Thanjavur (தஞ்சாவூர்)

தஞ்சை பெருவுடையார் கோவில் பற்றிய ஆய்வு முடிவுகளை பற்றி தொடந்து பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக பதினொன்றாவது பக்கத்தை பற்றி பார்ப்போம்.
இந்த பக்கத்தில் முதல் வரிசையில் உள்ள புகைப்படங்களை பார்த்தோமானால் இராஜ ராஜ சோழன் அருங்காட்சியகத்தில் சோழர் காலத்தில் உபயோகப்படுத்திய ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிகவும் பழமையான சுடு மண்ணாலான செங்கற்கள், வீட்டின் கூரை ஓடுகள் போன்றவற்றை கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. பல அறிய தகவல்களை தன்னுள் வைத்திருக்கும் இந்த அருங்காட்சியகம் ஒரு சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு செல்லும் வழியானது தொல்லியல் துறையால் சரியாக குறிப்பிடாமல் இருப்பது மிக பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் கி. பி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நடராஜர் சிவகாமி சிலை, வராகி அம்மன் சிலை, மற்றும் பல கற்சிலைகள் இங்கே காட்சி படுத்தப்பட்டுள்ளன. தஞ்சை பெரியகோவிலில் உள்ள சண்டிகேஸ்வரருக்கு எம்பெருமான் சிவனால் மணிமுடி சூட்டக்கூடிய சிற்பத்தின் புகைப்படமும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கே ஆனைமங்கள செப்பேடு விபரங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த செப்பேடுகள் எக்காலத்திலும் அழியாத செம்பு உலோகத்தால் ஆனது. நான் முன்பே குறிப்பிட்டபடி இது போன்ற செப்பேடுகள் நிறைய இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆங்கிலேயர்களின் வருகையால் இது போன்ற பல அறிய வரலாற்று பொக்கிஷங்களை நாம் இழந்து விட்டோம். தற்போது இந்த புகைபடத்தில் உள்ள செம்பு பட்டயங்களானது சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சோழர்காலத்தில் நடைபெற்ற செயல்கள் மற்றும் பல அறிய தகவல்கள் அந்த செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டிருகின்றன.
அடுத்ததாக கோவில் கட்டிடங்களில் சிதிலமடைந்த தூண்களில் உள்ள கல்வெட்டுகளை சேகரித்து வைத்துள்ளனர். ஆனால் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்ற தெளிவான விபரங்கள் அங்கு வைக்கப்படவில்லை. தஞ்சை சீனிவாசபுரத்தில் கிடைத்த ராச ராச சோழனின் வடமொழிக் கல்வெட்டும் இங்கு உள்ளது. இது போன்ற பல கல்வெட்டுகள் இங்கே குவிந்து கிடக்கின்றன. கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனை ஆகழாய்வு பணி செய்யப்பட்ட மாதிரி வடிவமும் இங்கே காட்சி படுத்தப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறையினரால் ஆங்காங்கே வினா விடை என்ற தலைப்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் வரலாற்று சார்ந்த கேள்விகளும் மற்றும் தொல்லியல் அகழாய்வு சார்ந்த கேள்விகளும் அதற்கான பதில்களும் இடம்பெற்றுள்ளன. இந்த பதாகைகள் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் மக்களின் பொது அறிவை மேம்படுத்தும் நோக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சோழர் காலகட்டத்தில் பயன்படுத்திய காசுகள் செம்பொன்னாலான குடுவைகளில் நிரப்பப்பட்டு மிக பாதுகாப்பாக கண்ணாடி பேழைக்குள் வைத்திருக்கின்றனர்.
இந்த அருங்காட்சியகத்தில் கட்டிட இடிபாடுகளில் சிதிலமடைந்த விநாயகர்,தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், தவ்வை, போன்ற கற்சிலைகளும் , சுடுமண் உருவங்களும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதில்
ரிஷப வாகன மூர்த்தி சிலையானது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தது.
இந்த அருங்காட்சியகத்தில் திருநாகேஸ்வரம் கோவில் 45 இசைக்கருவிகளை காட்டும் துளஜாவின் செப்பேடின் புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த திருநாகேஸ்வரம் கோவிலில் சோழர்கள் பற்றிய கல்வெட்டுகள் நிறைய இருப்பது இந்த அருங்காட்சியகத்திற்கு வந்த பிறகே தெரிய வருகிறது.. அடுத்த முறை தஞ்சாவூர் பயணத்தின் போது திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்று இது பற்றிய ஆராய வேண்டும் என்று நினைக்கின்றேன்.
முதலாம் ராஜேந்திர சோழன் வட நாட்டு படையை வெற்றிகொண்டதன் நினைவாக சோழகங்கம் என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட பேரேரியை மக்களின் பயன்பாட்டிற்காகவும், விவசாய தேவைக்காகவும் வெட்டியுள்ளார். அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை எடுத்துறைக்கும் நோக்கத்தில் அந்த புகைப்படமும் இங்கே வைக்கப்பட்டுள்ளது. இவர் தான் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகரமாக மாற்றியவர். அந்த காலகட்டத்திலேயே எந்திரங்கள் இன்றி இவ்வளவு பெரிய ஏரியை உருவாக்கியது மிக பெரிய செயல். அந்த ஏரியை நேரில் சென்று பார்க்க இருக்கிறேன்.
செம்பியன் மாதேவி கோவில் நாகப்பட்டினத்தில் உள்ளது. இக்கோவிலையும் நேரில் சென்று பார்க்க இருக்கிறேன்.
தஞ்சாவூர் அருகில் உள்ள திரிபுவனம் என்ற ஊரில் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட கம்பஹரேசுவரர் கோவில் புகைப்படமும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இதனை நேரில் சென்று பார்த்தால் நிறைய தகவல்கள் கிடைக்கும். ஆகையால் அடுத்தமுறை தஞ்சை பயணத்தின் போது இந்த அருங்காட்சியகத்தில் பார்த்த அத்துணை இடங்களுக்கும் நேரில் சென்று ஆராய இருக்கிறேன்.
அதற்க்கு அடுத்த புகைப்படத்தை பார்த்தோமானால் சோழர்கள் கால கட்டத்தில் ஊர் சபை மண்டபம் எவ்வாறு இருந்தது என்பதை காட்ட கூடிய காஞ்சிபுரம் உத்திரமேரூர் ஊர்சபை மண்டப புகைப்படத்தை வைத்துள்ளனர்.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கி. பி 1006 ஆம் ஆண்டு ஸ்ரீ விஜய மன்னன் சூடாமணிவர்மனால் கட்டப்பட்ட புத்த விகாரத்தின் புகைப்படமும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த புத்த விகாரத்தை காட்டுவதற்கு இராஜ ராஜ சோழனே அனுமதி கொடுத்ததாக கூறுகின்றனர்.
அதன் சிதிலமடைந்த பகுதி இன்னும் அங்கு உள்ளதா என்று தெரியவில்லை. அதையும் நேரில் சென்று பார்க்க இருக்கிறேன்.
அடுத்ததாக சோழர்கள் பற்றி நம் நாட்டின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறிய கருத்துக்களின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளன. அதில் அவர் கூறியதாவது சோழர்கள் கடற்படையில் வலிமை வாய்ந்தவர்களாகவும் மற்றும் கடற்போரிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் திகழ்ந்து சாளுக்கிய பேரரசுகளை வீழ்த்தினர் என்றும்
காவிரிபூம்பட்டின துறைமுகத்திலிருந்து நூற்றுகணக்கான வணிகர்களும் அயல்நாட்டவரும் வாணிபம் செய்தனர் என்றும், வணிகர்கள் ஆறு கண்டங்களுக்கும் நில மற்றும் நீர் வழியாக சென்று வாணிபம் செய்தனர் என்றும் குதிரை யானை விலை உயர்ந்த மணிகற்கள் நறுமண பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை தருவித்தனர் என்றும், வங்காள விரிகுடா சோழர்களின் ஏரி போல விளங்கியது என்றும் அக்காலத்தில் சோழர்களே கடற்படையில் சிறந்து விளங்கினர் என்றும் அவர் கூறிய வார்த்தைகள் அங்கு பதாகையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் தற்போதைய பிரதமர் மோடி ஆட்சியில் சமீபத்திய கப்பல் படை தினத்தில் மராத்திய அரசர் சிவாஜி தான் கப்பல் படையில் சிறந்து விளங்கி இருப்பதாக அறிவித்திருப்பது வரலாற்றை திரித்து எழுதுதக்கூடிய செயலாக பார்க்கபடுகிறது. இது தமிழர்களாகிய நமக்கு மிக பெரிய தலைகுனிவு. நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் நம்முடைய புகழ் வெளியே தெரிந்து விட கூடாது என்பதற்காக வடநாட்டவர்கள் என்னென்ன சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வடநாட்டவர்கள் இன்று மட்டும் அல்ல, அன்றும் கூட இதே மாதிரியான மன நிலையில் தான் இருந்திருகின்றனர். ஏனென்றால் நம் தமிழ் மண்ணின் மிக பெரிய சக்தியாக விளங்கிய சோழர்களும், பாண்டியர்களும் கூட ஒருவருக்கொருவர் போரிட்டு உயிரை மாய்த்து கொண்ட போதிலும் அவர்கள் உருவாக்கிய தஞ்சை பெரிய கோவிலையோ அல்லது மீனாட்சி அம்மன் கோவிலையோ சேத படுத்தாமல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்தில் மட்டுமே செயல்பட்டனர். ஆனால் இதற்க்கு நேர் எதிரான மனப்போக்கில் வடநாட்டவர்கள் இங்கு படையெடுத்து வந்த போது நம்முடைய வரலாற்று அடையாளங்களை அளிக்கும் நோக்கத்திலே செயல்பட்டிருக்கின்றனர். இது முற்றிலும் தவறான செயல் அது இன்று வரைக்கும் தொடர்வது மிகவும் வருத்தமாக உள்ளது.
அடுத்ததாக கலிங்கர் சிற்பங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன இந்த சிற்பங்கள் தமிழ் நாட்டிலிருந்து வடநாட்டிற்கு படையெடுத்து சென்ற போர் வீரர்கள் தன் மன்னரை மகிழ்விக்கும் நோக்கத்தில் அங்குள்ள கோவில்களை இடித்து சிலைகளை திருடி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இது தமிழர்களின் பண்பு அல்ல. இது மிகப்பெரிய தவறு என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
அடுத்தாக அக்காலத்தில் உபயோகப்படுத்திய குத்து வால்கள், ஈட்டிகள், போர் வால்கள் போன்றவற்றை காட்சி படுத்தி இருந்தனர். இது சோழர் கால ஆயுதங்களாக இருக்க கூடும். ஆனால் இது எத்தனை வருட பழமையான ஆயுதங்கள் என்ற விபரங்கள் குறிப்பிடவில்லை.
அடுத்ததாக இந்த அருங்காட்சியகத்தை வானிலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை காண்பிக்கும் பொருட்டு அதன் புகைப்படங்களை வைத்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று கல்வெட்டுகள், சிற்பங்கள் மற்றும் உலோக பொருட்கள் அனைத்தும் தனி தனியாக பிரித்து வைக்காமல் ஒழுங்கற்ற முறையில் வைக்கப்பட்திருந்தன.
அடுத்ததாக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல அறிய பொக்கிஷங்களான சுடுமண்னால் செய்யப்பட்ட யாளி உருவங்கள், சுடுமண் தாங்கி, பழையறை அரண்மனையில் கிடைத்த கண்ணாடி வலையல்கள், கங்கை கொண்ட சோழபுரத்தில் கிடைத்த அலங்கார பொருட்கள், சுடுமண் விளக்குகள் போன்றவை அங்கே காட்சி படுத்தியிருந்தனர்.
இந்த அருங்காட்சியகத்தின் மூலம் பல அறிய தகவல்கள் மற்றும் எனக்கு தெரியாத நான் ஆராய்ச்சி மேற்கொள்ளவேண்டிய பல இடங்களை குறித்து வைத்துள்ளேன். அடுத்த தஞ்சை பயணத்தின் போது இந்த இடங்களுக்கும் சென்று எனது ஆராய்ச்சியை மேற்க்கொள்வேன். இனி பன்னிரண்டாவது பக்கத்தை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

Leave a Comment

Your email address will not be published.

Thanjavur (தஞ்சாவூர்)

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page