Thanjavur (தஞ்சாவூர்)

நாம் இதுவரை தஞ்சை அரண்மனை பற்றிய பதிவுகளை பார்த்தோம். இனி ஒன்பதாவது மற்றும் பத்தாவது பக்கங்களில் தஞ்சை அரண்மனையினுள் அமைந்துள்ள ஒரு சிறிய அருங்காட்சியகத்தை பற்றியும், ராஜராஜ சோழனின் அருங்காட்சியகத்தை பற்றியும் பார்க்க இருக்கிறோம்.
இந்த அரண்மனையில் பல்வேறு நாடுகளின் பண்டைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரையிலுள்ள ரூபாய் நோட்டுகள் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக அரண்மனைகளில் பயன்படுத்திய கண்ணாடி, சீப்பு, குவளைகள், தேநீர் கோப்பைகள், அழகு பொம்மைகள், குடம், மரப்பெட்டி, சமையல் பாத்திரங்கள், பூஜை பொருட்கள், மற்றும் அக்காலத்தில் வரைந்த ஓவியங்கள், போன்றவற்றையும் மிக அழகாக கண்ணாடி பேழைக்குள் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
அதன் அருகில் ஒரு வித்தியாசமான ஆள் உயரத்திற்கு இருக்கக்கூடிய மாலை ஒன்று இருந்தது. அது ஒரு பூக்கள் கோர்க்கப்பட்ட மாலை அல்ல. அந்த மாலை முழுவதிலும் வட்ட வடிவத்தில் வெவ்வேறு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த மாலை கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு இருந்தது.
அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வீச்சு வால், மான் கொம்பு, சிறிய அளவிலான குத்து ஈட்டி, கத்தரிக்கோல், போன்ற ஆயுதங்கள் சிறிதும் பெரிதுமாக ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருத்தன. இவை அனைத்தும் மராத்திய அரசர் முதலாம் சரபோஜி மன்னரின் காலத்தவையாகும்.
பல எண்ணற்ற தகவல்களை தன்னுள் வைத்திருக்கக்கூடிய ஒரு அருங்காட்சியகமானது அதனை காண வரும் மக்களை கண்கவரும் வகையில் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த அருங்காட்சியகத்தை பொறுத்தவரையில் நான் முன்பே கூறியபடி இங்கு வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அலங்காரப் பொருட்கள் ஓவியங்கள் போன்றவற்றை தனித்தனியாக பிரித்து காட்சிப்படுத்தாமல் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரே வரிசையில் சிறிய மற்றும் பெரிய ஆயுதங்களை தனித்தனியாக பிரித்து காட்சிப்படுத்த வேண்டும். ஏனென்றால் அப்பொழுதுதான் அதனை காண வரும் மக்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் நம் முன்னோர்கள் எந்த மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்றும், ஒவ்வொன்றிற்கும் உள்ள வித்தியாசங்களும், அது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற புரிதலும், அதன் பெயர்களும் தெரியவரும். இதே போன்று அவர்கள் பயன்படுத்திய அலங்காரப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களையும் தனித்தனியாக வைக்க வேண்டும். ஆனால் இந்த அருங்காட்சியகம் ஒரு ஒழுங்கற்ற முறையிலேயே இருந்தது.
இந்த தஞ்சை அரண்மனையின் மேல் மணி கோபுரம் ஒன்று உள்ளது. ஆனால் அதன் மேல் ஏறிச் சென்று பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால் அதனை புகைப்படம் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அரண்மனையின் வெளியே கையில் அரிவாளோடு நெற்கதிரை சுமந்த நிலையில் ஓர் அழகிய உழவர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதன் புகைப்படத்தையும் தஞ்சை அரண்மனை வெளி தோற்றத்தின் புகைப்படத்தையும் இந்த பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.
அடுத்ததாக சோழர்களின் அருங்காட்சியகத்தை தேடி பயணம் மேற்கொண்டோம். அந்த இடத்திற்குச் செல்லும் வழியில் போக்குவரத்து அதிகமாக இருந்தது. அதன் அருகில் சென்று பார்க்கும் பொழுது அது ஒரு இளைப்பாறும் மடம் போல இருந்தது. அங்குள்ளவர்கள் அதில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நாங்கள் அந்த இடத்தை இரண்டு மூன்று முறை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பிச் செல்லலாம் என்று நினைக்கும் போது ஒருவரிடம் ராஜராஜ சோழனின் மணிமண்டபம் எங்கு உள்ளது என்று கேட்டோம் கேட்டோம். அவர் அதோ அங்குள்ளது என்று கைகாட்டும் திசையில் பார்க்கும் பொழுது ஒரு தங்கம் மூலம் பூசப்பட்ட குதிரையில் ராஜராஜ சோழன் செல்வது போல் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ராஜ ராஜ சோழனின் மணிமண்டபத்தின் அருகே உள்ள சுரங்கபாதையில் அருங்காட்சியகத்தை அமைத்திருந்தனர். ஒரு அருங்காட்சியமானது அனைவரும் எளிதில் கண்டுகொள்ளும் வகையில் அமைக்கப்பட வேண்டும். அருங்காட்சியகம் அமைப்பதற்கு அங்கே எவ்வளவோ இடம் இருந்தும் ஏன் இவ்வாறு அமைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அந்த அரண்மனையின் உள்ளே நுழைந்து பார்க்கும் பொழுது சோழர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் பல தகவல் பலகைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. உதாரணத்திற்கு சோழ மன்னர்களின் தலைநகரங்கள் என்ற தலைப்பில் ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் எந்தெந்த கால கட்டத்தில் சோழ அரசர்கள் எந்தெந்த ஊர்களை தலைநகரங்களாக கொண்டிருந்தனர் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சங்க காலத்திற்கு முன்பு வாழ்ந்த மனுநீதி சோழன் திருவாரூரை தலைநகரமாக கொண்டு வழங்கினார் என்றும், சங்க கால சோழர்கள் பூம்புகார் மற்றும் உறையுரையும், பிற்காலத் தோழர்கள் தஞ்சாவூரையும், ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தையும், கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் கிபி 12ம் நூற்றாண்டு வரை தாரசுராம் மற்றும் பழையாறையில் உள்ள சோழ இளவரசர்கள் முடி சூடும் அரண்மனை இருந்த இடம் இரண்டாம் நிலை தலைநகராகவும், விளங்கியது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.
அடுத்ததாக சங்ககால சோழர்கள் யார்? அவர்கள் ஆட்சி காலம் என்ன? பிற்கால சோழர்கள் எப்படி வந்தார்கள் என்ற குடி வழி பற்றிய தகவல்கள் வைக்கப்பட்டிருந்தது. அதில் விசயாலயன், முதலாம் ஆதித்தன் முதலாம் பராந்தகன் இவர்களுக்கு பின்னால் சோழர்கள் எவ்வாறு விரிவடைந்தனர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு அடுத்தபடியாக முதலாம் ராஜ ராஜ சோழனின் பிறப்பு பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் ராஜராஜ சோழனின் தாய் வானவன்மாதேவி, தந்தை சுந்தர சோழன், பிறந்த மாதம் ஐப்பசி சதயம், முடி சூடிய 25 /6 /985, அவரின் ஆட்சி காலம், அவரின் மக்கள் (முதலாம் ராஜேந்திரன், ஆளவந்தான், மாதேவடிகள், குந்தவை) அவரின் சகோதரி குந்தவை பிராட்டியார், சகோதரன் ஆதித்த கரிகாலன், மற்றும் ராஜராஜ சோழனின் பதினோரு தேவியர்கள் பெயர்களும், ராஜராஜ சோழனின் சிறப்புப் பெயர்களும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த அருங்காட்சியகத்தில் ராஜராஜ சோழன் மெய்கீர்த்தி ஒன்று உள்ளது. அதில் திருமகன் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி வேங்கை நாடும் கங்க பாடியும் நுளம்ப பாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில் வளரூழியுள் எல்லா யாண்டும் தொழுகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோராஜகேசரிவர்மரான ஸ்ரீ ராஜராஜ தேவருக்கு யாண்டு. என்று ராஜராஜ சோழனை புகழ்ந்து போற்றக்கூடிய மெய்க்கீர்த்தியும் இடம்பெற்றிருந்தது.
 
அடுத்ததாக ராஜராஜ சோழனின் ஆட்சி முறை பற்றிய வரைபடம் வைக்கப்பட்டுள்ளது. அதில் தற்காலத்தில் இருப்பது போல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அரசர் அவருக்குக் கீழ் பேராட்சி மற்றும் ஊராட்சி ஊராட்சியின் கீழ் மக்கள் சபை என்று வகுத்து மிக திறம்பட ஆட்சி புரிந்திருக்கிறார். அதனால்தான் சோழர்களின் காலம் பொற்காலம் என்கிறோம்.
சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் குடவோலை முறை கொண்டுவரப்பட்டது. ஆங்கிலேயர்களால் சமீபத்தில் இந்த முறையானது கிட்டத்தட்ட1200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது. கிபி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் மாறஞ்சடையனின் மானூர்க் கல்வெட்டு முதன் முதலில் தேர்தல் பற்றிய செய்தியை தருகின்றது.
இதனைத் தொடர்ந்து சோழர் காலத்திய உத்தரமேரூர் கல்வெட்டும் திருநின்றவூர் மற்றும் சேய்ஞ்ஞலூர்க் கல்வெட்டுகளும் தேர்தல் பற்றிய விரிவான செய்திகளை அளிக்கின்றன. ஊர் பொது மன்றத்தில் அதிகாரிகளும் பொறுப்பாளர்களும் அமர்ந்திருக்க மக்கள் முன்பு தேர்தல் நடைபெற்றிருக்கிறது.
தகுதி உடைய நபர்களின் பெயர்களை சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட பனை ஓலைகளில் எழுதிக் குடத்தில் இடுவர். பின்னர் இரவு பகல் இன்னது என்று அறியாத ஐந்து வயது பாலகனை அழைத்து அக்குடத்து ஓலைகளுள் ஒவ்வொன்றாக எடுக்கச் செய்வர்.
அவ்வாறு எடுக்கப்பட்ட ஓலைகளை தேர்தல் பொறுப்பாளர் தம் கைகளை அகல விரித்து பெற்று அதில் எழுதப்பட்ட பெயர்களை மக்களுக்கு அறிவிப்பார். இம்முறைக்கு குடவோலை முறை என்று பெயர். இந்த முறையானது சோழர்களின் ஆட்சி காலத்தில் மிகச் சிறப்பாக விளங்கியது.

முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சி பரப்பு பற்றிய விவரங்களும் உலக வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகின்றன. அதில் அவர் கிட்டத்தட்ட தென்னாடு முழுவதும் இலங்கையில் பாதியும் மற்றும் கலிங்கத்தை தாண்டியும் அவர் ஆட்சி புரிந்ததை இந்த வரைபடத்தில் காட்டியுள்ளனர். இதில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சிப் பரப்பை பார்க்கும் போது மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் அவர் ஆண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் இந்த உலக வரைபடத்தில் விபரமாக காட்டியுள்ளார்கள்.

சோழர் காலக் கட்டத்தில் என்னென்னவற்றிற்கு வரிகள் விதித்து வரி வசூல் செய்தார்கள் என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர்கள் காலத்திய அணிகலன்கள் என்ன என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு திருப்பட்டம், பொற்பூ, திறன் மணிவடம் இதுபோன்ற நிறைய அணிகலன்களின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனைப் பற்றி விரிவாக படித்தால் தான் தெரிய வரும்.

 
இந்த பக்கத்தின் இறுதியில் சோழராட்சியில் புகழ்பெற்ற இரு குந்தவையர்கள் என்ற ஒரு தகவல் பலகை உள்ளது. அதில் இந்த இருவரை பற்றியும் மிகத் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் ராஜராஜ சோழனின் தமக்கை ஆவார். இவர் ஆட்சி காலத்தில் நோயாளிகளை கவனிப்பதற்கு மருத்துவமனைகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். மற்றொருவர் ராஜேந்திர சோழனின் தங்கை இவரின் கணவர் வேங்கி நாட்டு மன்னன் சந்திரவர்மனின் தம்பி விமலாதித்தன் ஆவார். இவ்விருவர் பற்றியும் அதில் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இறுதியாக உள்ள தகவல் பலகையில் முதலாம் ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி இடம்பெற்றுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் சோழர்கள் பற்றி பல்கலைகழகங்களில் மாணவர்கள் செய்த பல ஆராய்ச்சி புத்தகங்கள் இங்கே மலிவான விலையில் எனக்கு கிடைத்தன. அதை பெரும் பாக்கியம் என்றே நினைக்கிறேன். இவையெல்லாம் அங்கே தூசியடைந்து கிடந்தன. அவற்றை அங்கே இருந்த பொறுப்பாளர் எங்களுக்கு எடுத்து காட்டினார். பல புத்தகங்களை இந்த விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை அங்கிருந்து அள்ளிக் கொண்டுவந்தேன். இவை எனக்கு கிடைக்கும் என்று நான் எண்ணி பார்க்கவில்லை. பால குமாரன் சொன்னது போல நாம் எதை நோக்கி செல்கிறோமோ அது சம்பந்தமான ஒன்று தற்செயலாக நம்மை தேடி வரும் என்பார். அது போல இதுவும் நடந்தேரியது. அலமாரியில் பூட்டி வைக்கப்பட்ட புத்தகங்கள் அது பற்றிய அருமை தெரியாதவர்கள் அதை எனக்கு எடுத்து காட்டினர். மிகவும் விலை மலிவாக 50 ருபாய் விலைக்கு நிறைய புத்தகங்கள் எனக்கு கிடைத்தன. எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது அந்த புத்தகங்கள் பற்றிய விபரங்களை இதே இணையதளத்தில் பதிவிடுவேன்.
இந்த அருங்காட்சியகமானது சோழர்கள் பற்றிய எனது ஆராய்ச்சி தேடலில் மிக முக்கியமான பல விரிவான பயனுள்ள தகவல்களையும், மன நிறைவையும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது

Leave a Comment

Your email address will not be published.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page