மண்ணோடு கலந்து மானத்தோடு வாழ்ந்த நம் மன்னாதி மன்னர்களின் தோண்டப்பட்ட வரலாற்றின் கதைகளைத் தேடிய பயணத்தின் முதல் பகுதியாக நம் கொடும்பாளூர் பயணம். கொடும்பாளூர் என்ற ஊர் மதுரையில் இருந்து திருச்சி செல்லும் நான்கு வழிச்சாலையில் திருச்சிக்கு நாற்பது கிலோமீட்டர் முன்பாகவே வலது புறம் திரும்பினால் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அவ்வூரை அடைந்துவிடலாம். அது ஒரு அழகிய சிறிய கிராமம். குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும், காரை வீடுகளும் வீதிகளில் வழிந்தோடும் சாக்கடை தண்ணீரும் என தற்போதைய கிராமங்களுக்கு ஏற்ற பொழிவில் தான் கொடும்பாளூர் தற்போது இருக்கிறது. ஆனால் இவ்வூர் ஒரு கால கட்டத்தில் சோழப்பேரரசர்களின் பக்கபலமாக இருந்து எல்லையை காத்து நின்று சோழர்களின் சிற்றரசாக விளங்கிய ஊர் என்பதை அங்கு சென்று பார்க்கும் போது எங்களால் நம்ப முடியவில்லை.
இந்த ஊரின் இளவரசி வீரமாதேவி என்பவர் தான் ராஜேந்திர சோழரின் மனைவி ஆவார். தன் கணவர் ராஜேந்திர சோழன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறி உயிர் தியாகம் செய்தவரும் இவரே. அதுமட்டுமல்லாமல் இந்த கொடும்பாளூர் சிற்றரசை சேர்ந்தவர்கள் படைத்தளபதிகளாகவும் பெண் கொடுத்து பெண் எடுத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இளங்கோ என்ற இளவரசனுக்கு இவர்கள் பெண் கொடுத்த சரித்திர வரலாறும் உண்டு.
இந்த கொடும்பாளுர் பற்றி நான் வேங்கையின் மைந்தன் என்ற நாவலில் முதன் முதலில் படிக்கும் போது கொடும்பாளூர் பற்றிய ஆர்வம் எனக்கு வந்தது. சோழர்கள் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அந்த நாவல் உருவாக்கியது என்றும் கூறலாம்.
இது ஒரு புனை கதையாக இருந்தாலும் கூட இதில் 50% விழுக்காடு உண்மையும் இருந்தது. அதனாலையே கொடும்பாளூரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று எத்தனையோ வருடமாக முயற்சித்தேன். வேலைப்பளு நேரமின்மையால் அப்போது என்னால் பார்க்க இயலவில்லை. இறுதியில் சோழர்கள் பற்றி எழுத வேண்டும் என்று முடிவு எடுத்து ஐந்து நாள் பயணமாக நானும் தம்பியும் கொடும்பாளூர் சென்றோம்.
அங்கிருந்து தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், இப்படி பல ஊர்களுக்கு சென்று சோழர்கள் பற்றி எண்ணற்ற விஷயங்களை கற்றுக் கொண்டாலும் நான் முதன் முதலில் ஆசிர்வாதம் வாங்கியது என்னவோ கொடும்பாளூரில் தான்.
அது ஏனோ தெரியவில்லை அந்த ஊரிற்கும் எனக்கும் பூர்வ ஜென்ம தொடர்பு ஏதும் இருக்கின்றதா? ஒருவேளை அந்த தென்னாட்டு போர்க்களங்கள்,வேங்கையின் மைந்தன் போன்ற வரலாற்று நாவல்களை படித்ததால் அப்படியான உணர்வு தோன்றுகின்றதா? என்ற கேள்விக்கான விடை இன்று வரை என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. அங்கு சென்றதிலிருந்து மிகவும் சந்தோசமாக உணர்ந்தேன்.
நான் முதன் முதலில் அந்த ஊரைச் தேடிச் செல்லும் போது அந்த ஊரிற்கான வழி இணையத்தில் சரிவர காட்டவில்லை. ஒரு தேநீர் கடையில் தேனீர் அருந்திவிட்டு அங்கிருந்தவர்களிடம் வழி கேட்கும் போது நேரே செல்லுங்கள் கோவில் வரும் என்றார் ஒருவர். அவர் சொன்னபடியே சென்று பார்க்கும் போது தற்போது கட்டிய ஒரு சிறிய கோவில் ஒன்று இருந்தது. நாங்கள் (RecordBook) சாதனை புத்தக புகைப்படத்தில் பார்த்ததிற்கும் நேரில் சென்று பார்த்ததிற்க்கும் சம்பந்தமே இல்லாத தோற்றத்தில் அக்கோவில் இருந்தது.
அக்கோவிலின் அருகே வசிப்பவர்களிடம் அது பற்றி கேட்கும் போது ஒரு சிறிய சாலையை கைநீட்டினார்கள்.அவர்கள் கைநீட்டிய சாலையில் செல்லும் போது சற்று நேரத்தில் அந்த கோவில் வாசலுக்கே வந்து நின்றோம். மிக அழகான நேர்த்தியான சிற்ப வேலை பாடுகளுடன் மிக அழகாக காட்சியளித்தது.
இந்த பயணத்தில் நாங்கள் கற்றுக்கொண்ட விசயம் என்னவென்றால்? இந்த கோவிலானது மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருப்பதையும். மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் கட்டுப்பாட்டில் இருக்கும் அத்தனை இடங்களும் மிகத் தூய்மையாக அழகாக வைத்திருக்கிறார்கள் என்பதையும் காண முடிந்தது.
உள்ளே நுழைவதற்கு ஒரு சிறிய தொகை கட்டணம் வசூலிக்கிறார்கள். உள்ளே சென்று படம் பிடிப்பதற்கு எந்தவித தடையும் கட்டுப்பாடுகளும் இல்லை. முன்பு சில கோவில்களுக்கு நாங்கள் சென்றபோது புகைப்படம் எடுக்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரிய கோவில் உட்பட பல கோவில்களில் புகைப்படம் எடுப்பதற்கு எவ்வித தடையும் கட்டுப்பாடுகளும் விதிப்பதில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு கேமராவில் புகைப்படம் எடுப்பதற்கு ரூபாய் 500 வீதம் கட்டணம் வசூல் செய்தார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.
கொடும்பாளூரில் இருக்கும் கோவில்கள் சிறிய கோவில்கள் தான் நாம் எதிர்பார்த்த அளவிற்கு தஞ்சை பெரிய கோவில் போன்று பிரமாண்டமாக இருக்காது. அந்த காலத்தில் சிற்றரசர்கள் கட்டிய கோவில்கள் அனைத்தும் பேரரசர்கள் கட்டியதை விட அளவில் சிறியதாகவே கட்டியிருக்கிறார்கள். ஏனென்றால் பேரரசர்களை விட பெரியதாக கட்டினால் அவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்தில் சிறியதாகவே கட்டியுள்ளனர்.
ஆனால் தஞ்சை பெரிய கோவிலின் சிறிய வடிவமாக தான் இக்கோவில் இருந்தது.
சோழர்கள் அனைவரும் சைவ சமயத்தை பின்பற்றியதால் அவர்கள் சிவலிங்க வழிபாட்டையே மேற்கொண்டு வந்தனர். அதனால் அவர்களுக்கு கீழ் உள்ள சிற்றரசர்களும் சிவ வழிபாட்டையே மேற்கொண்டு வந்தனர். ஆனால் கோவில்கள் மிகவும் சிதலமடைந்து தொல்லியல் ஆராய்ச்சி துறையால் ஒவ்வொரு கற்களாக எடுத்து இரண்டு கோபுரங்களை மட்டுமே மறு உருவாக்கம் செய்து வைத்திருந்தார்கள். மற்றவை எல்லாம் வெறும் கற்குவியல்களாகவே கிடக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து இருந்தால் சிறப்பாக செய்திருக்கலாம்.
ஏனென்றால் கொடும்பாளூரில் இந்த இரண்டு கோபுரங்களை தவிர்த்து இதே காலகட்டத்தில் கட்டிய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இன்னும் சில கோவில்களும் அறிய கல்வெட்டுகளும், கோவில் முன்பு அமைந்துள்ள முட்புதர்கள் மண்டி கிடக்கின்ற தெப்பமும் இன்று வரை சரி செய்யப்படாமல் அனாதையாக விடப்பட்டுள்ளது.
என்ன காரணம் என்று தெரியவில்லை.
இதையும் கொஞ்சம் கவனித்து மறு சீரமைப்பு செய்தால் நன்றாக இருக்கும்.
இந்த கொடும்பாளூர் சிற்றரசை பற்றி எனது Gellary Section சென்று பார்த்தீர்களேயானால் அதில் நான் முதல் பக்கத்தில் இருந்து மிக விரிவாக சொல்லி இருக்கின்றேன்.
கொடும்பாளூரை பொறுத்தவரையில் அங்கு உள்ள மக்களிடம் அதன் வரலாறு என்ன? எப்போது யாரால் கட்டப்பட்டது? இதுபோன்ற வரலாற்று ரீதியான கேள்விகளை கேட்கும் போது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. என்றாலும் அவர்கள் எங்களிடம் பழகிய விதம் மிகவும் பிடித்திருந்தது.
அங்கு உள்ள மக்களுக்கும் சரி அங்கு பணியாற்றும் தொல்லியல் துறை அலுவலர்களுக்கும் சரி அது பற்றிய விரிவாக எதுவும்தெரியவில்லை. அங்கு வரும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு அது பற்றி எடுத்துரைப்பதும் இல்லை. வெறுமனே கட்டணம் வசூலிப்பதை மட்டுமே கடமையென செய்கின்றனர். ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை மட்டும் கேட்டு குறித்து வைத்துக் கொள்கின்றனர்.
அங்குள்ள கோவில்களில் தஞ்சை பெரிய கோவிலில் இருப்பது போன்ற பெரிய நந்தியோ அம்மனோ கிடையாது. அதற்கு மாறாக சிவலிங்கமும் சிறிய அழகிய நந்திகளுமே உள்ளது. அந்த சிலைகளும் கூட முன்பே இருந்ததா அல்லது தற்போது வைக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு கோவில்களிலுமே விளக்குகள் ஏற்றி வழிபட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. தொல்லியல் கள ஆய்வு செய்யப்பட்ட தொல்லியல் சுவடுகள் நிறைந்த ஒரு வரலாற்று சம்பந்தமான இடமாகவே அது காட்சி அளிக்கின்றது.
அதில் பழங்கால சிலைகள் நிறைய இருக்கின்றன. உதாரணத்திற்கு அந்த கட்டிடத்தின் கீழ் பகுதி சுற்றிலும் ஆடல் மகளிரின் சிலைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆடல் மகளிர் சிலைகளை தஞ்சையில் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. இதைப் பற்றி இன்னொரு முறை அங்கு செல்லும் போது ஆராய இருக்கின்றேன். அதில் ஆடல் மகளிரின் முகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக மிக அழகாக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொடும்பாளூருக்கு மூன்று முறை சென்றிருந்தாலும் கூட புதிது புதிதாக கற்றுக் கொள்ளும் இடமாக அது விளங்குகின்றது. அது மட்டும் இல்லாமல் கோவில் சுவர்களை சுற்றி யாழிகள் அணிவகுப்பு போன்ற சிலைகளை மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை கோவிலில் நான்கு முனைகளிலும் ஆமை சிற்பங்களை வாய் பிளந்தபடி செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
எதற்காக ஆமை சிற்பங்களை அங்கு வைத்திருக்கிறார்கள் என்ற காரணம் தெரியவில்லை. வாஸ்துவிற்க்காக அப்படி வைத்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என்றும் சரி வர தெரியவில்லை. இதை பற்றியும் அடுத்த பயணத்தில் எதற்காக என்பதை ஆராய்ந்து தெரியப்படுத்துவேன்.
ஆனால் சோழர்கள் காலத்தில் கடல் கடந்து படையெடுத்து சென்றதிற்கும் அங்கே கடல் கடந்து வாணிபம் செய்ததிற்க்கும் ஆமைகள் பெரும் பங்கு வகித்தது. அவற்றின் வழித்தடங்களையும் நீரோட்டத்தையும் பயன்படுத்தியே சோழர்கள் நூற்றுக்கணக்கான கப்பல்களோடு சென்று அங்குள்ள இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம் போன்ற நாட்டு எல்லைகளை அடைந்து ஸ்ரீ விஜயம் போன்ற பல பேரரசுகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள். ஒருவேளை அதற்காக தான் கோவில்களில் ஆமை சிற்பங்களை அமைத்தார்களா? என்று தெரியவில்லை.
ஒவ்வொரு தூண்களிலும் முத்துமாலைகள் சிறிய தோரணங்களாக அழகாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். அதை பார்க்கும் போது மிக அழகாக சோழ சிற்பிகளின் திறமைகளை உணர முடிந்தது. கோவில் வாசலில் துவாரபாலகர்கள் சிலை சிறிய வடிவமா செதுக்கப்பட்டிருந்தது.
அங்குள்ள கோவில்கள் அனைத்தும் சிறியதாகவே இருந்தது. கோவிலினுள் சென்று பார்க்கும் போது கோவில் கோபுரத்தின் உள்பாகமானது படிப்படியாக மூன்று அடுக்குகளை கொண்ட ஒரு பிரமிடு போன்ற அமைப்பில் இருந்தது. கோபுரத்தின் மேலே பார்க்கும் போது சிவனும் பார்வதியும் தத்ரூபமாக மிக அழகாக அருகருகே அமர்ந்தபடி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கே கோவிலுக்கு முன்னாள் சிவலிங்கத்தை வைக்கின்ற அடிப்பாகம் போன்ற சிலை நிறைய இருந்தது. ஒருவேளை அந்த காலகட்டத்தில் போரில் வீரர்களோ சிற்றரசர்களோ இறந்த பிறகு அவர்களின் நினைவாக சிவலிங்கம் வைக்கும் முறை இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
இந்த சிவலிங்கத்தில் குழி மட்டுமே தெரியும் ஆனால் சிவலிங்கம் இருக்காது. இதில் தாமரை இலை பொறித்த பலிபீடமும் ஒன்று உள்ளது. இது போன்ற குழி போன்ற அமைப்பை நான் தாய்லாந்தில் பார்த்திருக்கிறேன். அங்கே ஒரு இடத்திற்கு நான் தற்செயலாக செல்லும் போது அங்கேயும் சோழர்களின் அடிச்சுவடு இருக்கிறது என்பதால் சிவலிங்கத்தை வழிபட்டதற்கான தடயங்கள் இருக்கின்றன. சிவலிங்கம் இல்லையென்றாலும் அதற்கான அடித்தளம் அங்கே இருக்கின்றது.
நான் தாய்லாந்தில் பீமாய் என்ற இடத்திற்கும் அங்குர்வாட் என்ற இடத்திற்கும் மறுமுறை சென்று இந்த இரு கோவில்கள் பற்றியும் இனிவரும் காலங்களில் தெளிவாக தெரியப்படுத்துவேன்.
நான் சைனாவில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அங்கேயுள்ள எந்தவொரு வரலாறு சார்ந்த இடங்களுக்கு சென்றாலும் அந்த இடத்தைப் பற்றிய புத்தகங்களும், ஒளிநாடாக்களும், 3D அனிமேஷன்களும், தெள்ளத் தெளிவாக அங்கிருக்கும். சீன மொழியிலும், ஆங்கிலத்திலும், எழுதி வைத்து இருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்த வரையில் எந்த வரலாற்று சின்னத்திற்கு சென்றாலும் இது போன்ற வசதிகள் இருப்பதில்லை.
பின்வரும் காலங்களில் அந்த வசதியே கொண்டு வந்தால் அதை பார்ப்பவர்களுக்கும், அதைப்பற்றி தெளிவாக தெரியவரும். சாதாரண மக்களுக்கும் அது எளிதில் சென்றடையும். இது முதல் பக்கத்தின் ஆரம்பம் தான் இனி தொடர்கதைகளாக அடுத்தடுத்து வரும் நாட்களில் சந்திப்போம்.