அடுத்ததாக பத்தாவது பக்கத்தில் இரண்டாம் ராஜேந்திர சோழன் கொப்பம் போரில் வெற்றி பெற்று அப்போரிலேயே முடி சூட்டு விழா நடத்தியதை கூறும் மெய் கீர்த்தியும், கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டுவதற்காக அக்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட இரும்பு ஆணிகளையும், திரிபுவனம் கோவில் புகைப்படத்தையும், மற்றும் ஆண் பெண் அடியார்கள் சிலையும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் பல ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது .ஆனால் அந்த ஓலைச்சுவடிகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற தகவல்கள் எதுவும் அங்கே குறிப்பிடவில்லை. அந்த ஓலைச்சுவடிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஓலைச்சுவடிகள் சம்பந்தமான புத்தகங்களை கையோடு எடுத்து சென்றிருந்தேன். ஆனால் அதனைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்றுணர்ந்தேன். ஆகையால் எனது அடுத்த பயணத்தின் போது ஓலைச்சுவடிகள் பற்றிய விபரங்கள் ஏதும் இருக்கிறதா என்று அங்கு உள்ள நிர்வாகிகள் இடம் கேட்டு அல்லது இதனைப் பற்றிய ஆராய்ச்சி செய்த பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
இங்கே பழங்கால பூஜை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு இருக்கிறதே தவிர அதன் பெயர்களோ, அது பயன்படுத்தப்பட்ட காலகட்டமோ குறிப்பிடாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இங்கே பல கற்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அதில் நந்தி சிலைகள், சிங்கத்தூண், மற்றும் சிதிலமடைந்த ஓர் அகஸ்தியரின் சிலையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் பல கல்வெட்டு சார்ந்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முதலாம் ராஜேந்திர சோழனின் குருவான சர்வசிவ பண்டிதர் பற்றிய கல்வெட்டு விவரங்கள் பற்றி எழுதிருக்கிறார்கள். இந்த கல்வெட்டுகள் எங்கு எடுக்கப்பட்டது என்று சற்று விரிவாக பார்த்தால் தான் நமக்கு இது பற்றி புரியும். ஏனென்றால் கல்வெட்டுக்களை புரிந்து கொள்வது என்பது எளிதான விடயம் அல்ல.
அடுத்ததாக காவிரிப்பூம்பட்டினம் கோவில் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது காவிரிப்பூம்பட்டினத்தில் பல அறிய தகவல்கள் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. எனது அடுத்த பயணத்தின் போது இக்கோவிலை சுற்றியுள்ள இடங்களையும் பார்க்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.
கண்ணாடி பேழைக்குள் ஓர் அழகிய குலோத்துங்க சோழனின் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை பார்க்கும் பொழுது முற்கால சிலை போல அல்லாமல் தற்போது வைக்கப்பட்ட சிலை போன்று இருந்தது. இந்த முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சுங்கம் தவிர்த்த சோழன் என்ற பெயரும் உண்டு. முதலாம் குலோத்துங்க சோழன் வணிகப் பொருட்களின் மீதான சுங்கத்தை தவிர்த்ததால் சுங்கம் தவிர்த்த சோழன் என்றும் அழைக்கப்பட்டார். திரிசூலம் சிவன் கோவில் கல்வெட்டில் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழத் தேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் எங்கு பார்த்தாலும் பல ஒருவரி கல்வெட்டு புகைப்படங்களும் அதன் தகவல்கள் எழுதிவைத்துள்ளனர். அதில் ராஜராஜன் மரக்கால் கல்வெட்டு , திருமுக்கூடல் மருத்துவமனை கல்வெட்டு, பெண் மானம் காத்து உயிர்விட்ட வீரனின் கல்வெட்டு, உத்திரமேரூர் கல்வெட்டு,போன்ற பல கல்வெட்டு குறிப்புகள் விரிவாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ராஜராஜன் மரக்கால் என்ற கல்வெட்டு நெல் அளப்பதற்கு பயன்படும் மரக்காலுக்கு பெயர் ராஜராஜநென்னுந் திருநாமமுடைய மரக்கால் என்று கூறும் எண்ணாயிரம் கல்வெட்டு பகுதியாகும். திரு முக்கூடல் மருத்துவமனை கல்வெட்டு திருமுக்கூடல் கோவிலில் ராஜராஜனின் சிறப்பு பெயர்களில் ஒன்றான ஜனநாதன் என்னும் பெயரில் அமைந்திருந்த ஜனநாத மண்டபத்தில் கல்லூரி விடுதி மருத்துவமனை ஆகியவை செயல்பட்டுள்ளன. எம் மருத்துவமனை வீர ராஜேந்திரனின் பெயரில் வீரசோழன் ஆதுலர் சாலை என்று அழைக்கப்பட்டது. எம் மருத்துவ மனையில் ஓராண்டிற்கு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டிருந்தன. ஆதுர சாலை வீர சோழநில் என்ற குறிப்பு உள்ள கல்வெட்டு பகுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற கல்வெட்டுகளை பார்க்கும் பொழுது மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது.
அடுத்ததாக பெரிய கோவில் கல்வெட்டு எழுத்துக்கள் மற்றும் தமிழ் எழுத்து வட்டெழுத்தாகவும் தமிழாகவும் வளர்ந்த விதம் பற்றியும் எழுதியுள்ளனர்.
அடுத்ததாக சரபோஜி மன்னர்களின் ஓவிங்கள் பற்றி எழுதியுள்ளனர். இது தேவையற்ற ஒன்று. இது நம் தமிழர்களின் வரலாற்றை மறைப்பதற்காக செய்யப்பட்டது. இங்கே கல்வெட்டுக்கள் பற்றி விபரமாக எழுதிருக்கிறார்கள். இவற்றை ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
செம்பியின் மாதவி பற்றிய கல்வெட்டு குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் திருவோத்தூர் ஏரி செம்பியன் மாதேவி பெயரால் திருவோத்தூர் செம்பியின் மாதேவி பேரேரி என்றழைக்கும் கல்வெட்டுப் பகுதி உள்ளது. கல்வெட்டுகளைப் பற்றி விரிவாக எழுதிய இடம் இது ஒன்று மட்டுமே.
இராஜராஜ சோழனது தாயின் சிறப்பு பற்றிய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற ராஜராஜன் என்ற புலியை பெற்ற அவனது தாய் ஆகிய வானமாதேவி தனது கணவன் சுந்தர சோழன் இறந்ததும் பால் குடிக்கும் நிலையில் உள்ள குழந்தை எனினும் அதனை பிரிந்து முழங்கி எரியும் தீயின் நடுவணும் தன் தலை மகனாகிய கணவனை விட்டுப் பிரியாத தைய்யல் நிலை பெரும் தூண்டோ விளக்கு எனக் கூறுகிறது இந்த திருக்கோவிலூர் பாடல் கல்வெட்டு. இது போன்ற பயனுள்ள பல கல்வெட்டுகள் இங்கே கிடைத்தன.
தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு இராஜராஜன் என்னென்ன பூஜை பொருட்கள் கொடுத்தார், என்னென்ன சிலைகள் செய்து கொடுத்தார் என்ற இராஜ ராஜனின் கோவில் திருப்பணிகளின் அணைத்து விபரமும் கொடுக்க பட்டுள்ளது.
அடுத்ததாக சோழர் கால செப்பேடுகள் மிக முக்கியமானதாக பார்க்க படுகிறது. செப்பேடுகள் பற்றி முழுவதும் ஆராய்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். இந்த பக்கத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இந்த அற்புதமான பயணத்தை என்னால் மறக்க முடியாது. திரும்பவும் ஒருமுறை இங்கே பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
அதற்கடுத்த புகைப்படத்தில் திருப்பள்ளத்துறை கோவில் புகைப்படம், மற்றும் சுடுமண் விளக்கு, சுடுமண் காதணிகள், கங்கை கொண்ட சோழபுரத்தில் கிடைக்கபெற்ற சீன நாட்டு பானை ஓடுகள், பொருட்கள் பற்றிய விபரங்களும் அங்கே இருக்கின்றது. இந்த பொருட்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து தொழில் வணிகத்தை காட்டுகிறது. ஆனால் இந்த வாணிபம் எத்தனை வருட பழைமையானது என்ற விபரங்கள் அங்கே குறிப்பிட படவில்லை.
இராஜராஜ சோழனின் பெயரில் உள்ள ஊர்கள் மற்றும் சோழர் கால பரிகலன்கள் போன்ற விபரங்கள் அடங்கிய தகவல் பலகைகள் வைக்கப்பட்டிருத்தன. மிக அற்புதமான விவரங்கள் அடங்கிய இந்த ஒன்பதாவது மற்றும் பத்தாவது பக்கத்தில் இருக்கிற இடங்களை பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறேன். இனி பதினொன்றாவது பக்கத்தில் சந்திப்போம் …