நாம் தற்போது தஞ்சை பயணத்தின் இறுதி பதிவான பதிமூன்றாவது பக்கத்தை பற்றி பார்க்க இருக்கிறோம். இந்தப் பக்கத்தில் இருக்கின்ற ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்கள் பற்றிய விவரங்களை விரிவாக காண்போம்.
இந்த பக்கத்தில் சுந்தரச் தடுத்தாட் கொண்ட வரலாற்றின் புராண கதை ஓவியத்தின் பிரதி வைக்கப்பட்டுள்ளது. நம் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்ற அளவிற்கு புராண கதைகள் பற்றிய ஆர்வம் எனக்கு சற்று குறைவே. அக்காலத்தில் சுந்தரர் தன் ஆன்மீக பலத்தினால் கடவுளிடம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாக மட்டுமே அவரை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். அக்காலத்தில் வாழ்ந்த அரசவைப் பெண்கள் கழுத்து மற்றும் கொண்டை நிறைய நகை ஆபரணங்கள் அணிந்திருக்க கூடிய ஓவியத்தின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை இராஜ ராஜீஸ்வரமுடையார் கோவிலில் ராஜராஜ சோழன் அவனது மூன்று தேவியவர்களுடன் சேர்ந்து சுவாமி தரிசனம் செய்கின்றவாறு ஒரு ஓவியத்தின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் ராஜராஜ சோழன் பெரிய மீசை மற்றும் தாடியுடன் மிக கம்பீரமாக இருக்கிறார். அவரது தேவியர்கள் மூவரும் வெவ்வேறு வண்ண ஆடைகளை அணிந்திருப்பது போலவும், இவ்மூவரும் வெவ்வேறு நிற அமைப்பில் இருப்பது போலவும் அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் முதலில் உள்ளவர் வெள்ளை நிறமாகவும், இரண்டாமவர் மாநிறமாகவும், மூன்றாமவர் கருமை நிறமாகவும் இருப்பது போன்று இந்த ஓவியத்தில் தனித்துவமாக காட்டப்பட்டுள்ளது.
இந்த ஓவியமானது தஞ்சை பெரிய கோவிலின் பாதாள அறையில் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் தற்போது அங்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், அதிகார பலம் உள்ளவர்களின் துணையுடன் மட்டுமே அதனை காண முடியும் என்றும் கூறுகின்றனர். ஆகையால் அடுத்த பயணத்தில் இந்த ஓவியங்களை நேரில் சென்று பார்க்க முயற்சி எடுத்து வருகிறேன்.
அடுத்ததாக இதே கோவிலில் ராஜராஜன் தன் குருவான கரூர் தேவரிடம் யோசனை கேட்பது போன்ற ஒரு ஓவியத்தின் பிரதி இங்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஓவியத்தில் இருக்கக்கூடியவர்கள் இராஜராஜனும், கரூர் தேவரும் தான் என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு கல்வெட்டு ஆதாரமும் இல்லை. இது ஒரு யூகமாகவே இன்று வரை பார்க்கப்படுகிறது.
அதற்கு அடுத்ததாக வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் பழந்தமிழர்களின் இசைக்கருவிகளின் விவரங்கள் மிகத் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ் வரிசையில் பல்வேறு இசைகளையும் வெளிப்படுத்தும் கருவிகளாக நரம்பிசைக் கருவிகள், காற்றிசைக் கருவிகள், உலோகத்தாலான கஞ்சக் கருவிகள் மற்றும் தோற்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கே உள்ள மிக முக்கியமான குறிப்புகளில் ஒன்றான தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டிய சிற்பிகள் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவிலை தோற்றுவித்த சிற்பிகளின் பெயர்கள் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. சிற்பிகளின் தலைவனுக்கு தச்சாசார்யன் என்று பெயர்.
வீரசோழன் குஞ்சரமல்லனான இராஜராஜ பெருந்தட்சன் என்பவன் இக்கோவிலில் தச்சாசார்யனாகக் குறிக்கப்படுகிறான். இவனுக்கு உதவியாக குணவன் மதுராந்தகனாக நித்த வினோதப் பெருந்தட்சன் என்பவனும், இலத்திச் சடையனான கண்டராதித்த பெருந்தச்சன் என்பவனும், பணிபுரிந்து இருக்கின்றனர்.
தற்காலத்தில் கோயில்களை நிர்மாணிக்கும் சிற்பிகளை ஸ்தபதி என்றழைக்கிறோம். அவர்கள் அக்காலத்தில் பெருந்தட்சன் என்று பட்டம் பெற்று சிறந்திருந்தனர் என பல கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம். ஆதலின் இராஜராஜனது பெயர் பூண்டு இராஜராஜ பெருந்தச்சன் என்று அழைக்கப்பட்ட தச்சாசார்யனே வியத்தகும் தஞ்சை பெருங் கோவிலை தோற்றுவித்த தமிழகத்தின் தலையாய சிற்பி என்பதில் ஐயமில்லை என்ற குறிப்புகள் அடங்கிய தகவல் பலகை அங்கே வைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக சிவலிங்கம், நந்தி தவ்வை, போன்ற பழங்கால சிற்பங்கள் இருக்கின்றன. இந்த சிற்பங்களை நான் மற்ற கோவில்களில் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் இந்த சிலைகளின் முக அமைப்பை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பிகளால் செதுக்கப்பட்டது போல தெரியவில்லை. உதாரணமாக தவ்வை, திருமால், நடன மங்கையர் போன்ற சிலைகள் சற்று வேறுபட்டு காணப்படுகிறது. ஒருவேளை இது வடநாட்டு படை எடுப்பின் போது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட சிலைகளாக இருக்கலாம். அதன் தொடர்ச்சியாக லிங்கத்தின் உள்ளேயே ஒரு லிங்கேஸ்வரனின் சிலையை செதுக்கியிருந்தனர். அதனைப் பார்க்கும் போது மிகவும் புதுமையானதாக இருந்தது.
இங்குள்ள பல கல்வெட்டுகள் கலிங்கத்து சிற்பங்களாக இருக்கின்றன. நான் முன்பு கூறியபடி சோழ தளபதிகள் வடநாட்டிற்கு படையெடுத்து சென்று திரும்பும் போது தன் மன்னனை மகிழ்விக்கும் நோக்கத்தில் அங்குள்ள கோவில்களை சேதப்படுத்தியும், சிற்பங்களை பெயர்த்தெடுத்தும் கொண்டு வந்ததுள்ளனர். இது மிகப்பெரிய தவறான செயல் . இச்செயலானது தஞ்சை சிற்பிகளின் கோபத்தையும், ஆத்திரத்தையும் சாபத்தையும் சோழர்களுக்கு பெற்று தந்திருக்கும் என்பது என்னுடைய யூகமாக உள்ளது. அதனால் தான் சோழர்கள் இருந்த இடம் தெரியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த அருங்காட்சியகத்தில் சாளுக்கிய மன்னர்கள் வணங்கக்கூடிய மகாவீரர் சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த மகாவீரர் வழிபாடு சாளுக்கியர் காலகட்டத்தில் தான் இருந்தது. இச்சிலையும் சோழர்களின் மேல சாளுக்கிய படையெடுப்பின் போது கொண்டு வரப்பட்டதாக தான் இருக்க வேண்டும்.
அடுத்ததாக கொங்கு சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆதித்ய கரிகாலன் கொங்கு நாட்டை கைப்பற்றிய பின் அந்நாட்டை நிர்வகிக்க பல பிரதிநிகளை அமர்த்தினான். பின்னாளில் இது தனி வம்சமாக உருவெடுத்தது. அதனை பற்றிய விவரங்களும் இந்த அறிவிப்பு பலகையில் இடம்பெற்றிருந்தது.
கலிங்கநாட்டு தெய்வமாகிய பைரவர் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பைரவி பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இது ஒரு பெண் தெய்வமாகும். இந்த சிற்பத்தின் பிரதி மட்டும் தான் உள்ளது. இந்த சிலை எங்கே இருக்கிறது என்பது பற்றி குறிப்பிடவில்லை. இது கங்கை கொண்ட சோழபுரதில் கங்கை படைகள் வெற்றி பெற்று கொண்டுவந்த சிலைகள் அனைத்தும் அங்கு தான் இருந்ததாகவும். இதனை கங்கை கொண்ட சோழபுர எல்லைக்குள் கொண்டு வரக்கூடாது என்று நித்த வினோத தச்சர் என்ற சிற்பி அதனை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் அதனால் தான் அச்சிலையை வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதகவும், தற்பொழுது அந்த சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் அங்குள்ளவர்கள் கூறினார்கள். நாங்கள் சென்ற அன்றைக்கு பொது விடுமுறை என்பதால் அந்த சிலையை எங்களால் பார்க்க முடியவில்லை.
இங்கே பலவித சிலைகள் மற்றும் சிற்பங்களின் பிரதிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சிலைகள் எங்கு உள்ளது என்பது பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை.
அதேசமயம் இடிபாடுகளில் கிடைத்த பைரவர், துவார பாலகர் போன்ற சிற்பங்கள் வட நாட்டு படையெடுப்பின் போது கிடைத்திருக்கலாம். இது பற்றிய எந்த ஒரு விவரங்களும் தெளிவாக குறிப்பிட்டவில்லை.
இங்கே பல இரும்பாலான காற்ச்சிலம்புகளும், கட்டிட இடிப்பாடுகளில் கிடைத்த அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களையும், தனித்தனியா கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளன.
இராஜ ராஜ சோழன் மணிமண்டபத்தின் முன் மாதிரி வடிவத்தை செய்து வைத்திருக்கிறார்கள். இந்த மணி மண்டபமானது இராஜராஜ சோழனது பள்ளி படை கோவில் போன்ற அமைப்பில் மிக அழகாக வடிவமைத்திருக்கின்றனர்.
இந்த அருங்காட்ச்சியகத்தின் வெளிப்புறத்தில் மிக கம்பீரமாக தங்க முலாம் பூசப்பட்ட குதிரையில் இராஜராஜ சோழன் சீறிப்பாய்ந்து செல்வது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்து இருக்கும் சிலைகளை நிறுவும் விடயத்தில் ஒரு மரபு இருக்கிறது என்று நம்மப்படுகிறது. குதிரையின் நான்கு கால்களும் கீழ் ஊன்றி இருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணம் அடைந்தவர் என்றும், குதிரையின் ஒரு கால் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் காயமடைந்து, பிறகு இறந்தவர் என்றும், இரு முன்னங்கால்களையும் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரிலையே வீர மரணம் அடைந்தவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனை உறுதிப்படுத்தும் சான்றுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
இத்துடன் தஞ்சை பெருவுடையார் கோவில் ஆராய்ச்சி பற்றிய பயணம் இனிதே நிறைவடைந்தது. இனி கரிகால சோழன் கட்டிய கல்லணை பற்றிய ஆராய்ச்சி பதிவுகளை இனிவரும் பதிவுகளில் தொடர்ந்து பயணிப்போம்.
Pages:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13