நாம் தஞ்சை பயணத்தை பற்றிய பதிவுகளை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இனி பன்னிரெண்டாவது பக்கத்தைப் பற்றி பார்ப்போம். இங்கே கண்ணாடி பேழையில் சுடுமண் விளக்குகள், அலங்கார பானை ஓடுகள், எழும்பினால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. ஒரு நாட்டின் தொன்மை மற்றும் அதன் கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்நாட்டில் அகழாய்வு செய்யக்கூடிய இடத்தில் கிடைக்கின்ற சுடு மண்ணால் செய்யப்பட்ட பானை ஓடுகளின் எச்சங்களை வைத்தே அவை எந்த காலத்தில் செய்யபட்டவை அந்நாட்டின் தொன்மை என்ன என்பதை அறிய முடிகிறது.
ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் அவர்களின் பாரம்பரியத்தையும் மற்றும் நாகரீகத்தையும் அறிய மண்ணோடுகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மண்ணோடுகள் ஏன்? வரலாற்றை அறிவதற்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. பூமியில் எந்த ஒரு பொருளை போட்டாலும் அது சிறிது காலத்தில் மண்ணோடு மண்ணாகி மக்கிப் போய்விடும். ஆனால் சூடு மண்ணால் செய்யப்பட்ட மண்ணோடுகள் எத்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மண்ணோடு மண்ணாக மக்கி போகாத தன்மை கொண்டது. அதனால் தான் இந்த மண் ஓடுகள் நம் முன்னோர்களின் வரலாற்றை அறிவதற்கு பேருதவி செய்கிறது.
இப்பேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தொழிலை செய்த என்னுடைய மூதாதையர்களும் மண்பாண்ட தொழில் செய்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். ஏனென்றால் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு இந்த மண்பாண்டங்களே மிக முக்கிய பங்காற்றுகின்றன.
அடுத்ததாக சோழர்கால ஓவியங்களின் பிரதிகள் இங்கே வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் சற்று பொலிவிழந்து இருந்தாலும் கூட மிக அழகாக தனித்துவமாக இருக்கிறது. இந்த ஓவியங்கள் எல்லோராலும் ஏன் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது என்றால்? இந்த சோழர்களின் ஓவியத்தின் மேல் நாயக்கர்களும், மராட்டியர்களும் அவரவர் ஆட்சி காலத்தில் அவர்களின் ஓவியங்கள் வரையப்பட்டன. ஆனாலும் இந்த ஓவியங்கள் இன்றளவும் நிலைத்து நின்று சோழர்களின் ஓவிய அறிவாற்றலை உலகிற்கு பறைசாற்றுகின்றன. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஓவியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அந்த தமிழ் அறிஞர் யார் என்பதை கண்டுபிடித்து அவருக்கு நன்றி கூற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த போற்றுதலுக்குரிய கலைஞனால் தான் இந்த பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த ஓவியங்களும் அதனை கண்டுபிடித்த இந்த ஓவிய கலைஞனும் நமக்கு பெரும் ஆச்சரியங்கள் தான்.
இந்த ஓவியங்களின் தொடர்ச்சியாக ஆடல் மங்கையர், இசைக் கலைஞர்கள், அலங்கு நாய், காட்டுப்பன்றி, குரங்குகளின் படங்கள் எல்லாம் வரிசையாக வரையப்பட்டுள்ளன. இவற்றை பார்க்கும் பொழுது அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் எந்த மாதிரியான உடை ஆபரணங்கள் அணிந்திருந்தார்கள், காவல் நாய்களை எப்படி பழக்கப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதை இந்த ஓவியங்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன. இந்த ஓவியத்தில் உள்ள அலங்கு நாய்யானது அக்காலத்தில் போர்களில் பயன்படுத்தப்பட்ட குறிப்புகளும் இருக்கின்றன.
அடுத்ததாக இராஜ ராஜ சோழனின் குருவான கரூர் தேவர் புகைப்படம் உள்ளது. இவர் ஒரு முக்காலமும் அறிந்த சித்தர் ஆவார். தஞ்சை பெரிய கோவிலில் சிவலிங்கத்தை வைக்கும் போது சிவலிங்கம் நிலை தடுமாறுகின்ற வேளையில் அவரின் எச்சிலை துப்பி அதை நிலை நிறுத்தினார் என்ற கதையும் உண்டு. முற்றும் துறந்த சிவனடியாரான இவர் திடீரென்று தோன்றி திடீரென்று மறையும் ஆற்றல் கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது. இவரை பற்றிய பல வரலாற்று குறிப்புகளும் நிறைய உள்ளன. இவரின் ஓவியமும் இங்கே வரையப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக குதிரைகள் வரிசையாக நிற்கின்றன. இந்த குதிரை ஓவியங்கள் அவற்றின் உடை அலங்காரங்களை நமக்கு தெரிவிக்கின்றன.
அக்காலத்தில் சோழ மன்னர்களையும் முக்கிய பிரதிநிதிகளையும் பாதுகாத்த வேலைக்கார படைகள் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கார படைகள் பற்றி இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இப்போதுள்ள பிரதமர் மந்திரிகளுக்கு கருப்பு பூனை பாதுகாப்பு படை இருப்பது போல அன்றைய காலகட்டத்தில் இந்த வேலைக்கார படை மன்னர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியுள்ளது. இவர்களை பாண்டியர்கள் ஆபத்து உதவிகள் படை என்று கூறுவார்கள். அவர்களின் புகைப்படமும் இங்கே வைக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்காரப் படைகள் மிக எளிமையான ஆடையை அணிந்துள்ளனர். இடுப்பில் கத்தியும், கையில் குச்சியும், தலையில் தலைப்பாகையும் கோமணமும், கட்டிக்கொண்டு எதிர்பாராத ஆபத்து காலத்தில் சட்டென செயல்படும் வகையில் இவர்கள் உடைகள் அணிந்திருகின்றனர். இவர்கள் நெற்றியில் திருநீர் மற்றும் காதில் கடுக்கன் அணியும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர்.
அடுத்ததாக நடன மாந்தர்களின் அபிநயங்கள் அவர்களின் ஆபரணங்களை காட்டுகின்ற ஓவியங்களும் இருக்கின்றன. ஆனால் நடன மாந்தர்கள் பெரும்பாலும் மேலாடை அணியாமல் மார்பு திறந்த நிலையில் இருக்கின்ற புகைப்படங்களையும் சிலைகளும் மட்டுமே அதிகமாக பார்க்க முடிகிறது. ஆனால் நமது தமிழ் இலக்கியங்களை படிக்கும் பொழுது பெண்கள் மார்பை மறைக்க உடை அணிந்ததாகவே கூறுகின்றது. அவ்வாறு இருக்க ஏன் கோவில் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் மேலாடைகள் இன்றி காட்சிப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அல்லது பிற்காலத்தில் இதன் மேல் வரையப்பட்ட ஆடை அழிந்து விட்டதா என்றும் தெரியவில்லை. இது பற்றி தனியாக ஆராய்ச்சி செய்தால் மட்டுமே இது பற்றிய விவரங்களை பதிவிட முடியும்.
இங்கே மிகப் பழமையான சோழர் கால கற்சிற்பங்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்கள் நிறைய உள்ளன. திருநாகேஸ்வரம் கோவில் கற்சிற்பங்கள், தாராசுரத்தில் உள்ள கொடிப்பெண்களின் சிலைகள் திருபுவனத்தில் உள்ள யானை, சிம்ம யாளி சிற்ப தொகுதி, மற்றும் அழகிய தட்சணாமூர்த்தி சிலையும் இங்கே புகைப்படங்களாக காட்சிபடுத்த பட்டுள்ளன. இந்த திரிபுவனத்தில் சோழர்களைப் பற்றிய தகவல்கள் நிறைய இருக்கின்றன. எனது அடுத்த பயணத்தின் போது இந்த இடங்களுக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறேன்.
இந்த அருங்காட்சியகத்தில் சோழர்களைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகள் நிறைய வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக காண்போம்.
சோழர்களின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய கொப்பத்து பெரும்போர் பற்றிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த கொப்பத்து பெரும் போர் என்பது கி.பி 1068 ஆம் ஆண்டு சோழ மன்னன் முதலாம் ராசாதி ராசன் தன் தம்பி இரண்டாம் ராஜேந்திரன் உடன் சேர்ந்து சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கிருஷ்ணன் ஆற்றங்கரையில் உள்ள கொப்பம் என்ற ஊரில் பெரும் போர் நடைபெற்றது. முதலாம் ராசாதி ராசன் யானையின் மீது அமர்ந்து தன் சேனையை வழி நடத்தி வீரமாக போரிட்டு கொண்டிருந்தபோது சாளுக்கிய வீரர்கள் ராசாதி ராசன் மீதும் அவன் வீற்றிருந்த யானை மீதும் அன்பு மாரி பொழிந்தனர். ராசாதி ராசன் மார்பில் புண்பட்டு யானை மீது அமர்ந்தவாறே உயிர் துறந்தார். இதனைக் கண்ட சோழநாட்டு படைகள் நாற்புரமும் சிதறியோட தொடங்கின. அந்நிலையில் இரண்டாம் ராஜேந்திரன் தன் பட்டத்து யானை மீது போர்க்களம் புகுந்து அஞ்சேல் அஞ்சேல் என அபாய குரல் எழுப்பினான். தன் அண்ணனான ராசாதி ராசனுடன் பல போர்களில் ஈடுபட்டு எதிரி நாட்டினருக்கு தனது வீரத்தை வெளிக்காட்டி கொண்ட முதலாம் ராஜேந்திரன் அப்போரிலேயே மன்னனாக முடி சூட்டிக்கொண்டான். மன்னனை இழந்த சோழநாட்டு படைவீரர்களுக்கு வீர உணர்ச்சியூட்டினான். சோழ நாட்டின் புதிய பேரரசனை கண்ட சோழ படை வீரர்கள் மீண்டும் சாளுக்கியர்களுடன் போர் புரிந்து மாபெரும் வெற்றியை பெற்றனர். இப்போரானது சாளுக்கியர்களுக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது.
அதற்கு அடுத்தபடியாக மன்னர்களின் பெயர்களை கொண்ட ஊர்கள் தற்போது எவ்வாறு பெயர் மருவி உள்ளது என்பதனை விளக்கும் ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. வரலாற்றில் ஊர்களுக்கு மன்னனின் பெயரோ, விருது பெயரோ சூட்டப்பட்டு வழக்கில் இருந்துள்ளது. காலப் போக்கில் சில வழக்கொழிந்தும் சில அதே பெயரிலும் சில திரிந்தும் வழங்கப்படுகிறது.
இங்கே தெலுங்கு சோழர் என்ற தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் களப்பிறர் போன்றோரின் தாக்குதல் காரணமாக சங்க காலத்தை அடுத்து தமிழகத்தில் சோழர் ஆட்சி நிலைக்கவில்லை. ஆனால் சோழர்கள் ஆந்திரா கர்நாடகா பகுதிகளுக்கு சென்று அங்கு ஆட்சிபுரிய தொடங்கினர். அப்படி ஆந்திர பகுதிகளுக்கு சென்று ஆட்சி சோழர்கள் தெலுங்கு சோழர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
இந்த அருங்காட்சியத்தில் கரிகால சோழனது ஆட்சி பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன. கரிகால சோழனது ஆட்சி செங்கோலாட்சியாக அமைந்திருந்ததாகவும், இவனது மேலாண்மையில் பல நாடுகள் இருந்த போதிலும் அங்கெல்லாம் பெரும் தன்மையுடன் நட்புறவையே ஏற்படுத்தி இருந்தார் என்றும், மக்கள் பசி நீக்க உணவளிக்கும் அற்றில் சாலை என்ற ஒரு அன்ன சத்திரத்தை புகார் நகரில் அமைத்திருந்தார்.
காடுகளை வெட்டி விலை நிலங்களாக மாற்றினார். குளங்களை வெட்டி வெள்ள நீரை தேக்கி வைத்து நிலங்களை நீர் வளமுள்ளவையாக மாற்றி நாட்டை செழிக்க செய்திருந்தார்.
இலங்கை மீது மேற்கொண்ட போரில் வெற்றி பெற்று அங்கிருந்து 12000 பேரை சிறை பிடித்து வந்து காவிரியின் இருபுறமும் கரை அமைத்த செய்தியை இலங்கையின் கடல் வழி செய்தி கோவை ஒன்றும் தெலுங்கு சோழர் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன.
ஆதலால் காவிரி ஆற்றின் கறைகளை செப்பனிட்டு உயர்த்தி அமைத்து அதன் ஓடு பாதையை சீரமைத்து நாட்டின் வளத்தையும் பெருமையும் உயர்த்தி இருக்கிறார் கரிகாலன். பருவக்காற்றை பயன்படுத்தி கப்பல் செலுத்தும் முறையை கண்டுபிடித்து செயல் புரிந்தவர்கள் கரிகாலனின் முன்னோர்களேயாவர். அதுவரையிலும் துடுப்புகளால் செலுத்தும் முறையே பின்பற்றப்பட்டு வந்தது. அதனால் கடல் வணிகம் மிகச் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. இதனை எடுத்துகூறும் வகையில் இந்த தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது.
தளிச்சேரி பெண்டுகள் பற்றி குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆடல் பாடல் காலையில் தலைசிறந்து விளங்கிய பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கென்று வீடுகள் கட்டி கொடுத்து கோவில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அவர்களை நிரந்தரமாக பணி அமர்த்தியுள்ளனர். இவர்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்காக சேவை செய்வது கலை நிகழ்ச்சிகள் நடத்துவத்துவது போன்ற பணிகளை செய்துள்ளனர். அக்காலத்தில் மக்கள் மனதில் தளிச்சேரி பெண்களுக்கு நல்ல மரியாதை இருந்துள்ளது.
அடுத்ததாக ராச ராசனிடத்தில் மூலப் படையாக இருந்த படைகள் பற்றிய விவரங்கள் கொடுக்க பட்டிருந்தன. நிகரிலி சோழத் தெரிந்த உடநிலை குதிரைசேவகர் படை, உம்முடைய சோளத் தெரிந்த யானைப்பாகர் படை, ராஜராஜ தெரிந்த வலங்கை வேலைக்காரர் படை இதுபோன்று ராஜராஜ சோழன் நிர்வகித்து வழிநடத்திய பல வேலைக்கார படைகள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்படிருந்தன.
சோழர்களின் போர் கருவிகளான பலவகை வாள்கள் கையுறை கத்திகள் குறுவாள்கள் கதைகள் ஈட்டிகள் வில் அம்புகள் கேடயங்கள் ஆகியவை தஞ்சாவூர் ஆயுத சாலையில் இருப்பதாக அந்த தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதை நாங்கள் அங்கு பார்க்கவில்லை. அடுத்த பயணத்தின் போது இதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்போர் கருவிகள் கலைநயம் வாய்ந்த வடிவமைப்புடனும் குறியீடுகளுடனும் இருப்பதாகவும். இரும்பாலான போர் கருவிகளின் கைப்பிடிகளில் பித்தளை செம்பு தந்தம் கண்ணாடி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு போர் கருவிகள் மேலும் அழகூட்டப்பட்டு போர் கருவிகளும் கலை வேலைப்பாடுகளுடன் அமைந்திருப்பது பழந்தமிழர்களின் கலை உணர்வையும் கலையை ஆதரிக்கும் மனப் பாங்கையும் வெளிப்படுத்துகிறது.
சோழர் கால கல்வெட்டுகளில் மிக முக்கியமான கல்வெட்டான முதலாம் ராஜ ராஜனின் அண்ணனை கொன்றவர்களுக்கு தண்டனை வழங்கியதை கூறும் கல்வெட்டின் பிரதியும், யார் கொன்றார்கள் என்ற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் ராஜராஜ சோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலனை கொலை செய்த சோமன் என்பவனின் இரு தம்பிகளாகிய ரவி தாசன் என்னும் பஞ்சவன் பிரமாதிராஜன். பரமேஸ்வரன் எனும் இருமுடிச் சோழ பிரம்மாதிராஜன் ஆகிய இருவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் இருவரின் சொத்துக்களும் இவர்களின் அனைத்து உறவினர்களின் சொத்துக்களும் பரிமுதல் செய்து அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டுமென அரசரின் நேரடி ஆணை ஊர் சபைக்கு அனுப்பப்பட்டது. இதனை இவ்வூர் சபையார் நிறைவேற்றினார். இக்கல்வெட்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள உடையார் குடி அனந்திகவாம் கோவிலில் உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்ததாக சோழ பாண்டியர் பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழர்கள் பாண்டிய நாட்டை முழுவதும் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் பாண்டியர்கள் தொடர்ந்து அவ்வபோது போர் தொடுத்துக் கொண்டே இருந்தனர். இதனை தவிர்க்க முதலாம் ராஜேந்திரன் தனது இரண்டாவது மகனை பாண்டிய நாட்டின் பிரதிநிதியாக நியமித்தார். பின்னாளில் பாண்டிய நாட்டு மக்கள் மனம் கோனாதிற்க பாண்டியர்களது பட்டமான ஜடாவர்மன் என்ற பட்டத்தை கொடுத்து சோழ பாண்டியன் பெயரில் ஆட்சி புரிய செய்தார்.
சோழர்கள் அடிக்கடி போர்களில் ஈடுபட்டனர். போர்கள் நடந்து கொண்டே இருந்தால் தான் படைவீரர்கள் சுறுசுறுப்புடன் வீரத்துடனும் இருப்பார்கள் என்று போரிடுவதையும், போரில்லா காலங்களில் ஏரி குளங்கள் வெட்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். சோழர்கள் காலத்தில் போயிட்ட மன்னர்களைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தன.
அடுத்ததாக பூம்புகாரில் உள்ள சங்ககாலச் சோழர் கட்டிடங்லான உரை கிணற்று புறச்சேரி, படகுத்துறை, பௌத்த விகாரை, மற்றும் கடலுக்கடியில் உள்ள கட்டிடங்கள் போன்ற இடங்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைப் பற்றிய அறிவிப்பு பலகையும் அங்கே இருக்கிறது. அடுத்த பயணத்தின் போது இந்த இடங்களை பற்றி ஆராய வேண்டும்.
அடுத்ததாக கொங்கு சோழர்கள் பற்றிய தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதித்த கரிகாலன் கொங்கு நாட்டை கைப்பற்றிய பின் சோழப் பேரரசின் கீழ் அந்நாட்டை ஆளப் பிரதிநிதிகளை அமர்த்தினார். இவர்கள் நாளடைவில் தனி வம்சத்தினர் ஆயினர். இவர்கள் பின்னாளில் கொங்கு சோழர்கள் என அழைக்கப்பட்டனர்.
இந்த பக்கத்தில் மிக முக்கியமான ஓவியம் என்றால் அது ராஜராஜ சோழனின் ஓவியம் தான். அனைவராலும் பார்த்து வியக்கத்தக்க எண்ணற்ற பல காரியங்களைச் செய்த ராஜராஜ சோழன் எப்படிபட்ட உருவ அமைப்பை கொண்டிருந்தார், எப்படியான உடை ஆபரணங்கள் அணிந்திருந்தார் என்பதை காட்டும் ஓவியத்தின் இந்த அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகமானது சோழர்களின் வீரத்தையும், முற்போக்கான சிந்தனைகளையும் எடுத்துரைக்கிறது. இந்த தஞ்சை பயணத்தின் கடைசி பதிவான பதிமூன்றாவது பக்கத்தைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
Pages:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13