தஞ்சை பெரிய கோவில் தொடர்பான பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ஐந்தாவது பக்கத்தின் ஆய்வு முடிவுகளை பற்றி தற்பொழுது காண்போம். இந்த பக்கத்தை பொறுத்தவரையில் நீங்கள் பார்த்து ரசிக்கும் வண்ணம் கோவிலை சுற்றி பல கோணங்களில் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருக்கின்றேன்.
நாம் இதற்க்கு முன்னதாக பார்த்த சோழர் கால கோவில்களில் இருப்பது போன்றே தஞ்சை பெரிய கோவிலிலும் கோபுரத்தின் அடித்தளத்தின் மூலைகளில் வாஸ்து ஆமை தலைகள் அமைக்கபட்டிருக்கின்றன.
நான் ஏற்கனவே கூறியது போல என்னுடைய சகோதரன் அவர்களின் மூலம் நான் தெரிந்து கொண்ட தகவலின் படி ஆமைகள் கட்டிட வாஸ்து சாஸ்திரதில் தவிர்க்க முடியாத மிக முக்கியமான ஒரு நடைமுறையாக இருந்து வந்துள்ளது. இந்த ஆமை வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவத்தை இந்த தஞ்சை பெரியகோவில் மூலம் மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த ஆமை சிற்பங்களுக்கு அருகில் தொடர்ச்சியாக பல சிம்மயாழி சிற்பங்களை காண முடிகிறது. அந்த ஒவ்வொரு சிம்மயாழி சிற்பங்களிலும் தேவர்கள் அமர்ந்திருப்பது போன்று மிக நேர்த்தியாக நுனுக்கமாக செதுக்கப்பட்டிருந்தது. அந்த சிம்மயாழி சிலைகளில் அமர்ந்துள்ள ஒவ்வொரு தேவர் சிற்பங்களையும் பார்க்கும் பொழுது ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக அமைப்புகளை கொண்டிருந்தது. அதில் உள்ள சிற்பங்களில் ஒருவர் கையில் வாள் மற்றும் கேடையத்துடனும், மற்றொருவர் தன் இரு கரங்களை கூப்பி வணங்குவது போன்றும் வெவ்வேறு வகையான அமைப்போடு இருபதிற்கும் மேற்பட்ட சிற்பங்கள் அங்கே வரிசையாக செதுக்க பட்டிருந்தன.
இந்த தஞ்சை பெரிய கோவிலை பொறுத்தவரையில் இது போன்ற ஆயிரக்கணக்கான சிற்பங்களும், சிலைகளும் இங்கே இருக்கின்றன. இந்த சிற்பங்களையெல்லாம் எப்படி செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? இந்த சிற்பங்களின் முக்கியத்துவம் தான் என்ன? என்பது அதை செய்த சிற்பிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த சிற்பங்கள் அனைத்தும் இவற்றை செதுக்கிய சிற்பிகளின் சிற்பக்கலைக்கும், அறிவியலிற்கும் மிக சிறந்த எடுத்துக்காட்டாய் இன்றளவும் சிறந்து விளங்குகின்றது.
இந்த கோவிலை எவ்வாறு கட்டினார்கள், இங்குள்ள சிலைகள் மற்றும் சிற்பங்களை எவ்வாறு வடிவமைத்தார்கள் என்பது பற்றிய செய்திகள் இக்கோவில் கல்வெட்டுகளில் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அன்று அந்த கல்வெட்டை நான் பார்க்கவில்லை. அடுத்த முறை என் மானசீக குருவான வரலாற்று ஆசிரியர் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் வழிகாட்டளோடு இக்கோவில் கல்வெட்டு சம்பந்தமான அணைத்து தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் தூர்ரதிஷ்டவசமாக அவர் தற்போது உயிருடன் இல்லை. அடுத்த முறை ஒரு நல்ல வரலாற்று ஆசிரியரின் உதவியோடு அவற்றை பற்றி தெரிந்து கொண்டு உங்களுக்கு தெரியப்படுத்துவேன்.
இக்கோவிலில் மிக பெரிய அளவிலான சிம்ம யாழிகளில் அமர்ந்திருப்பது போன்ற தேவர்சிலைகள் உள்ளன. இந்த கோவில்களில் சிம்மயாழிகளின் சிலைகளை பார்க்கும் பொழுது சிம்மயாழிகள் சோழர்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு மிருகமா? அல்லது சிங்கத்தை தான் அன்றைய காலகட்டத்தில் யாழி என்று அழைத்தார்களா? என்ற கேள்வி எண்ணுள் எழுகிறது. பல்வேறு வகையான யாழிகள் இருக்கின்றன. ஆனால் இக்கோவிலை பொறுத்தவரையில் சிம்மயாழிகளையே அதிகமாக காண முடிகிறது. இதன் உடலமைப்பு சிங்கம் போல் தோற்றமளித்தாலும் அதன் பற்கள், நாக்கு போன்றவை வேறொரு மாதிரி தோற்றமளிக்கின்றது. இதைப் பற்றி நுட்பமாக ஆராய்ந்தால் மட்டுமே தெளிவான விபரங்கள் கிடைக்கும்.
நான் ஏற்கனவே கூறியபடி சோழர்கள் மிகுந்த சிவ பக்தர்கள் ஆதலால் கோவில் முழுக்க பல சிவலிங்கங்களை பார்க்க முடிகிறது. கோவில் சுவரின் ஒரு பகுதியில் நான்கு கைகளுடன் கூடிய ஒரு பெண் தெய்வ சிலையானது செதுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட தக்க விடயம் என்னவென்றால் விஷ்ணு பகவானிற்கு இருப்பது போன்று அதன் வலது கையில் சக்கரமும் , இடது கையில் சங்கும், மற்றுமொரு இடது கையை இடையில் வைத்தும் எருமை தலைமேல் நின்று கொண்டு தன் வலது கையால் ஆசீர்வதித்தபடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை போன்று சுவரின் பல இடங்களில் வில் வாலுடன் தேவர்களின் பல சிலைகளை பார்க்க முடிகிறது. இது அன்றைய கால போர் வீரர்களின் சிலைகளாக இருக்க கூடும் என்று தோன்றுகிறது. இங்குள்ள ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு அர்த்தமும் உள்ளது. இதனைப் பற்றிய அனைத்து விபரங்களையும் ஒரு நல்ல வழிகாட்டியின் துணையின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
அடுத்தபடியாக இக்கோவிலில் ஒரு பெரிய தொட்டி இருப்பதை கண்டேன். அதை அருகில் சென்று பார்க்கும் பொழுது கோவில் கருவறையில் கடவுளிற்க்கு அபிஷேகம் செய்கின்ற தண்ணீர் வடிகால் மூலம் அத்தொட்டியில் விழுவதற்காக அமைக்கபட்டிருந்தது. அந்த தொட்டிக்கு அபிஷேக தண்ணீரை கடத்துகின்ற வடிகாலை ஒரு பூதம் தலையில் தாங்குவது போல் நுட்பமாக மிக நேர்தியாக வடிவமைக்கபட்டுள்ளது. இது அவர்களின் கலை வண்ணத்தை நமக்கு உணர்த்துகிறது.
இக்கோவிலில் பஞ்ச பூதங்களான வருண பகவான், வாயு பகவான் சிலைகள் மிகுந்த கலை செய்யப்பட்டுள்ளன. அவற்றிற்கென்று தனி சன்னிதியும் அமைத்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றைய காலகட்டத்திற்கும் சவால் விடுகின்ற வகையில் நவீன இயந்திரங்கள் இல்லாத அன்றைய கால கட்டத்தில் எவ்வாறு இந்த அளவிற்கு மிக நுனுக்கமாக செய்ய முடிந்தது என்பதை நினைக்கும் போது உடம்பு சிலிர்க்கிறது.
கோவிலில் உள்ள கற்தூண்களை பொறுத்தவரையில் அழகு கொட்டி கிடக்கின்றது. அதில் அலங்கார வளைவுகளால், சிற்பங்களால், அல்லது கல்வெட்டுகாளால் கோவிலின் ஒவ்வொரு தூண்களும் வெற்றிடமில்லாமல் குடை வடிவம் வட்ட வடிவம் போன்று முப்ரிமான தோற்றதுடன் வடிவமைத்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
கோவிலின் உள்ளிருந்து வெளிவரும் படிக்கட்டுள் கூட பார்த்து பார்த்து ரசிக்கும் வண்ணம் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுக்களின் இரண்டு புறமும் யானை கோபத்தோடு பிளிறிக்கொண்டு ஒருவனை தன் தும்பிக்கையால் தூக்கி கொண்டு ஓடுவது போல தத்ரூபமாக செதுக்கி இருக்கிறார்கள்.
தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் மற்றுமொரு தனி சன்னிதி உள்ளது. அதன் கருவறையில் இருந்து வெளி வரும் தண்ணீரானது ஒரு யாழியின் வாயிலிருந்து வெளிவந்து தொட்டியில் விழுவது போல அமைக்க பட்டுள்ளது. அந்த தொட்டியை வடிவமைத்த சிற்பியின் கற்பனை திறனை என்னவென்று வர்ணிப்பது. அந்த தொட்டியை நான்கு யாழிகள் தாங்கி சுமப்பது போன்றும், அத்தொட்டியில் நடன மாந்தர்களின் நடன அசைவுகளையும் மிக நேர்த்தியாக செதுக்கியுள்ளனர்.