம் சிறியதாக இதுந்தது. ஆனால்  இதற்க்கு முன் இந்த சுவர் மிக பிரம்மாண்டாமாக இருந்திருக்க வேண்டும் என்பது எனது அனுமானம். காலப்போக்கில் அது குறைந்து இருக்கலாம். அல்லது ஆராய்ச்சியார்கள் அதில் இருந்த கற்களை வேற எதற்காவது பயன்படுத்தியிருக்கலாம்.
கோவிலில் இவ்வளவு பிரமாண்டமாக கட்டியிருக்கும் பொழுது மதில் சுவர்கள் பிரமாண்டமாக இருந்திருக்கும் என்பது என்னுடைய யூகம்.
நாங்கள் அந்த கோவிலில் கேரளாந்தன் வாயில் என்று அழைக்கின்ற சிறிய கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தோம். கோபுரத்தின் மேலே அழகிய சிற்பங்கள் கொட்டி கிடந்தன.
அந்த கோவிலில் உள்ள ஒவ்வொரு சிலைகளும்  அழகாக இருப்பதோடு ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்திகளை சொல்வது போல அமைந்திருந்தது.
அந்த கோவிலில் மிகப்பெரிய துவாரபாலகர் சிற்பங்கள் முதல் சிறிய சிற்பங்கள் வரை மிகவும் அழகாக கோவிலை அலங்கரிக்கின்றன. கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் பிரமிக்க வைக்கிறது.
உதாரணமாக ஒரு மரத்தடியில் நான்கு பெண்கள் நிர்வாணமாக நிற்கின்றனர்.  அவர்களின் உடைகளை உருவி மர உச்சியில் இருக்கும் கார்மேக கண்ணனிடம் ஆடைகளை பெறுவதற்காக மரத்தின் மேலே ஏறும் பெண் போன்ற ஒரு சிற்பதை மிக தத்ரூப்பமாக மிக அழகாக செதுக்கியுள்ளனர். இந்த கலைநயத்தை என்னவென்று சொல்வது.  அந்த சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக அமைப்போடு பளபளப்பாக நேர்த்தியாக இருக்கின்றன.
ஆங்காங்கே தியானத்தில் இருப்பது போன்ற முனிவர் சிலைகளும் காணப்படுகின்றன.  ஒவ்வொரு முனிவரின் சிலைகளும் ஒவ்வொரு முகத்தோற்றத்தில் இருக்கின்றன.
ஒருவர் சிவனடியார் போன்று ருத்ராட்ச மாலையோடு இருக்கிறார். ஒருவர் சிந்திப்பது போன்ற ஒரு நிலையில் இருக்கிறார். மற்றும் ஒருவர் நீண்ட தாடியுடன் இருக்கிறார். ஒவ்வொரு முனிவரின் முகமும் வெவ்வேறு பாவனைகளையும் முக அமைப்பையும் கொண்டிருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள அனைவரும் அந்த காலகட்டத்தில் உண்மையாகவே வாழ்ந்தவர்களாக இருந்திருக்கலாம். ஏனென்றால் அவர்களை நேரடியாக பார்த்து இந்த சிலையை வடிவமைத்ததாகவே தோன்றுகிறது.
அவர்களுக்கு அருக்கே ஒரு நரசிம்மர் சிலையும் இருக்கின்றது. அந்த சிலையானது அசுரனை வதம் செய்கின்ற வகையில் மிகவும் கம்பீரமாக பார்ப்பவரை மிரள வைக்கின்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக  ஒரு அழகிய பரம்மன் சிலை மிக அழகாக செய்யப்பட்டிருக்கிறது. எங்கு திரும்பினாலும் கோபுரம் முழுவதும் அழகிய சிரிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை நிரம்பி வழிகின்றன.
அந்த கால சிற்பிகள் ஒவ்வொரு சிலையின் கை விரல் நகம் முதற்கொண்டு மிக நேர்த்தியாக செதுக்கிருக்கிறார்கள்.
கோபுரத்தின் வெளிச்சுவர் சுற்றிலும் நடன மாந்தர்கள் சிலைகள்  சிறியதாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளுக்கு இடையே அந்த கால வீட்டு வாழ் உயிரினங்கள் ஆடு, மாடு போன்ற சிலைகளையும் செதுக்கி அவற்றிற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
இந்த கோவிலில் உள்ள சிலைகள் ஒவ்வொன்றும்  ஏதோ ஒரு கதைகளை சுமந்து நிற்கிறது. அதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் மட்டுமே தெளிவாக விளக்கி கூற முடியும். நீங்களே நேரில் சென்று பார்த்தல் அதனைப் பற்றி உங்களுக்கு தெரிய வரும். எனது அடுத்த பயணத்தின் போது ஒரு வழிகாட்டியின் உதவியோடு அதனைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
நுழைவு கோபுரத்தின் முன் ஒரு சுவர் உள்ளது. அந்த சுவற்றை பார்க்கும் பொழுது இந்த கோபுரத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அமைத்திருக்கலாம், அல்லது காலப்போக்கில் சிதிலமடைந்து இருக்கலாம், அல்லது கோவில் கட்டுமானத்திற்காக பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றியது.
அந்த சுவரின் இரண்டு பக்கங்களிலும் சிறிய சிற்பங்கள் மற்றும் நடன மாந்தர் சிலைகள் அவர்களின் பல அபிநயங்களும் இருக்கின்றன .
வெளி கோபுரத்தில் இரண்டு பக்க முடிவிலும் இருபக்கமும் கல்வெட்டுகள் பல தகவலை கூறுகின்றன. அந்த கல்வெட்டுகள் பற்றிய விபரங்களை அடுத்த முறை விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
வெளி கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தோம். சிவ சிவ என்ற நாமம்  எங்களை வரவேற்றது. வானுயற உயர்ந்து நிற்கும் பெரிய கோபுரமானது சூரிய ஒளியில் தகதகத்து காட்சியளித்தது.  இந்த கோபுரம் முன்னொரு காலத்தில் பொன்னால் மேயப்பட்டது என்று கூறுவர். காலப்போக்கில்  படையெடுப்புகளால் அதன் பொழிவை சிறிது இழந்து விட்டது.
இக்கோவிலின் நடுமையமாக பெருவுடையார் கோபுரம் அமைந்துள்ளது. அதற்கு முன்னாள் பெரிய நந்தி தேவர் சிலையும், அதன் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேடக்கூரையில் பல ஓவியங்கள் இருக்கின்றனர். அவை  பிற்கலத்தில் ஆட்சி புரிந்த நாயக்கர் காலத்திலோ அல்லது மராட்டியர் காலத்திலோ செய்திருக்கலாம்.
அந்த கோவில் கருவறை கோபுரத்தின் உச்சியில் எம்பது டன் எடையுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட விமானம் உள்ளது. அதை எப்படி மேலே ஏற்றினார்கள் என்பது இன்றளவிலும் புரியாத மர்மமாகவே இருந்து வருகிறது. அந்த காலத்திலேயே கைதேர்ந்த பொறியியல் வல்லுனர்களால் சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது பக்கத்தில் கடைசி வரிசையில் பார்த்தீர்கள் என்றால் பிரம்மர் தாடியுடன் இருக்கின்ற சிலைகள், நந்தி சிலைகள்,யானை சிலைகள், எல்லாம் உள்ளன. அதில் ஒரு முனிவர் உத்ராட்ச மாலையோடு இருக்கிறார். அவறிற்கு  பின்னால் பெருமாள் சிலை இருக்கிறது. அழகிய வேலைபாட்டுடன் கோபுரத்தை கண்கவரும் வகையில்  அமைதிருக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அது சிறிதும் சிதிலமடையாமல்  இருப்பது மிகவும் அதிசயமாக உள்ளது. அதன் அமைப்புகள் எல்லாம் மிகவும் துல்லியமாக ஒவ்வொரு சிலைக்கும் தேவையான மாலைகள் அணிகலன்கள்  அனைத்தையும் காலை நயத்தோடு பார்த்து  பார்த்து செய்திருக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரையில் இந்த சிற்பங்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் மனிதர்கள் எப்படியான ஆடை  அணிகலங்கள் அணிந்திருப்பார்கள் என்பது இந்த சிற்பங்களை பார்க்கும் போது தெரியவருகிறது.
ஆனால் பெரும்பாலும் போர் ஆயுதங்களை இந்த சிற்பங்களில் பார்க்க முடியவில்லை. அதற்கென்ன காரணம் என்றும் சரிவர தெரியவில்லை. ஒருவேளை சில கடவுளர்களிடம் மட்டுமே போர் ஆயுதம் இருக்கும் என்பதால் செய்யாமல்  இருந்தார்களா என்பது என் அய்யப்பாடு. 
சில இடத்தில் வழக்கம் போல இடிதாங்கி வைக்கிறேன் என்று  கம்பிகளை போட்டு அதன் அழகை கெடுத்து வைத்துள்ளனர் இக்கால பராமரிப்பாளர்கள்.
ஒரு வியக்கதக்க விடயம் என்னவென்றால் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் பல படையெடுப்புகளையும் பூகம்பங்களையும் தாண்டி இன்றளவும் அதே தோற்றதோடு காலம் தாண்டி நிலைத்து நிற்கிறது என்றால்  அவற்றை அமைத்த பொறியாளர்களின்  தொழிநுட்பத்தை  என்னவென்று கூறுவது. அன்றைய கால தமிழர்கள் எப்பேற்பட்ட தொழில்நுட்ப அறிவாற்றலோடு வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும் அடுத்த பதிவில் தொடர்வோம்.

Leave a Comment

Your email address will not be published.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page